லண்டன்: பிரபல மேனேஜ்மென்ட் கன்சல்டிங் நிறுவனமான மெக்கன்சி தங்களது ஊழியர்களுக்கு 9 மாத சம்பளத்துடன் வேறு வேலை தேடுவதற்கான வழியை பாருங்கள் என அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டனை சேர்ந்த தி டைம்ஸ் செய்தித்தாளில் வெளியாகியுள்ள செய்தியின் அடிப்படையில் மெக்கன்சி நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அடுத்த ஒன்பது மாதங்களுக்கு உங்களுக்கு முழு ஊதியம் வழங்கப்படும், ஆனால் நீங்கள் இங்கே வேலை செய்ய தேவையில்லை வேறு இடங்களில் வேலை தேடிக் கொள்ளுங்கள் என ஊழியர்களிடம் மெக்கன்சி கூறியுள்ளது. மெக்கன்சி நிறுவனம் தங்களது பணியாளர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக பணியாளர்களுக்கு இப்படிப்பட்ட ஒரு சலுகையை வழங்கி உள்ளது.
குறிப்பாக பிரிட்டனில் மேலாளர் பணிகளில் உள்ளவர்களை பணியில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகளை நிறுவனம் எடுத்து வருகிறது. அவர்களுக்கு 9 மாதங்கள் வேலை தேடுவதற்கான காலமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு ஒன்பது மாதங்களுக்கான ஊதியம் வழங்கப்படும் ஆனால் இங்கே வேலை செய்ய தேவையில்லை வெளியில் வேறு வேலை தேடிக் கொள்ளலாம் என்ற ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஒன்பது மாத காலமும் இவர்கள் மெக்கன்சி நிறுவனத்தில் எந்தவித வேலையும் செய்ய தேவையில்லை, தற்போது செய்து வரும் ப்ராஜெக்ட்டுகளில் இருந்து கூட அவர்கள் வெளியேறிவிட்டு புது வேலையை தேடிக்கொள்ளலாம் என கூறியுள்ளது.
மெக்கன்சி நிறுவனம் இத்தகைய மேலாளர்களுக்கு ஊதியத்தோடு, புது வேலையை தேடுவதற்கான பயிற்சிகளையும் வழங்கி வருகிறது. எங்கு எப்படி சென்று வேலை தேடுவது, எந்தெந்த நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன என்பன உள்ளிட்ட ஆதாரங்களையும் ஊழியர்களுக்கு வழங்கி வருவதாக டைம்ஸின் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒன்பது மாதங்களில் வேலை கிடைக்காவிட்டாலும் நிறுவனத்தை விட்டு வெளியேற வேண்டும் என கூறியுள்ளது. கன்சல்டிங் துறை என்பது தற்போது சரிவடைந்து வருகிறது. இதன் காரணமாக உலகின் புகழ்பெற்ற மேனேஜ்மென்ட் கன்சல்டன்சி நிறுவனமான மெக்கன்சி தனது பணியாளர்களை குறைப்பதில் முனைப்பு காட்டி வருகிறது.
ப்ளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியின் அடிப்படையில் கடந்த ஆண்டு மெக்கன்சி நிறுவனம் தங்களது ஊழியர்களில் 1,400 பேரை குறைக்க இருப்பதாக கூறி இருந்தது, அதாவது மொத்த ஊழியர்களில் 3% பேரை பணியில் இருந்து நீக்கப்போவதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.
மேலும் கடந்த பிப்ரவரி மாதத்தில் 3,000 ஊழியர்களுக்கு மோசமாக பணி செய்ததாக மதிப்பீடு வழங்கியுள்ளது. அடுத்த மூன்று மாதங்களுக்குள் இவர்கள் தங்களது வேலை திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் இல்லை எனில் பணியில் இருந்து விலகிக் கொள்ளலாம் என்று எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
story written by: Devika


Click it and Unblock the Notifications