இந்தியா உலகிற்கு அளித்த கொடைகள் ஏராளம். பூஜ்ஜியத்தில் இருந்து விண்வெளி வரை இந்தியர்களின் கைபடாத துறைகளே இல்லை என இந்தியர்களாகிய நாம் அனைவரும் மார் தட்டிக் கொள்ளலாம். புறக் காரணிகளைத் தவிர்த்து மனிதனுடைய அகத்திற்கும், புறத்திற்கும் (உடல்) இந்தியர்கள் அளித்த முக்கியத்துவம் மற்றும் கண்டுபிடிப்புகள் நம்மை மலைக்க வைத்து விடுகின்றது. அவற்றில் மிக முக்கியமானது ஆயுர்வேதம் ஆகும்.
நான்கு வேதங்களை நாம் அறிவோம். ஐந்தாவது வேதமாக கருதப்படும் ஆயுர்வேதம் மனிதனின் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்கின்றது. நோயை குணப்படுத்தும் மருத்துவ முறைகளைத் தவிர்த்து, நோய் வராமல் தடுக்கும் முன்னெச்சரிக்கைகளையும் ஆயுர்வேதம் பரிந்துரைக்க்கின்றது. இது மட்டுமல்ல, அரோக்கியத்துடன் அழகையும் அதிகரிக்க ஆயுர்வேதம் வழி காட்டுகின்றது.
ஆரோக்கியமே அழகு
உலகம் முழுவதும் அழகு ஆராதிக்கப்படுகின்றது. எது அழகு? ஒவ்வொருவருக்கும் அழகு என்பது அவரவர் ரசனையைப் பொறுத்து மாறுபடும். பொதுவாக அழகு என்பது அவரவர் மனதைப் பொறுத்தது. எனினும், நோயற்ற மற்றும் ஆரோக்கியமான வாழ்வே நாம் அனைவரின் லட்சியமாக இருக்கின்றது.
ஒருவருக்கு அழகு அவசியமா? ஆரோக்கியம் அவசியமா? ஆரோக்கியம் கண்டிப்பாக அழகை அழைத்து வரும். ஆனால் அழகு ஆரோக்கியத்தை அழைத்து வருவது சந்தேகமே. எனினும் ஆரோக்கியத்துடன் இணைந்த அழகு ஒருவருக்கு அமைந்தால், அவர் கண்டிப்பாக அதிர்ஷ்டசாலியாகத்தான் இருக்க வேண்டும். இத்தகைய அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும் வள்ளலாக ஆயுர்வேதம் இருக்கின்றது.
மெடிமிக்ஸ் - ஆயுர்வேதத்தின் அற்புதம்
வெள்ளையர்கள் நமது நாட்டை விட்டுச் சென்ற பின்னரும், அவர்களுடைய பழக்க வழக்கங்களின் தாக்கம் நம்மை விட்டு நீங்கவில்லை. பூந்திக் கொட்டையும், சீகக்காய் பொடியையும் பயன்படுத்தி வந்த இந்தியர்கள், சோப்பை பயன்படுத்தத் தொடங்கினர். சோப் ஒரு தவிர்க்க இயலாத பொருளாக மாறி இந்தியர்களின் இதயத்தில் இடம் பிடித்து விட்டது.
எனினும், சோப்பில் உள்ள வேதிப் பொருட்களின் வீர்யம், பல தவிர்க்க இயலாத இடைஞ்சல்களுக்கு இடம் அளித்தது. அந்த சமயத்தில் ஆபத்பாந்தவனாக ஆயுர்வேதத்தின் அருட்கொடையாக சந்தைகளை மெடிமிக்ஸ் ஆக்கிரமித்தது. ஆயுர்வேதத்தை நன்கு அறிந்த, ஆயுர்வேதார்த்திகளால் அறிமுகப் படுத்தப்பட்ட சோப் - மெடிமிக்ஸ் ஆகும்.

மெடிமிக்ஸ் - ஒரு சரித்திரத்தின் ஆரம்பம்
வி.பி. சித்தன் இந்திய ரயில்வேயில் ஒரு அலோபத்தி மருத்துவராக பணியாற்றி வந்தார். அங்கு பணியாற்றும் பொழுது, பல்வேறு தோல் நோயினால் அவதிப் பட்டு வந்த ரயில்வே துப்புரவு தொழிலாளர்களுக்கு சிகிச்சை அளிக்க நேரிட்டது. அவர் அறிந்த ஆங்கில வழி மருத்துவம் தற்காலிக தீர்வை மட்டுமே இத்தகைய நோய்களுக்கு அளித்தது. தனது முயற்சியில் சற்றும் மனந்தளராத விக்கிரமாதித்தனைப் போல் வி.பி.சித்தனும் பல்வேறு வழிகளைப் பயன்படுத்தி சிகிச்சை அளிக்க முற்பட்டார்.
அப்பொழுது அவருடைய மூதாதையர்களால் அவருக்கு கிடைத்த ஆயுர்வேத அனுபவம் மற்றும் அறிவு கைகொடுத்தது. தன்னுடைய ஆயுர்வேத ஞானத்தைப் பயன்படுத்தி தோல் நோய்களுக்கு பல்வேறு எண்ணெய்களைப் பயன்படுத்தி சிகிச்சை அளிக்க ஆரம்பித்தார். அந்த சிகிச்சையின் ஒரு பகுதியாக ஆயுர்வேத சோப்பை கண்டறிந்தார். தான் கண்டறிந்த இந்த சோப் மிகப்பெரிய வணிக சாம்ராஜ்ஜியமாகவும், ப்ராண்டாகவும் மாறும் என்று அன்று அவர் கண்டிப்பாக நினைத்திருக்க மாட்டார்.
வணிக சாம்ராஜ்யம்
வி.பி சித்தன் தனது மருத்துவர் நண்பர்களிடம் தனது சோப்பை அறிமுகப் படுத்தினார். அதோடு மட்டுமல்ல, தனது சோப்பைப் பற்றிய செய்தியை நோயாளிகளிடையே எடுத்துச் சொல்லுமாறு வேண்டுகோள் விடுத்தார். அவர் தனது சைக்கிளில் சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு தன்னுடைய சோப்பை எடுத்துச் சென்று டாக்டர்கள் மற்றும் வேதியியலாளர்கள் மத்தியில் விளம்பரப்படுத்தினார்.
அதன் காரணமாக 1969 இல் அவர் இரண்டு ஊழியர்களுடன் நிறுவனத்தைத் தொடங்கினார். அன்று இரண்டு ஊழியர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம், இன்று பல்கித் தழைத்து விளங்குகின்றது.
இளைய தலைமுறையின் கைகளில்
இன்று, மெடிமிக்ஸ் நிறுவனத்தை, அந்த நிறுவனத்தை நிறுவிய வி.பி.சித்தனின் பேரன் லசகன் சோலையில் (Lasakan Cholayil), முன்னெடுத்துச் செல்கிறார். லசகன் 2015 ம் ஆண்டு மெடிமிக்ஸ் நிறுவனத்தில் இணைந்தார். அவர் இந்த நிறுவனத்தில் இணைந்த பொழுது, மெடிமிக்ஸ் நிறுவனத்தின் மொத்த விற்றுமுதல் ரூ 200 கோடியாக இருந்தது. அதோடு மட்டுமல்ல லசகன் அவர்களின் தந்தை பிரதீப் சோலையில் அவர்களும் இந்த நிறுவனத்தில் இயக்குனராக இருக்கின்றர்.
ஆன்லைனில் மெடிமிக்ஸ்
லசகன் சோலையில் நிர்வாகப் பொருபேற்றுக் கொண்ட பொழுது, அந்த நிறுவனம், ஒரு பாரம்பரிய நிறுவனமாக இருந்தது. பாரம்பரிய தயாரிப்பு முறை என்பது அந்த நிறுவனத்தின் பலமாக இருந்தது. எனினும், பாரம்பரிய முறையிலான விற்பனை முறை (சில்லறை கடை வர்த்தகம்) நிறுவனத்தின் பலவீனமாக மாறிவிடும் வாய்ப்பு இருக்கின்றது. இதை நன்கு உணர்ந்த லசகன், மெடிமிக்ஸ் நிறுவனத்தின் விற்பனையை ஆன்லைனில் முன்னெடுத்துச் சென்றார்.
அதோடு மட்டுமல்ல, சந்தனம் மற்றும் ஆலோவீரா போன்ற புதிய சோப்களை அறிமுகப்படுத்தினார். ஆன்லைன் விற்பனை மெடிமிக்ஸ் நிறுவனத்தின் விற்பனையை அதிகப்படுத்தியது. இதன் காரணமாக இந்த நிறுவனத்தின் மொத்த விற்று முதல் ரூ 300 கோடியாக இருக்கின்றது.
ஆன்லைன் வர்த்தகம், கொரோனா காலத்தில் இந்த நிறுவனத்தின் விற்பனை சரிவடையாமல் காப்பாற்றியது. இன்றைய தேதியில், மெடிமிக்ஸ் நிறுவனத்தின் மொத்த விற்பனையில், ஆன்லைன் வர்த்தகம் சுமார் 25 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளது.
புதிய முயற்சி
மெடிமிக்ஸ், ஒரு வெற்றி பெற்ற ப்ராண்டாக மாறி சந்தையை ஆக்கிரமித்தது. உலக மயமாக்கலின் தாக்கம், இந்தியர்களின் வாழ்க்கைமுறையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தியர்கள் தங்களுடைய அழகிற்கும் முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தனர். இதைப் பயன்படுத்திக் கொள்ள மெடிமிக்ஸ் நிறுவனம் முடிவு செய்தது.
லசகன் மற்றும் அவரது தாயாரான திருமதி ஜெயதேவி அவர்களும் இணைந்து புதிய நிறுவனத்தை தொடங்கினர். செப்டம்பர் 2019 இல், சதேவ் (Sadhev) என்கிற புதிய நிறுவனம் ரூ 2 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்டது. இதற்கு தேவைப்பட்ட நிதியானது, சோலையில் பிரைவேட் லிமிடெட் மூலம் வழங்கப்பட்டது. எனவே சோலையில் நிறுவனம் சதேவ் நிறுவனத்தின் தாய் நிறுவனமாக மாறியது. லசகன் சோலையில் இந்த புதிய நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக இருக்கின்றார்.
சதேவின் தயாரிப்புகள்
இந்தியாவில் உள்ள அழகுச் சாதன நிறுவனங்கள், பல்வேறு தயாரிப்புகளை சந்தைப் படுத்தி வருகின்றனர். எனவே அவர்களுடன் போட்டியிட வேண்டிய சூழல் சதேவ் நிறுவனத்திற்கு இருந்தது. எனவே சதேவ் நிறுவனம் தனது பலத்தை பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்து களத்தில் இறங்கியது. ஆயுர்வேதம் சார்ந்த அழகுப் பொருட்களை தயாரித்து, பல்வேறு தயாரிப்புகளை சந்தைப் படுத்தியது.
"சாதேவில், சோப்புகள், கற்றாழை ஜெல், ரோஸ் வாட்டர், ஷாம்பு, கண்டிஷனர், குங்குமடி எண்ணெய் மற்றும் தேங்காய் ஷவர் ஆயில் போன்ற 19 SKUகள் உள்ளன" என லசகன் தெரிவிக்கின்றார்.
அதோடு மட்டுமல்ல "நாங்கள் இயற்கையான முடி நிறத்தையும் அறிமுகப்படுத்தினோம், இது கோவிட் லாக்டவுனின் போது சலூன்கள் மூடப்பட்ட காரணத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. இது மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. ஆயுர்வேதத்தின் நுணுக்கங்களையும் அதன் நன்மைகளையும் புரிந்து கொள்ளும் இளைய தலைமுறையினருக்காக இந்த தயாரிப்புகள் தயாரிக்கப்படுகின்றன." என லசகன் தெரிவிக்கின்றார்.

அபார வளர்ச்சி
லசகன் மற்றும் அவரது தாயாரால் தொடங்கப்பட்ட ஹெர்லூம் பே பிரைவேட் லிமிடெட் நிறுவனம், 2020 ஆம் ஆண்டில் ரூ 1.5 கோடியையும், 2021-22 நிதியாண்டில் ரூ 3 கோடியையும் தொட்டது மொத்த விற்று முதலாகப் பெற்றது.
சதேவ் நிறுவனத்தின் பல்வேறு தயாரிப்புகளின் விலை ரூ.300 முதல் ரூ.2000 வரை உள்ளது. ஆந்திரா-தமிழ்நாடு எல்லையில் உள்ள தடா, சென்னையில் இருந்து சுமார் 70 கிமீ தொலைவில் உள்ளது. இங்குள்ள மெடிமிக்ஸ் தொழிற்சாலையில் சதேவ் நிறுவனத்தின் ஆயுர்வேத தயாரிப்புகள் தயாரிக்கப்படுகின்றன. சென்னை நிறுவனம் இந்திய ஆயுர்வேததின் அடையாளமாக மாறி இந்திய மற்றும் உலகச் சந்தையை ஆக்கிரமித்துள்ளது.
ரு 2 ல் இருந்து ரூ 160 நோக்கி
சென்னை அண்ணாநகரில் உள்ள மெடிமிக்ஸ் அலுவலகத்திற்குப் பக்கத்தில் உள்ள கார்ப்பரேட் அலுவலகத்தில் இரண்டு ஊழியர்களுடன் மெடிமிக்ஸ் நிறுவனம் 1960 பிற்பகுதியில் தொடங்கப்பட்டது. லசகனின் தந்தை இந்த நிறுவனத்தில் 1983 இல் சேர்ந்தார். அப்போது அந்த நிறுவனத்தின் மொத்த வருவாய் சுமார் ஒரு கோடி என்கிற அளவிலேயே இருந்தது. அப்பொழுது இந்த நிறுவனத்தில் சுமார் 50 ஊழியர்களே இருந்தனர்.
1969-ல் 75 கிராம் சோப்பின் விலை ரூ.2, என்கிற அளவில் விற்கப்பட்டது. இன்று அதே சோப்பின் விலை ரூ.160 என்கிற அள்வில் விற்கப்படுகின்றது. இந்த சோப்பின் விலை, சந்தையில் உள்ள பல்வேறு நிறுவன தயாரிப்புகளை விட, சற்றே அதிகமாகவே உள்ளது. எனினும், மக்களின் அமோக ஆதரவைப் பெற்று விண்ணை நோக்கி வெற்றி நடை போடுகின்றது.
"நாங்கள் 30 நாடுகளுக்கு எங்களுடைய தயாரிப்புகளை விற்பனை செய்கிறோம். எங்களுக்கு தைவான், மத்திய கிழக்கு, ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்காவில் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். இப்போது நாங்கள் ஐரோப்பிய சந்தையில் நுழைகிறோம். இந்திய சமூகம் எங்கள் சோப்பின் மூலம் அவர்களின் கலாச்சாரத்துடன் வேரூன்றியுள்ளது." என லசகன் தன்னுடைய நிறுவனத்தின் வளர்ச்சியைப் பற்றி தெரிவிக்கின்றார்.
பள்ளியிலிருந்து போர்ட் ரூமிற்கு
பாரம்பரிய மிக்க ஆயுர்வேதக் குடும்பத்தில் பிறந்த லசகன் என்றாவது ஒரு நாள் தானும் தன்னுடைய குடும்பத் தொழில் ஈடுபட வேண்டிய நிலை வரும் என்பதை நன்கு அறிந்திருந்தார். எனவே அதற்கு வேண்டிய தகுதியை வளர்த்துக் கொள்ள விரும்பி, பல்வேறு திறமைகளை வளர்த்துக் கொண்டார். அப்பொழுது மட்டுமே தன்னுடைய விருப்பத்திற்கு ஏற்ப நிறுவனத்தை முன்னெடுக்க முடியும் என்பதை லசகன் அறிந்திருந்தார்.
லசகன் 2010 ஆம் ஆண்டு சென்னையில் உள்ள அமெரிக்கன் இன்டர்நேஷனல் பள்ளியில் 12 ஆம் வகுப்பை முடித்தார். அதன் பின்னர் அமெரிக்காவில் உள்ள லின் பல்கலைக்கழகத்தில் லிபரல் ஆர்ட்ஸில் பிஏ படித்தார். தன்னுடைய அறிவுத் தேடலை லசகன் இப்பொழுதும் தொடர்கின்றார். இப்போது, அவர் இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் குடும்ப வணிக நிர்வாகத்தில் முதுகலைப் படிப்பில் சேர்ந்துள்ளார்.
வணிகப் பயணங்கள்
"நான் அதிகாரப்பூர்வமாக நிறுவனத்தில் சேர்வதற்கு முன்பே, வெளிநாட்டு சந்தையைப் பற்றிய புரிதலைப் பெறுவதற்காக 2010 வாக்கில் எனது தந்தையுடன் பல நாடுகளுக்கு வணிகப் பயணங்களை மேற்கொண்டேன். அப்போது உலகளவில் ஆயுர்வேதம் மெதுவாக பிரபலமடைந்து வந்தது.
அப்படிப்பட்ட ஒரு பயணத்தில், வெளிநாட்டவர்கள் இந்தியப் பொருட்களை சிறிது தயக்கத்துடன் அனுகுகின்றனர் என்பதை நான் நன்றாகத் தெரிந்துகொண்டேன். அத்தகைய ஒரு பயணத்தில், மெடிமிக்ஸ் சோப்பை உபயோகிக்கும்படி ஒரு கனேடியரை மடை மாற்றினேன்." என லசகன் தனது நினைவுகளை அசை போடுகின்றார்.

உலகளவில் ஆயுர்வேத மெடிமிக்ஸ்
லசகன் நிர்வாகத்தின் பொறுப்பை ஏற்றுக் கொண்ட பின்னர் அவருக்கு சாதகமாக நிலைமை மாறியது. உலகளவில் இந்திய பொருட்களின் மீதான பார்வை மாறியது. இந்திய ஆயுர்வேதம் பல்வேறு நாடுகளின் பேசுபொருளாக மாறியது. லசகனுக்கு பெரிய வணிகத்தின் ஜன்னல் அல்ல ஒரு கதவே திறந்து வழி விட்டது. இன்று, மெடிமிக்ஸ் நிறுவனத்தின் மொத்த விற்பனையில் 15% ஏற்றுமதியில் இருந்து மட்டுமே வருகிறது.
பழைய நினைவுகள்
ஆயுர்வேதத்தில் தனது ஆர்வத்தை வளர்த்த தாத்தா பாட்டியுடன் தான் கழித்த நாட்களை லசகன் நினைவு கூர்ந்தார்.
"எனது தாத்தா பாட்டிகளுக்கு சென்னைக்கு அருகில் ஒரு பண்ணை இருந்தது, நாங்கள் ஒவ்வொரு வார இறுதியில் அங்கு செல்வோம்.
இங்கே அவர்கள் அரிய மருத்துவ மூலிகைகளை வளர்த்தனர், மேலும் அவர்கள் பறவைகள், கால்நடைகள் உட்பட பல்வேறு பிராணிகளை வளர்த்தனர். இது எங்களுக்கு அனைவருக்கும் ஆயுர்வேதம், மூலிகைகள் மற்றும் இயற்கையின் மீது ஒரு பற்றுதலைக் கொடுத்தது." என லசகன் தன்னுடைய நினைவுகளை அசை போடுகின்றார்.
ஆராய்ச்சியே அடிப்படை
லசகன், ஆராய்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றார். அவருடைய வழிகாட்டுதலின் படி இந்த நிறுவனத்தினால் பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்பட்டு சந்தைப் படுத்தப் படுகின்றன. தன்னுடைய பங்களிப்பைப் பற்றி அவர் தெரிவிக்கும் பொழுது "என்னுடைய சிறிய வயதில், எனது தாய், என்னை மெடிமிக்ஸ் நிறுவனத்திற்கு அழைத்துச் செல்வார்.
அங்கு நடைபெறும் பல்வேறு செயல்கள் என்னைப் பரவசப் படுத்தும். வண்ணங்கள் கலக்கப்படும் முறை மற்றும் திரவங்கள் கலக்கப்படும் விதத்தைப் பார்ப்பது எனக்கு மிகவும் பிடித்தமாக இருந்தது. குளிக்கும்போது குளியலறையில், விதவிதமான ஷாம்புகளையும் சோப்புகளையும் கலந்து, அவை எப்படி மணக்கிறது என்பதைப் ரசிப்பேன்." என்று லசகன் கூறுகிறார். அவரது தங்கை சுமேரா, தனது உயர்கல்விக்காக வெளிநாடு செல்லத் திட்டமிட்டுள்ளார்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?



Click it and Unblock the Notifications