இன்றைய காலத்தில் பெரும்பாலான சிறுவர்கள் டிவி-களில் ஒளிபரப்பாகும் கார்ட்டூன்களிலும், மொபைல் ஃபோன்களில் வரும் வீடியோக்களிலும் மூழ்கியிருக்கும் சூழலில் இந்தியாவைச் சேர்ந்த ஒரு மாணவர் முற்றிலும் மாறுபட்ட பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறார். ஆம்..13 வயதே ஆகும் ஆதித்யன் ராஜேஷ் என்ற மாணவர் மொபைல் அப்ளிகேஷனை உருவாக்கி, சொந்தமாக ஐடி நிறுவனம் ஒன்றையும் நிறுவியிருக்கிறார். இன்று லட்சக்கணக்கான சப்ஸ்கிரைபர்களைக் கொண்ட யூடியூப் சேனலையும் நிர்வகித்து வருகிறார்.
இவருடைய கதையை சுவாரசியமாக்குவதே அவர் இந்தியாவில் பிறந்தவர் என்பது தான். கேரள மாநிலத்தில் உள்ள திருவல்லாவில் பிறந்த ஆதித்யன், தற்போது துபாயில் வசித்து வருகிறார். தலைமை நிர்வாக பொறுப்பில் அமர்ந்த இளம் வயதினரில் ஆதித்யனும் ஒருவர். 5 வயது முதல் கணினி மீது ஆதித்யனுக்கு அபரிமிதமான ஈர்ப்பு இருந்தது. இதனால் புது தொழில்நுட்பங்களை பற்றி தெரிந்து கொள்ளவும், கணினியுடன் அதிக நேரம் செலவழிப்பதையுமே விரும்பியுள்ளார். தான் சிறு வயதாக இருக்கும்போது தனக்கு நண்பர்கள் குறைவாக இருந்ததால்.. தொழில்நுட்பம் தான் தனக்கு தோழனாக இருந்ததாக சமீபத்திய இன்டர்வியூவில் ஆதித்யன் பகிர்ந்திருந்தார்.

ஆதித்யனுக்கு 9 வயது இருக்கும். அப்போதுதான் வெற்றிக்கான தனது முதல் அடியை அவர் எடுத்து வைத்தார். இயல்பாக தொடங்கிய அவருடைய ஆர்வம் வெகு விரைவில் தீவிரமான ஒன்றாக மாறியது. பெரிதாக நண்பர்கள் இல்லாத காரணத்தினால் யூடியூபில் நேரத்தை செலவழிப்பதிலும், பள்ளிகளில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்பதிலும் தனது பொழுதை கழித்தவர் ஆதித்யன்.
படிப்படியாக அவருடைய ஆர்வம் கோடிங் பக்கம் திரும்பியது. கோடிங் மட்டுமின்றி டிசைனையும் ஒருபுறம் கற்க ஆரம்பித்தார். 6 வயதிலேயே HTML மற்றும் CSS போன்ற மொழிகளை கற்கத் தொடங்கினார். தொழில்நுட்பத்தின் மீது ஆதித்யனுக்கு இருந்த தீராக் காதல் விரைவில் அவரை தொழில்முனைவோராக மாற்றியது.
ஆதித்யனுக்கு 9 வயதாகும்போது கோடிங் கற்றுக் கொண்டு தனது முதல் ஆண்ட்ராய்டு அப்ளிகேஷனை உருவாக்க ஆரம்பித்தார். இதை வெற்றிகரமாக செய்த பிறகு அவருடைய தன்னம்பிக்கை மேலும் அதிகரித்தது. ஆண்ட்ராய்டுகளில் பயன்படுத்தும் அப்ளிகேஷனை உருவாக்கியது போலவே தற்போது iOS-களில் பயன்படுத்தப்படும் அப்ளிகேஷனை உருவாக்கி வருகிறார்.
ஆதித்யன் 'எ கிரேஸ்' என்ற யூடியூப் சேனலையும் நடத்தி வருகிறார். இந்த யூடியூப் சேனலில் அவருக்கு நிறைய சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். இந்த சேனலில் ஆதித்யன் தொழில்நுட்பம், கோடிங், கேமிங், வெப் டிசைனிங் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து வருகிறார்.
13 வயதில் புது நிறுவனம்: 13 வயதில் ஆதித்யன் தனது கல்லூரி நண்பர்களுடன் சேர்ந்து டிரைனட் சொல்யூஷன்ஸ் என்ற சாப்ட்வேர் டெவலப்மென்ட் நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். இன்று வரை அவர் நிறுவனத்தில் 12 வாடிக்கையாளர்களுக்கு ப்ராஜெக்ட்-களை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்துள்ளார். தற்போது தனது பள்ளிக்காக கிளாஸ் மேனேஜ்மென்ட் அப்ளிகேஷனை உருவாக்கி வருகிறார். தனது நிறுவனத்தை உலகளவில் வெற்றி பெற செய்வது தான் தனது குறிக்கோள் என்ற லட்சியத்துடன் உழைத்து வருகிறார்.
சிறுவயதிலேயே தொழில்நுட்பத்தின் மீதான அவருடைய ஆர்வம், இன்று இளம் வயது தொழில்முனைவோராக ஆதித்யனை மாற்றியுள்ளது. இவர் இன்றைய இளைய தலைமுறையினருக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.


Click it and Unblock the Notifications