படிப்பது தேர்வு எழுதுவது என்றாலே அலர்ஜி என கூறும் நபர்களுக்கு மத்தியில் சென்னையை சேர்ந்த ஒரு பேராசிரியர் 150 க்கும் அதிகமான பட்டப்படிப்புகளை முடித்து சாதனை படைத்திருக்கிறார். வழக்கமாக பள்ளி படிப்பை முடித்துவிட்டு கல்லூரிக்கு செல்பவர்கள் இரண்டு டிகிரி முடிப்பார்கள் , சிலர் பிஹெச்டி, எம்ஃபில் போன்றவற்றை படிப்பார்கள். ஆனால் சென்னை சேர்ந்த இந்த பேராசிரியர் 150-க்கும் அதிகமான பட்டப்படிப்புகளை முடித்திருக்கிறார்.
கல்வியில் இவர் படைத்திருக்கும் இந்த சாதனையின் பின்னணி என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். படிப்பு, படிப்பு, படிப்பு இதையே தன்னுடைய வாழ்க்கையாக மாற்றிக் கொண்டிருக்கும் பேராசிரியர் டாக்டர் பார்த்திபன் குறித்து தான் இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ள போகிறோம். வழக்கமான மனிதர்கள் 2 டிகிரி முடிப்பார்கள் அதீத ஆர்வம் இருந்தால் 10 கூட முடிக்கலாம் ஆனால் 50, 100 என கடந்து 150 க்கும் அதிகமான பட்டப்படிப்புகளை இவர் முடிப்பதற்கு முக்கிய காரணமாக இருப்பது இவருடைய தாயாருக்கு இவர் செய்து தந்த சத்தியம் .

சென்னை மயிலாப்பூரில் வசித்து வரும் கல்லூரி பேராசிரியர் பார்த்திபன். இவரை நடமாடும் நூலகம், பட்டப்படிப்புகளின் களஞ்சியம் என மாணவர்கள் செல்லமாக அழைக்கின்றனர். முதன்முதலில் பட்டப்படிப்பு முடிக்கும் போது ஒரு சராசரி மதிப்பெண் எடுத்துதான் தேர்ச்சி பெற்றதாகவும் அந்த மதிப்பெண்களை பார்த்து அவருடைய தாயார் சோகமடைந்ததாகவும் கூறும் பார்த்திபன் அந்த நொடி நான் ஒரு சத்தியம் செய்தேன் சிறந்த மதிப்பெண்கள் எடுத்து தேர்வுகளில் வெற்றி பெற்று என்னுடைய தாயாருக்கு பெருமை பெற்று தர வேண்டும் என முடிவு செய்தேன் என்கிறார்.
1981 ஆம் ஆண்டு தொடங்கிய இவருடைய பட்டப் படிப்பு பயணம் இன்று வரை தொடர்கிறது. 150-க்கும் அதிகமான பட்டப்படிப்பு , டிப்ளமோ படிப்புகளை முடித்திருக்கும் இவர் பொருளாதாரம் ,பொது நிர்வாகம் ,அரசியல் அறிவியல் ,சட்டம் உள்ளிட்ட பல்வேறு பாடப்பிரிவுகளிலும் முதுநிலை படிப்பை முடித்திருக்கிறார். 12 எம்ஃபில் படித்திருக்கும் இவர் 4 பிஹெச்டி முடித்துள்ளார்.

பேராசிரியராக தனக்கு கிடைக்கும் வருமானத்தில் 90 சதவீதத்தை தன்னுடைய படிப்புக்காகவே செலவு செய்வதாக கூறுகிறார். இவர் நேரம் கிடைக்கும்போதெல்லாம் தன்னுடைய புத்தகத்தை எடுத்து படிப்பதாக கூறுகிறார் . சிறிது நேரம் கிடைத்தால் ஓய்வு எடுக்கலாம் என அனைவரும் நினைப்போம். ஆனால் எனக்கு நேரம் கிடைத்த உடனே படிக்க வேண்டும் என்று தான் தோன்றும் என கூறுகிறார். கட்டுப்பாடுகள் என்பது நம்முடைய மனதில் தான் இருக்கிறது என கூறும் இவர் 200 பட்டப்படிப்புகளை முடிக்க வேண்டும் என்பதே தன்னுடைய இலக்கு என தெரிவிக்கிறார்.
பார்த்திபனுக்கு இருக்கும் ஆர்வத்தை பார்த்தால் நிச்சயம் அவர் 200 டிகிரிகளை முடிப்பார் என்றே கூறலாம். படிப்பு, படிப்பு என காலமெல்லாம் படிப்பிலேயே இருக்கும் இவர் மனமிருந்தால் மார்க்கமுண்டு என்பதற்கு சிறந்த உதாரணமாக திகழ்கிறார்.


Click it and Unblock the Notifications