பலருக்கும் சொந்தத் தொழில் ஒன்றைத் தொடங்கி அதை லாபகரமானதாக மாற்ற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதற்காக சிலர் கடன் வாங்கி தொழிலைத் தொடங்குவர். சிலர் கையில் இருக்கும் பட்ஜெட்டை வைத்து தொடங்குவர். இதுபோன்ற சிறு விஷயத்தில் ஆரம்பித்து இன்று கோடிக்கணக்கான ரூபாயை சம்பாதித்து சாதித்துக் காட்டியவர்கள் பலர். அந்த வகையில் தற்போது சுமிலா ஜெயராஜ் என்ற பெண்மணியும் இணைந்துள்ளார். இவர் கிரீன் ஆரா இன்டர்நேஷனல் என்ற நிறுவனத்தை 70 லட்சம் லோனில் ஆரம்பித்து இன்று நல்ல வருமானம் ஈட்டி வருகிறார்.
2021-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட கிரீன் ஆரா இன்டர்நேஷனல் என்ற நிறுவனம் கேரளத்தை தளமாகக் கொண்ட நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் தேங்காயைக் கொண்டு செய்யப்படும் சுத்தமான கலப்படம்மற்ற பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிறுவனம் திருச்சூரில் செயல்பட்டு வருகிறது. கிரீன் ஆரா இன்டர்நேஷனல் நிறுவனத்தை நிறுவியவர் சுமிலா ஜெயராஜ். சுமிலா கேரளாவைச் சேர்ந்தவர். அவர் விலங்கியல் பட்டம் மற்றும் ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.
திருமணமாகி குழந்தை பெற்ற பிறகு சுயமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று சுமிலா யோசித்துள்ளார். அங்கு தான் அவருடைய பயணம் தொடங்கியது. அதன் பிறகு தேங்காய் எண்ணெய் உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் உதவி மேலாளராக சுமிலாவுக்கு வேலை கிடைத்தது.
தென்னை மரத்தில் கிடைக்கும் பொருட்களை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம்? என்ற சுமிலாவின் ஆர்வம் அவரை இது போன்ற சாம்ராஜ்யத்தை உருவாக்க உதவியுள்ளது. 3 ஆண்டுகளுக்குப் பிறகு சுமிலா வேலையை விட்டுவிட்டு தேங்காயை வைத்து ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்துள்ளார்.
எனவே 2012-ஆம் ஆண்டில் சுமிலா தனது சேமிப்புகளை சேர்த்து வைத்து வீட்டிற்கு பக்கத்தில் ஒரு சிறிய இடத்தில் கிரீன் நட் இன்டர்நேஷனல் என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ளார். அந்த நிறுவனத்தின் முதன்மை தொழில் என்று பார்த்தால் தேங்காயிலிருந்து தேங்காய் எண்ணெயை பிரித்தெடுப்பது. அங்கு அதிகம் விற்பனையானதும் இந்த தேங்காய் எண்ணெய் தான்.
ஆனால் தேங்காய்கள் மிகக் குறைந்த அளவிலேயே விற்பனை செய்யப்பட்டது. அதன் பிறகு சுமிலா கொச்சியில் உள்ள தென்னை வளர்ச்சி வாரியத்தில் பயிற்சி பெற்றுள்ளார். 2012 முதல் 2017-ஆம் ஆண்டு வரை வழக்கம் போல இவருடைய வணிகம் இயங்கிக் கொண்டிருந்தது ஆனால் சுமிலா ஜெயராஜிற்கு இந்த வணிகம் போதுமானதாக இல்லை. எப்படி இதை விரிவு படுத்துவது என்று யோசித்துக் கொண்டே இருந்துள்ளார்.
2017-ஆம் ஆண்டில் தனது முந்தைய நிறுவனத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு இன்னொரு பயணத்தை நோக்கி நகர்ந்துள்ளார். 2017-ஆம் ஆண்டு முதல் 2020-ஆம் ஆண்டு வரை தான் ஏற்கனவே வாங்கிய நிலத்திற்கு அனுமதி பெறுவதில் சுமிலா பணியாற்றியுள்ளார்.
இறுதியில் 2021-ஆம் ஆண்டு கிரீன் ஆரா இன்டர்நேஷனல் நிறுவனம் தொடங்கப்பட்டது. அப்போது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் 74 லட்ச ரூபாய் சுமிலா கடனாகப் பெற்றுள்ளார். அவருடைய இடத்தில் உற்பத்திக்காக யூனிட் அமைப்பதற்கு மொத்த செலவாக 1.8 கோடி ரூபாய் செலவாகியுள்ளது. இதனால் வங்கியில் கூடுதலாக 20 லட்சத்தை செயல்பாட்டு மூலதனமாக வாங்கியுள்ளார்.
இப்போது க்ரீன் ஆரா இன்டர்நேஷனல் நிறுவனத்தில் தேங்காய் பால், தேங்காய் எண்ணெய் தேங்காயை கொண்டு செய்யப்பட்ட வினிகர், தேங்காய் சாம்பார் பொடி, சட்னி பொடி, தேங்காய் லட்டுகள் போன்ற மதிப்பு கூட்டப்பட்ட தேங்காய் தயாரிப்புகள் விற்பனை செய்யப்படுகிறது.
இப்போது இந்நிறுவனத்தில் ஒன்பது கிராமப்புற பெண்கள் வேலை செய்து வருகின்றனர் இந்த நிறுவனம் அமேசான் மற்றும் இந்தியா மார்ட் போன்ற இகாமர்ஸ் தலங்களிலும் விற்பனை செய்கிறது மற்றும் உள்நாட்டு சர்வதேச நிறுவனங்களுடன் சேர்ந்து பொருட்களை விற்பனை செய்யும் கோ பிராண்டாக மாறி உள்ளது. எதிர்காலத்தில் அழகு சாதன பொருட்கள் மற்றும் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களுக்கு தேங்காய் பொருட்களை பயன்படுத்த இருப்பதாக சுமிலா திட்டமிட்டுள்ளார்.
கிரீன் ஆரா இன்டர்நேஷனல், தனக்கென ஒரு புதிய தடத்தை உருவாக்கியுள்ளது. சுமிலா ஜெயராஜின் உறுதியான தலைமையின் கீழ், நிறுவனம் கிராமப்புற பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குகிறது. எதிர்காலத்தில், கிரீன் ஆரா இன்டர்நேஷனல் மேலும் வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications