பிறப்பால் ஏற்படும் குறைபாடுகள் ஒரு வாழ்க்கையில் சாதிப்பதற்கு ஒரு போதும் தடையாக இருக்க கூடாது என்பது உதாரணமான ஒரு சாதனை பெண்ணின் கதையை தான் இந்த கட்டுரையில் பார்க்க இருக்கிறோம்.
ஷார்க் டேங்க் இந்தியா என்ற ஸ்டார்ட் அப் தொடர்பான தொலைக்காட்சி நிகழ்ச்சியை காண்போருக்கு ராதிகா குப்தா குறித்த அறிமுகம் தேவைப்படாது. இந்நிகழ்ச்சியின் புகழ்பெற்ற நடுவர் இவர். எடல்வீஸ் மியூச்சுவல் ஃபண்டின் தலைமை செயல் அதிகாரி ராதிகா குப்தா.

பிறக்கும் போதே உடல் குறைபாடுடன் பிறந்து பலரால் ஏளனம் செய்யப்பட்டு அதை எல்லாம் தகர்த்தெறிந்து வந்து சாதனை படைத்துள்ளார். பிரசவத்தின் போது ஏற்பட்ட சிறு சிக்கல் காரணமாக ராதிகாவிற்கு கழுத்து சற்றே வளைந்திருக்கும். அது தவிர மாறு கண் குறைபாடும் இருந்தது.
எனவே குழந்தைப்பருவம் முதலே பல கேலி கிண்டல்களை சந்தித்து தான் வளர்ந்தார். ராதிகாவின் தந்தை இந்திய வெளியுறவுத்துறை அதிகாரியாக பணியாற்றி வந்தார். எனவே ராதிகா குப்தா பல நாடுகளில் படித்தார்.
கடினமான சூழ்நிலைகளை தைரியமாக எதிர்கொண்ட ராதிகா குப்தா தனது படிப்பை முடித்து, அமெரிக்காவில் தங்கி கம்ப்யூட்டர் சயின்ஸில் பட்டம் பெற்றார். இதன் பிறகு வேலைக்கு செல்லலாம் என முடிவெடுத்து பல இடங்களில் விண்ணப்பம் செய்தார்.
7 முறை நேர்காணலில் தான் நிராகரிக்கப்பட்டதாகவும் , அதன் பின் தனது தைரியம் உடைந்தது என்றும் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். தொடர் நிராகரிப்பால் தனக்கு தற்கொலை எண்ணம் கூட வந்திருந்தது என கூறியுள்ளார். இருப்பினும், கேலி கிண்டலுக்கு ஆளாக்கியவர்கள் முன்னிலையில் வாழ்ந்து காட்டிவிட வேண்டும் என்ற தைரியம் கொண்டு தொடர்ந்து முயற்சி செய்து வேலைக்கு சேர்ந்தார்.
பின்னர் கணவர் எமற்றும் நண்பருடன் சேர்ந்து ஒரு சொத்து மேலாண்மை நிறுவனத்தைத் தொடங்கினார். நிறுவனம் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருந்தது. சில ஆண்டுகளுக்குப் பிறகு, எடல்வீஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் இதனை கையகப்படுத்தப்பட்டது.
அப்போது எடல்வீசஸ் நிறுவனத்திற்கு தலைமை செயல் அதிகாரி பொறுப்பு காலியாக இருந்தது. கணவர் அளித்த ஊக்கத்தின் பேரில் இதற்கு விண்ணப்பம் செய்தார். நல்வாய்ப்பாக அவருக்கு அந்த பொறுப்பும் கிடைத்தது.
2017ஆம் ஆண்டு 33 வயதாகும் போதே 9,128 கோடி ரூபாய் மதிப்புள்ள நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியானார். ஜனவரி 2023க்குள், அவரது சொத்து மேலாண்மை நிறுவனத்தின் மதிப்பு ரூ.1,01,406 கோடியாக அதிகரித்துள்ளது.
ராதிகா தனது வாழ்க்கையை மையமாக வைத்து 'லிமிட்லெஸ்' என்ற புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். தனது வாழ்க்கையிலேயே மிகப்பெரிய வெற்றியாக இதை கருதுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். "என்னை நானே ஏற்றுக்கொள்ளவே எனக்கு பலநாள் ஆனது.
ஆனால் அதன் பின்னர் தான் என்னுடைய நம்பிக்கை பலமடங்கு பெருகியது என கூறி இருக்கும் ராதிகா குப்தா, என் தோற்றம் குறித்து யாரேனும் கிண்டல் செய்தால், ஆமாம் என் கழுத்து ஒரு பக்கம் வளைந்திருக்கிறது, என் கண்கள் இப்படித்தான் இருக்கும், உங்களிடம் தனித்துவமாக என்ன இருக்கிறது எனக் கேட்கிறேன்" என அவர் தன்னம்பிக்கையோடு உதிர்க்கும் வார்த்தைகள் சாதிக்க துடிக்க அனைவருக்குமான வார்த்தைகள்.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications