இந்தியாவில் உள்ள பல வெற்றிகரமான பிராண்டுகளை உருவாக்கியதில் அதன் நிறுவனர்களுக்கு பெரும் பங்கு உண்டு. விடாமுயற்சியும், கடின உழைப்பும் இருந்தால் மட்டுமே ஒரு பிராண்டை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க முடியும். அப்படித்தான் மங்களூரைச் சேர்ந்த பிரபாகர் காமத் தனது பிராண்டை ஒரு மாபெரும் பிராண்டாக மாற்றியுள்ளார்.
இளமையில் இந்திய விமானப்படையில் சேர்ந்து பணியாற்ற விரும்பினார். ஆனால் அவருக்கு 20 வயது ஆகும்போது தாய் தந்தையரை இழந்தார். இதனால் தன் உடன் பிறந்தவர்களை கவனிக்கும் பெரிய பொறுப்பு அவர் மீது விழுந்தது. அந்த சமயத்தில் செய்வதறியாது நின்ற பிரபாகர்.. தன்னுடைய கனவை அவர்களுக்காக கைவிட்டார். குடும்பத்தை காப்பாற்றியாக வேண்டும் என்ற சிந்தனையில் வணிகம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

ஆரம்பத்தில் தான் கற்ற தையல் கலையை மட்டுமே நம்பி பிழைப்பு நடத்தினார். ரெயின் கோட் விற்று அன்றாட செலவுகளை செய்து வந்தார். சில தினங்களுக்கு பின்னர் பட்டாசு வியாபாரத்தில் களமிறங்கினார். இப்படி ஒவ்வொரு தொழிலாக மாற்றி மாற்றி செய்து பின்னர் ஒரு நிலையான தொழிலை கண்டுபிடிக்க வேண்டும் என்று எண்ணினார். கரும்பு ஜூஸ் விற்கலாமா என்ற யோசனையிலும் சில நாட்கள் இருந்தார். ஆனால் அது எதுவுமே அவருக்கு கை கொடுக்கவில்லை.
தொழில் தொடக்கம்: தனக்கு எந்த வேலையும் செட்டாகாததால் பிறரிடம் இருந்து ஐஸ்கிரீம் வாங்கி விற்பனை செய்யலாம் என்ற முடிவுக்கு வந்தார் பிரபாகர். அதற்காக பிரீசர்களை வாங்கினார். ஆனால் அவருக்கு ஐஸ்க்ரீம் சப்ளை செய்ய எந்த ஒரு டீலரும் முன் வரவில்லை. இதையெல்லாம் நினைத்து மனம் தளராமல் தானே சொந்தமாக ஐஸ்கிரீம் தயாரிக்க முடிவு செய்தார். இந்த முடிவுதான் அவருடைய வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது.
வீட்டில் பலமுறை முயற்சி செய்து இலவசமாக அக்கம் பக்கத்தினருக்கு கொடுத்து டேஸ்ட் பார்க்கச் சொன்னார். தனது சொந்த முயற்சியில் ஐஸ்கிரீம் செய்ய கற்றுக் கொண்டார். 1975-ஆம் ஆண்டு மே 1-ஆம் தேதி அன்று மங்களூர் மார்க்கெட் ரோட்டில் பிரபாகர் காமத் தன்னுடைய முதல் "ஐடியல் ஐஸ்கிரீம்" பார்லரைத் திறந்தார்.
ஆரம்பத்தில் 14 வரைட்டியில் ஐஸ்கிரீம் விற்பனை செய்தார். இவருடைய ஐஸ்கிரீமுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. சுமார் இரண்டு ஆண்டுகளிலேயே வரிசையில் நின்று ஐஸ்கிரீம் வாங்கும் அளவுக்கு இவருடைய கடை பிரபலம் அடைந்தது. சுவை, தரம் மற்றும் மலிவான விலை ஆகியவை ஐடியல் ஐஸ்கிரீம் பிராண்டை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தது. காலப்போக்கில் மங்களூரில் இருந்த பிரபலமான பிராண்டுகளுக்கு இணையாக ஐடியல் ஐஸ்கிரீமும் பெயர் பெற்றது.
நிறுவனத்தின் வளர்ச்சி: பிரபாகர் காமத்தின் மகன் 2003-ஆம் ஆண்டில் ஐடியல் ஐஸ்கிரீம் பிராண்டை தனி நபர் நிறுவனமாக மாற்றினார். 2001 ஆம் ஆண்டிலேயே சில்லறை விநியோகத்திலும் ஈடுபடத் தொடங்கினர். மங்களூரைத் தாண்டி பிற பகுதிகளுக்கும் தங்களுடைய தயாரிப்பைக் கொண்டு சென்றனர்.
தற்போது கர்நாடகா, கேரளா, கோவா மாநிலங்களில் உள்ள 8500-க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களுக்கு ஐடியல் ஐஸ்கிரீம் விநியோகம் செய்யப்படுகிறது. ஐஸ்கிரீம், கேண்டி ஸ்டிக், கோன்கள், சண்டேஸ் மற்றும் பழங்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் பிற தயாரிப்புகள் என சுமார் 150 க்கும் மேற்பட்ட ப்ராடக்டுகளை விற்பனை செய்து வருகின்றனர்.
கோடிகளைத் தாண்டிய வருவாய்: ஐசிஆர்ஏ தகவல்களின்படி ஐடியல் ஐஸ்கிரீம் நிறுவனம் 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி 22-ஆம் தேதி அன்று பதிவு செய்யப்பட்ட தனியார் நிறுவனமாக மாற்றப்பட்டது.டிராக்ஸன் தரவுகளின் படி ஐடியல் ஐஸ்கிரீம் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் 2025-ஆம் நிதியாண்டில் சுமார் ரூ.153.2 கோடி டர்ன்ஓவர் செய்துள்ளது. இதில் நிகர லாபம் மட்டும் ரூ .16.7 கோடி என கூறப்படுகிறது.
ஆனால் இந்த வெற்றியை பார்ப்பதற்கு முன்னரே பிரபாகர் காமத் எதிர்பாராத விபத்து ஒன்றில் சிக்கி காலமானார். மக்களால் அன்போடு "ஐடியல் பப்பா" என்று அழைக்கப்பட்ட பிரபாகர் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்த வணிகம் தான் இன்று கோடிகளில் வருமானம் ஈட்டி தருகிறது.


Click it and Unblock the Notifications
