நைக்கின் புதிய தலைமை செயல் அதிகாரியாக எலியட் ஹில் என்ற நபர் நியமிக்கப்பட்டுள்ளார். எலியட் ஹில் 1988-ஆம் ஆண்டு நைக்கில் ஒரு பயிற்சியாளராக தனது தொழிலைத் தொடங்கியுள்ளார். மேலும் 32 ஆண்டுகளுக்கும் மேலாக நைக் நிறுவனத்தில் பணியாற்றி, உலகளாவிய பிராண்டை வழிநடத்தும் நிலைக்கு உயர்ந்துள்ளார். விடா முயற்சி மற்றும் கடின உழைப்பு ஒருவருக்கு எவ்வளவு பெரிய வெற்றியை பெற்று தரும் என்பதற்கு எலியட் ஒரு சிறந்த உதாரணம்.
1988-ஆம் ஆண்டு தொடங்கி 2024-ஆம் ஆண்டு வரையில், சுமார் 32 ஆண்டுகளுக்கும் மேலாக விசுவாசமாக பணியாற்றி வரும் எலியட் ஹில், நைக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்க உள்ளார். தி இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிக்கையின்படி, அக்டோபர் 14-ஆம் தேதி அன்று ஜான் டோனாஹோவுக்குப் பிறகு எலியட் ஹில் அதிகாரப்பூர்வமாக தனது புதிய பதவியை ஏற்றுக்கொள்ள உள்ளார். அவரது நியமனம் நைக்கிற்கு ஒரு முக்கிய நிகழ்வாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சமீப காலமாக நைக் பிராண்ட் விற்பனை வீழ்ச்சியை எதிர்கொண்டு வருகிறது மற்றும் ஆன் மற்றும் டெக்கர்ஸ் ஹோகா போன்ற வளர்ந்து வரும் ப்ராண்டுகளுடன் போட்டியை எதிர்கொண்டு வருகிறது.
எலியட் ஹில்லின் வளர்ச்சி குறித்த பதிவு இணையத்தில் பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. ஜோ பாம்ப்லியானோ, ஹில்லின் லிங்க்டின் ப்ரோபைலை X தளத்தில் பகிர்ந்திருந்தார். இந்தப் பதிவு கிட்டத்தட்ட 2 மில்லியன் வியூஸ்களுடன் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
எலியட் ஹில்லின் விடா முயற்சி அவரை தலைமைச் செயல் அதிகாரியாகும் அளவிற்கு உயர்த்தியுள்ளது. இவருடைய பதிவுக்கு பலரும் கமெண்ட்களை தெரிவித்து வருகின்றனர். அதில் ஒரு பயனர் "இதுதான் மிகச்சிறந்த லிங்க்டின் ப்ரொபைல்" என்று கமெண்ட் செய்திருந்தார்.
இவருடைய வெற்றி ஒரே இரவில் கிடைத்ததல்ல. அவருடைய அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு இது ஒரு சான்றாகும். ஓஹியோ பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை முடித்த பிறகு எலியட் இன்டர்ன்ஷிப்க்காக நைக் நிறுவனத்தில் இணைந்துள்ளார். அதன் பிறகு விரைவில் அந்த நிறுவனத்திலேயே பல வெற்றிகளை குவித்துள்ளார். டீம் ஸ்போர்ட்ஸ் இயக்குனர் உட்பட பல்வேறு ரோல்களிலும் பணியாற்றியுள்ளார். மேலும் 2013-ஆம் ஆண்டில் ஜியாகிராபிஸ் மற்றும் சேல்ஸ்-இன் தலைவரானார். இந்தப் பதவி நைக்கின் தடத்தை உலகளவில் விரிவுபடுத்தும் ஒரு முக்கிய பதவியாகும்.
ஹில் 2020-ஆம் ஆண்டு ஓய்வு பெற்றாலும், அவர் மீண்டும் நைக்கிற்கு திரும்புவது, நிறுவனத்தை வளர்ச்சி பாதையை நோக்கி கொண்டுச் செல்லும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
பயிற்சியில் இருந்து தலைமை நிர்வாக அதிகாரி வரையிலான ஹில்லின் பயணம் தொழில் வெற்றி மட்டுமல்ல, விசுவாசம் மற்றும் விடாமுயற்சியின் வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. ஃபார்ச்சூன் அறிக்கையின்படி, ஹில்லின் சம்பளம் ரூ. 225 கோடி என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications