இந்தியா - சீனா இடையே தொடர்ந்து எல்லைப் பிரச்சனை இருந்து வரும் நிலையில், சமீப காலமாக அமைதி நிலவி வருகிறது. இதனால், இருநாடுகளுக்கும் இடையேயான உறவு மேம்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சீனா தற்போது ஒரு மிகப்பெரிய சதித்திட்டத்தை கையில் எடுத்துள்ளது. தென்கிழக்கு திபெத்தில் கைலாய மலையில் உருவாகும் "பிரம்மபுத்திரா நதி" சீனா, இந்தியா, வங்கதேசத்தை வளமாக்கி இறுதியாக வங்காள விரிகுடாவில் கலக்கிறது. இந்த நதி மொத்தம் 2,900 கிலோமீட்டர் வரை ஓடுகிறது. மேலும், உலகின் மிக நீண்ட நதிகளில் பிரம்மபுத்திரா நதியும் ஒன்று.
இந்த சூழலில் தான், சீனா இந்திய எல்லைக்கு அருகே அருணாச்சலப் பிரதேசத்தில் இருந்து சுமார் 50 கிமீ தொலைவில் ஒரு பிரம்மாண்ட அணை கட்ட திட்டமிட்டுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டும் பணி நேற்று நடைபெற்ற நிலையில், இதில் சீன பிரதமர் லி கியாங் பங்கேற்றுள்ளார். பொருளாதார ரீதியாவும், ராஜதந்திர ரீதியாகவும் திபெத்தை இணைக்கும் இத்திட்டத்திற்கு சீனா, கடந்த டிசம்பரில் ஒப்புதல் அளித்தது. கடந்த 4 ஆண்டுகளாக இழுபறியில் இருந்த இந்த திட்டத்தை தற்போது தீவிரமாக செயல்படுத்த சீனா முயற்சித்து வருகிறது.

இந்த அணை கட்டுவதற்கு மொத்தம் ரூ.14.46 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அணையை நீர்மின் திட்டத்திற்காக சீனா பயன்படுத்த உள்ளது. இங்கு மொத்தம் 5 நீர்மின் நிலையங்கள் அமையவுள்ளன. இந்த அணை கட்டப்பட்டால், பிரம்மபுத்திரா நதி நீரோட்டம் தடுத்து நிறுத்தப்படும். இதன் மூலம் இந்தியாவுக்கு கிடைக்க வேண்டிய நீர் கிடைப்பதில் சிக்கல் உண்டாகும். அதேபோல், கனமழை காலங்களில் அணையில் இருந்து சீனா அதிகப்படியான தண்ணீரை திறந்துவிட்டால், இந்தியாவில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இதனால், சீனாவின் அணைக் கட்டும் திட்டத்திற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. பிரம்மபுத்திரா நதியை தடுத்து அணை கட்டினால், கடைநிலை பகுதிகள் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் இந்த பாதிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கடந்த ஜனவரி மாதம் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வலியுறுத்தியது. ஆனால், இந்த அணை கட்டுவதால், எந்த பாதிப்பும் ஏற்படாது என சீனா தெரிவித்தது.
அணைக் கட்டுவது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அருணாச்சலப் பிரதேச முதல்வர் பெமா காண்டு, "சீனாவை எப்போதும் நம்ப முடியாது. அவர்கள் எந்த நேரத்தில் எது வேண்டுமானாலும் செய்யலாம். சீனா இந்த அணையை கட்டினால், இந்திய பழங்குடியின மக்கள் மற்றும் நமது வாழ்வாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும். தண்ணீர் வெடிகுண்டாக இந்த அணையை சீனா பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. இந்த அணையை கட்டி முடித்துவிட்டால், நமது சியாங் மற்றும் பிரம்மபுத்திரா நதிகள் வறண்டு போகும் என்று தெரிவித்திருந்தார்.


Click it and Unblock the Notifications