ஐதராபாத்: இந்திய அரசியல் களத்தை அதிரவைத்த தேர்தல் பத்திரங்களில், சுமார் 966 கோடி ரூபாய் வாங்கிய இரண்டாவது பெரிய நன்கொடை செய்த நிறுவனமாக விளங்கும் மேகா இன்ஜினியரிங் அண்ட் இன்ஃப்ராஸ்டக்சர்ஸ் (MEIL) மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வரும் நிலையில், மோடி 3.0 ஆட்சியில் பெரும் திட்டத்தை வாங்கியுள்ளது.
அணுசக்தி மூலம் மின்சாரம் தயாரிப்பதில் மத்திய அரசு தீவிரமாக இருக்கிறது. இதற்காக கர்நாடகா மாநிலத்தில் புதிதாக அணு உலைகள் அமைக்கப்பட உள்ளன. இந்த திட்டப் பணிக்கான ஒப்பந்தமானது ஹைதராபாத்தை சேர்ந்த மேகா இன்ஜினியரிங் மற்றும் இன்ஃபிராஸ்டெக்சர் லிமிடெட் நிறுவனத்திடம் (Megha Engineering & Infrastructures (MEIL)) ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அணு உலைகள் அமைப்பது, அதில் மின்சாரம் தயாரிப்பது பின்னர் அதனை பகிர்ந்தளிப்பது என்பன உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கும் இந்திய அணுசக்தி கழகம் தான் பொறுப்பு. கர்நாடகா மாநிலம் கைகா என்ற இடத்தில் இரண்டு அணு உலைகள் அமைக்கப்படும் என அணுசக்தி கழகம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதற்கான கட்டுமான பணிகளை தான் தற்போது மேகா நிறுவனம் பெற்றுள்ளது.
இந்த திட்டத்தின் மதிப்பு 12,800 கோடி ரூபாய் ஆகும். இதன் மூலம் மேகா இன்ஜினியரிங் நிறுவனம் முதன்முறையாக அணுசக்தி துறையில் கால் பதிக்க உள்ளது. அணு உலை அமைப்பதற்கான பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமான பணிகளுக்கான ஒப்பந்தம் இது.
இதுவரை அணுசக்தி கழகம் வழங்கிய மிக அதிகபட்ச மதிப்பிலான ஒப்பந்தம் இது என சொல்லப்படுகிறது. கர்நாடக மாநிலத்தின் கைகா என்ற இடத்தில் 700 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அணு உலைகளை ஒப்பந்தம் இதுவாகும்.
ஹைதராபாத்தை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரக்கூடிய மேகா இன்ஜினியரிங் நிறுவனம் பெல் மற்றும் எல்&டி நிறுவனங்களுக்கு போட்டியாக ஒப்பந்த புள்ளி கோரி , ஒப்பந்தத்தை கைப்பற்றியுள்ளது.
மேகா நிறுவனம் இதுவரை மேற்கொண்ட பணிகளிலேயே இது மிக முக்கியமானது என்றும் முதல்முறையாக தங்கள் நிறுவனம் அணுசக்திக்கு துறையில் கால் பதிக்க போவதாகவும் இந்த நிறுவனத்தின் இயக்குநரான சுப்பையா தெரிவித்துள்ளார். இந்தியா தன்னுடைய எரிசக்தி தேவைகளில் தன்னிறைவு பெறுவதற்கு இந்த திட்டம் மிகப்பெரிய அளவில் உதவும் என்றும் சுப்பையா கூறியுள்ளார்.
இந்த திட்டத்திற்கான ஒப்பந்தம் கோரும் பணி கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கியது, தொழில்நுட்ப ஒப்பந்தத்திற்கான பணிகள் கடந்தாண்டு அக்டோபர் மாதம் தொடங்கின. quality-cum-cost-based
என்ற அடிப்படையில் நிறுவனங்களை தேர்வு செய்து ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட நிறுவனம் இதுவரை மேற்கொண்டுள்ள பணிகள், அந்த நிறுவனத்திடம் இருக்கக்கூடிய தொழில்நுட்ப நிபுணத்துவம் , நிறுவனம் குறிப்பிடக்கூடிய தொகை ஆகிய அனைத்தையும் கருத்தில் கொண்டு தான் இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications