ஏஐ தொழில்நுட்பத்தில் யார் முன்னணியில் இருப்பது என்ற போட்டி டெக் நிறுவனங்கள் மத்தியில் தீவிரமடைந்துள்ளது. மெட்டா, கூகுள் , மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் மிக தீவிரமாக ஏஐ-இல் பணத்தை கொட்டி வருகின்றன. இந்நிலையில் மெட்டா நிறுவனர் மார்க் ஜக்கர்பெர்க் ஏஐ வைத்து எடுத்த ஒரு முயற்சி தான் தற்போது பேசு பொருளாக உள்ளது.
மெட்டா நிறுவனர் மார்க் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தனது நிறுவனத்தை முழுமையாக மாற்றி அமைக்க ரகசிய திட்டம் போட்டு அதனை பாதியிலேயே கைவிட்டிருக்கிறார். அதாவது ஊழியர்களின் பெரும்பான்மையான வேலையை ஏஐ ஏஜெண்டுகள் பார்த்து கொள்ளும் வகையில் 60% ஊழியர்களை பணிநீக்கம் செய்து அதற்கு மாற்றாக ஏஐ பயன்படுத்த திட்டமிட்டுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் ஹவாய் தீவில் உள்ள தனது இல்லத்தில் நடைபெற்ற தலைமை செயற்குழு கூட்டத்தில், மார்க் ஜக்கர்பெர்க் மற்றும் அவரது குழுவினர் Project OT என்ற இரகசிய குறியீட்டு பெயரின் கீழ் ஒரு திட்டம் தீட்டியுள்ளனர். இதன் முக்கிய நோக்கம், மெட்டா நிறுவனத்தை ஒரு முழுமையான AI-native நிறுவனமாக மாற்றுவதாகும். அதாவது, ஆயிரக்கணக்கான மனித ஊழியர்கள் செய்துவரும் அன்றாட வழக்கமான பணிகளை ஏஐ ஏஜெண்டுகள் கவனித்துக் கொள்ளும். இந்த ஏஐ அமைப்புகளை சில திறமையான மனித ஊழியர்களை கொண்ட சிறிய குழுக்கள் மேற்பார்வையிடும்.
இந்த மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் சில முக்கிய குழுக்களின் அளவை 60 சதவீதம் வரை குறைக்க நிர்வாகம் திட்டமிட்டிருந்தது. இதில் முதல் கட்டமாக மே மாதத்தில் சுமார் 10 சதவீத ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இரண்டாவதாக நவம்பரில் 50% பேரை பணிநீக்கம் செய்ய திட்டமிடப்பட்டதாம்.ஆனால் இந்த திட்டம் திடீரென கைவிடப்பட்டது.
ஏனெனில் மார்க் எதிர்பார்த்த அளவுக்கு ஏஐ ஏஜெண்டுகளின் உற்பத்தி திறன் இல்லை. ஏஐ மென்பொருள் தளங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டாலும், அது எதிர்பார்த்த பலனை தரவில்லை. ஜூலை மாதத்தில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில், ஏஐ ஏஜெண்டுகளின் வளர்ச்சி தாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வேகமடையவில்லை என ஜக்கர்பெர்க்கே ஒப்புக்கொண்டார்.
இந்நிலையில் தான் ஊழியர்கள் பணிநீக்க நடவடிக்கையை மார்க் கைவிட்டிருக்கிறார். ஏஐ என்பது மனிதர்களை முழுமையாக இடமாற்றம் செய்வதற்கு பதிலாக, சிறிய மற்றும் திறமையான குழுக்களுக்கு உதவும் ஒரு கருவியாக மட்டுமே செயல்படும் என்ற கான்செப்டுக்கு மாறி இருக்கிறார்.
இருப்பினும், நிறுவனத்தின் ஏஐ மூலதன செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், அதனை மெருகேற்றும் பணிகளை அவர் தீவிரப்படுத்தி வருகிறாராம். தற்போதைக்கு இந்த திட்டத்தை கைவிட்டிருந்தாலும் மீண்டும் வருங்காலத்தில் ஆள் குறைப்பு திட்டங்கள் முற்றிலும் தவிர்க்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மனிதர்களை நீக்கிவிட்டு முழுமையாக ஏஐ மூலம் நிறுவனத்தை நடத்த நினைத்த ஜக்கர்பெர்க்கின் கனவு இப்போதைக்கு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றே நிபுணர்கள் கூறுகின்றனர்.
இனி வரும் காலங்களில் மெட்டா மட்டுமல்ல பல டெக் நிறுவனங்களும் இதனை நோக்கி தான் செல்லும் என சொல்லப்படுகிறது. ஏற்கனவே கோடிங் உள்ளிட்ட வேலைகள் ஏஐ வசம் சென்றுவிட்டன. எனவே வருங்காலங்களில் நிறுவனங்களில் நம் வேலைகளில் ஏஐ ஆதிக்கம் அதிகமாகவே இருக்க போகிறது.


Click it and Unblock the Notifications

