மார்க் ஜூக்கர்பெர்குக்கு சொந்தமான மெட்டா நிறுவனம் கடலுக்கு அடியில் கேபிள் இணைப்புகளை வழங்கக்கூடிய ஒரு பிரம்மாண்டமான திட்டத்தை கையில் எடுத்துள்ளது. அமெரிக்காவிலிருந்து தென்னாபிரிக்கா ,இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு கடலுக்கு அடியில் கேபிள் இணைப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு அதற்காக 10 பில்லியன் அமெரிக்க டாலர்களை செலவிடுவதற்கு மெட்டா நிறுவனம் முன் வந்துள்ளது.
கிட்டத்தட்ட 40,000 கிலோ மீட்டர் தொலைவுக்கு கடலுக்கு அடியில் கேபிள் இணைப்புகளை வழங்குவதற்கு இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சர்வதேச அளவில் மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் அப் ஆகிய தளங்கள் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இதனால் இந்த நிறுவனத்தின் சர்வர்கள் பயன்பாடு உலக அளவில் அதிகமாகி இருக்கிறது. சர்வதேச அளவில் சுமார் 10% டிராபிக் இந்த மூன்று தளங்களால் மட்டுமே ஏற்படுகிறதாம். மொபைலில் இணைய வசதியை பயன்படுத்துபவர்களில் 22 சதவீதம் டிராபிக் இந்த மூன்று சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதால் ஏற்படுகிறது.
எனவே தான் மெட்டா நிறுவனம் தங்களுக்கு சொந்தமாகவே பைபர் ஆப்டிக் கேபிள் நெட்வொர்க்கை வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளது. இது முழுக்க முழுக்க மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமானதாக மட்டுமே இருக்கும். இதற்கான திட்டமிடல் மற்றும் பட்ஜெட்டுகளை முடிவு செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கிட்டதட்ட 10 மில்லியன் டாலர் அளவிற்கு இதற்காக ஒதுக்கீடு செய்ய மெட்டா நிறுவனம் முன் வந்துள்ளதாம். இந்த தகவலை நடப்பு ஆண்டு இறுதிக்குள்ளேயே மெட்டா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிடும் என்றும் எந்தெந்த வழித்தடங்களில் எல்லாம் கேபிள் இணைப்புகளை வழங்கப் போகிறது என்பதையும் அறிவிக்கும் என சொல்லப்படுகிறது.
இருந்தாலும் இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கு மெட்டா நிறுவனத்திற்கு காலதாமதம் ஆகும் என கூறப்படுகிறது. ஏனெனில் இவ்வாறு கடலுக்கு அடியில் கேபிள் இணைப்புகளை வழங்குவதற்கு கப்பல்களை தான் பயன்படுத்த வேண்டும். ஆனால் தற்போது கப்பல்களுக்கான டிமாண்ட் அதிகமாக இருப்பதால் முன்னரே புக் செய்தால் மட்டுமே இது போன்ற வேலைகளுக்கு கப்பல்கள் கிடைக்குமாம்.
முதல் கட்டமாக மெட்டா நிறுவனம் அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதியான விர்ஜீனியா கடற்கரையிலிருந்து தென்னாபிரிக்காவின் கேப் டவுன் மற்றும் டர்பன், இந்தியாவின் சென்னை மற்றும் மும்பை ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் அமைக்கப்பட இருக்கிறதாம்.
பின்னர் இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவின் டார்வின் நகரம் வரை இந்த கேபிள் இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. w வடிவத்தில் இந்த கேபிள் இணைப்பினை வழங்க திட்டமிட்டு இருப்பதால் இந்த திட்டத்திற்கு டபிள்யூ கேபிள் என மெட்டா நிறுவனம் பெயர் சூட்டி இருக்கிறதாம்.


Click it and Unblock the Notifications