சென்னை: இந்தியாவில் பெரும்பாலானோர் நான்கு சக்கர வாகனங்களைத் தங்கள் தேவைகளுக்காகப் பயன்படுத்துகின்றனர். குறுகிய தூர பயணங்களுக்கும், ட்ராஃபிக் நெரிசல்களில் செல்லவும் இவை மிகவும் வசதியாக இருக்கின்றன. ஆனால், பெட்ரோலிய விலை உயர்வு மற்றும் காற்று மாசுபாடு ஆகிய பிரச்சனைகள் காரணமாக, மின்சார வாகனங்களின் (Electric Vehicles - EVs) தேவை அதிகரித்து வருகிறது. EV கார்கள் பொதுவாக விலை உயர்ந்ததாகவும் மிகப்பெரியதாகவும் இருக்கும். இங்குதான் மைக்ரோ எலெக்ட்ரிக் வாகனங்கள் (Micro EVs) முக்கிய பங்கு வகிக்கின்றன.
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ஒரே ஒரு காரையே வைத்திருக்கின்றனர். அந்த ஒரே ஒரு காரை வைத்து தான் பல தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்கின்றனர். குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வது, நெரிசலான சாலைகளில் ஓட்டுவது, விடுமுறைக்கு குடும்பத்துடன் பயணம் சொய்வது போன்ற அனைத்தையும் அந்த ஒரு காரை கொண்டு தான் செய்கின்றனர். சில நேரங்களில் இது போன்ற ஒரு காரை வைத்து பயணம் செய்வது சரி என்று தோன்றினாலும், இதனால் சில சிக்கல்களும் உள்ளன அது என்னவென்றால் அளவு பெரியதாக இருப்பதால் ஒருவர் செல்வதற்கும் தேவையின்றி பெரிய கார்களையே பயன்படுத்துகின்றனர்.

ஐரோப்பாவில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஃபியட் டோப்போலினோ (Fiat Topolino EV) மின்சார வாகனத்தை பார்த்திருக்கிறீர்களா? இந்த கார் 1 மணி நேரத்திற்கு 45 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. இருவர் மட்டுமே அமர்ந்து செல்லும் இந்த EV கார் அந்நாட்டு மக்களுக்கு பயன்படும் வகையில் உள்ளது. இது போன்ற சிறிய அளவிலான கார்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டால் போக்குவரத்து நெரிசலை சிறிது கட்டுப்படுத்தலாம்.
இந்தியாவில் அனைத்து இடங்களுக்கும் பெரிய அளவிலான கார்களை எடுத்துச் செல்வது அவ்வளவு சுலபமானதாக இருக்காது. இதனைக் கருத்தில் கொண்டு REVA எலக்ட்ரிக் கார் கம்பெனி மிகக் குறைந்த விலையுள்ள, 2 இருக்கைகளைக் கொண்ட EV காரை அறிமுகம் செய்தது. இந்தியாவில் மைக்ரோ எலக்ட்ரிக் வாகனங்களின் முன்னோடியாக REVA கார் கருதப்படுகிறது. 1994 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட REVA, மலிவு விலை, குறைந்த இயக்கச் செலவு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற அம்சங்களுடன் இந்திய மக்களிடையே மின்சார வாகனங்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
REVA காரின் வெற்றிக்குப் பிறகு, பல புதிய மைக்ரோ எலக்ட்ரிக் வாகனங்கள் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டன. அவற்றில் சமீபத்தியது MG Comet ஆகும். இது மலிவு விலையில் கிடைக்கும் மைக்ரோ எலக்ட்ரிக் வாகனமாகும், இது நகர்ப்புற பயணங்களுக்கு ஏற்றது. இது பார்ப்பதற்கும் சிறிய அளவில் இருக்கும் நம்மில் பலர் இது போன்ற கார்களை சோப்பு டப்பாக்கள் போல இருக்கிறது என்று கேலியும் செய்திருப்போம்.
இது போன்ற கார்கள் இருக்கும் இடத்திற்கு ஏற்ப அதன் பயன்கள் இருக்கும். உதாரணமாக நீங்கள் புறநகர் பகுதிகளில் இருந்து பக்கத்தில் இருக்கும் இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று நினைத்தால், இதுபோன்ற கார்கள் சிறந்த தேர்வாக இருக்கும். அதுவே நீண்ட தூரம் செல்ல வேண்டும் என்று நினைத்தால் அங்கு தான் பிரச்சனை.
2000 ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில், இந்தியாவில் பிரீமியம் ஹாட்ச்பேக் கார்கள் மிகவும் பிரபலமாக இருந்தன. பின்னர், கடந்த 10 முதல் 12 ஆண்டுகளில் SUV கார்களுக்கு அதிகம் முக்கியத்தை மக்கள் கொடுக்க தொடங்கினர். எரிபொருள் தேர்வு செய்வதிலும் மாற்றம் ஏற்பட்டது. இதனால் டீசல் கார்களின் வரத்து குறைந்து, பெட்ரோல் கார்களின் விற்பனை அதிகரித்தது. சில ஹைப்ரிட் கார்களும் சந்தையில் மக்கள் மனத்தைக் கவர்ந்து வருகின்றன.
EV கார்களின் நன்மைகள்: EV கார்களைப் பயன்படுத்துவதால், அதிகமான செலவுகள் ஏற்படாது. 2 முதல் 6 மணி நேரம் பேட்டரி சார்ஜ் செய்தால் போதுமானது. EV கார்கள் சுற்றுச்சூழலுக்கு ஏற்றவை. ஆனால் இதை வைத்து நீங்கள் உங்களுடைய குடும்பத்தினர் அனைவரையும் சேர்த்துக்கொண்டு கோவாவிற்கு செல்ல முடியுமா என்று கேட்டால்.. அது முடியாது. அதாவது எந்த அளவிற்கு நன்மைகள் இருக்கிறதோ, அதேபோல EV கார்களில் சில பிரச்சனைகளும் இருக்கிறது.
மின்சார வாகனங்களின் குறைபாடுகள்: நீண்ட தூரப் பயணங்களுக்கு EV கார்கள் ஏற்றவை அல்ல. குறைவான பேட்டரி திறன் காரணமாக அடிக்கடி சார்ஜ் செய்ய வேண்டிய நிலைமை ஏற்படலாம். மேலும் EV கார்கள் பெட்ரோல் கார்களை விட விலை அதிகம்.
உதாரணமாக, மிகவும் பிரபலமான டாடா நெக்ஸான் காரை எடுத்துக் கொண்டால், பெட்ரோல் டாடா நெக்ஸான் கார்களை விட EV டாடா நெக்ஸான் கார்கள் 16 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை அதிக விலை கொண்டது. புறநகர்ப் பகுதிகளில் குறைவான தூரம் பயணம் செய்யம் நபர்களுக்கு EV கார்கள் லாபகரமாக இருக்கலாம். அனால் மின்சார வாகனங்களின் பேட்டரி மாற்றுச் செலவு அதிகமாக இருப்பதும் ஒரு குறைபாடு.
மின்சார வாகனங்கள் உற்பத்தி இந்தியாவில் அதிகரித்தாலும் அவற்றின் விலையை குறைப்பதும் நீண்ட தூரம் பயணிக்கும் வகையில் அவற்றை மாற்றியமைப்பதும், சிறிய அளவில் மைக்ரோ EV கார்களை உற்பத்தி செய்வதும் விற்பனையை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது


Click it and Unblock the Notifications