இந்தியா ஸ்மார்ட்போன் சந்தையை மொத்தமாக வெளிநாட்டு பிராண்டுகள் ஆதிக்கம் செலுத்தும் வேளையில், இந்திய பிராண்டுகள் பெரியளவில் வளர்வதற்கான வாய்ப்புகள் தற்போது உருவாகியுள்ளது. முன்பு இந்திய பிராண்டுகள் சீனாவில் தயாரிக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களையே இந்தியாவில் விற்பனை செய்ய வேண்டிய சூழ்நிலை இருந்தது.
ஆனால் தற்போது ஸ்மார்ட்போன் தயாரிப்புக்கான அனைத்து மூலக்கூறுகளின் தயாரிப்பு தளமும், திறனும் இந்தியாவில் இருக்கும் காரணத்தால் உள்நாட்டு பிராண்டுகள் உலக சந்தையை நோக்கிப் படையெடுக்கும் காலம் உருவாக்கியுள்ளது என தெரிவித்துள்ளார் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரான ராஜேஷ் அகர்வால்.

சமீபத்தில் லக்னோவில் நடந்த தொழிலாளர்கள் கூட்டத்தில் பேசிய ராஜேஷ் அகர்வால், தற்போது எங்களுடைய மைக்ரோமேக்ஸ் பிராண்டுக்கு மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. ஒருபக்கம் நாங்கள் கான்டிராக்ட் உற்பத்தியாளராக Bhagwati Products மூலம் இயங்கும் வாய்ப்பும், மைக்ரோமேக்ஸ் பிராண்டின் கீழ் சொந்தமாக ஸ்மார்ட்போன் விற்பனை செய்யும் வாய்ப்பும் எங்களுக்கு உள்ளது.
இத்தகைய வாய்ப்பு கொண்ட ஓரே இந்திய நிறுவனம் நாங்கள் மட்டுமே என்பதால் மீண்டும் மைக்ரோமேக்ஸ் அறிமுகம் செய்ய ஆர்வம் அதிகமாக உள்ளதாகத் தெரிவித்தார் ராஜேஷ் அகர்வால். இதேபோல் தற்போதைய அரசின் கொள்கையும், முதலீட்டுக்கும், குறிப்பாக எலக்ட்ரானிக்ஸ் சப்ளை செயின், ப்ராடெக்ட் டிசைன் பிரிவுக்கான கொள்கை மிகவும் சாதகமாக உள்ளது.
இதனால் இந்திய பிராண்டுகளுக்கு இதைவிடச் சிறந்த வாய்ப்பு கிடைக்காது என தெரிவித்தார். ஒரு காலத்தில் ஒப்பந்த உற்பத்தியாளராக இருந்த பல சீன பிராண்டுகள் தற்போது சொந்த பிராண்டில் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து சாம்சங், ஆப்பிள் உடன் போட்டிப்போட்டு வரும் வேளையில், இந்திய பிராண்டுகளுக்கும் இதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. இதேவேளையில் இந்தியாவில் மலிவு விலை போன்களின் பிரிவு தற்போதும் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது.
சிப், உதிரிபாகங்கள், உற்பத்தி செலவுகள் என ஸ்மார்ட்போன்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில் 10000 ரூபாய் அளவீட்டில் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான பிராண்டுகள் மட்டுமே இருக்கும் வேளையில் இந்திய பிராண்டுக்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கும் காரணத்தால் இப்பிரிவில் பெரியளவில் ஆதிக்கம் செலுத்தும் வாய்ப்பு பெற்றுள்ளது.
சமீபத்தில் சாம்சங் மற்றும் சியோமி நிறுவனங்கள், தற்போது சந்தையில் விற்பனையில் இருக்கும் 41 மாடல்களின் விலையை சுமார் 18.75 சதவீதம் வரையில் உயர்த்தியுள்ளது.


Click it and Unblock the Notifications
