நொய்டா: மைக்ரோ மேக்ஸ் நிறுவனம் புதிதாக சிப் தயாரிக்கும் தொழிலில் இறங்கியுள்ளது. இதற்காக மைக்ரோமேக்ஸ் மற்றும் தைவானை சேர்ந்த சிப் தயாரிப்பு நிறுவனமான பைஷன் (Phison) ஆகியவை இணைந்து இந்தியாவில் மிகப்பெரிய சிப் தயாரிப்பு ஆலையை நிறுவ இருக்கின்றன.
எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான மைக்ரோமேக்ஸ் தைவானை சேர்ந்த ஸ்டோரேஜ் சிப் தயாரிப்பு நிறுவனமான பைஷனுடன் இணைந்து எம்ஐபிஹெச்ஐ (MiPhi) என்ற பெயரில் ஒரு கூட்டு நிறுவனத்தை தொடங்கியுள்ளது. இந்தியாவில் செயல்பட போகும் இந்த கூட்டு நிறுவனம் நொய்டாவில் உற்பத்தி ஆலையை நிறுவ இருக்கிறது.

இந்த ஆலையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கு தேவையான சிப்புகள் வடிவமைக்கப்பட்டு உற்பத்தி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது சர்வதேச அளவில் டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் NAND controller மற்றும் NAND storage தொழில்நுட்பங்களில் தைவானை சேர்ந்த பைஷன் நிறுவனம் தான் முன்னணி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தோடு இணைந்து புதிய கூட்டு நிறுவனத்தை உருவாக்கியிருக்கிறோம் என மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராகுல் ஷர்மா தெரிவித்துள்ளார். இந்த கூட்டு நிறுவனத்தில் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் 55 சதவீத பங்குகளையும் பைஷன் நிறுவனம் 45 சதவீத பங்குகளையும் கொண்டிருக்கும்.
ஏஐ சர்வர்களுக்கு தேவையான ஸ்டோரேஜ் சிப்புகளை வடிவமைப்பது மற்றும் தயாரிப்பதே தங்களின் முதன்மையான நோக்கம் என ஷர்மா குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் இந்தியாவில் ஜிபியு-க்களுக்கான கட்டண அளவு வெகுவாக குறைந்துவிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கு தேவையான சிப்புகள் குறைந்த விலையில் கிடைக்கும் என்பதோடு மட்டுமில்லாமல் வெளிநாடுகளுக்கும் இதனை ஏற்றுமதி செய்ய முடியும் என தெரிவித்துள்ளார்.
முதல் கட்ட சோதனைகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இந்த சிப்புகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். தற்போதைக்கு உலக அளவில் இதுபோன்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கு தேவையான ஸ்டோரேஜ் தீர்வுகளை ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே வழங்குகின்றன, அந்த துறையில் தங்கள் நிறுவனம் கால் பதிக்க இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த சிப் தொழில்நுட்பத்திற்கு தேவையான ஆட்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு உரிய பயிற்சிகளையும் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் வழங்கும் என அவர் கூறியுள்ளார். முதல் இரண்டு ஆண்டுகளுக்குள் சிப்புகளின் வடிவமைப்பு பணி நிறைவடைந்து விடும் என்றும் அவர் கூறியுள்ளார். இதற்கான அனைத்து பயிற்சிகளையும் பைஷன் நிறுவனம் வழங்கும் என கூறியுள்ளார். சுமார் 1000 பொறியாளர்கள் இந்த குழுவில் இடம் பெறுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications