எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஆட்டோமொபைல் உற்பத்திக்கும், ஏற்றுமதிக்கும் அடித்தளமாக இருக்கும் செமிகண்டக்டர் துறையை எப்படியாவது இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதில் குறியாய் இருக்கும் மத்திய அரசுக்கு கிடைத்த ஜாக்பாட் தான் அமெரிக்காவின் மைக்ரான் நிறுவனம். இந்தியாலில் செமிகண்டக்டர் துறையில் முதலீடு செய்வாதாக அறிவித்த பல நிறுவனங்கள், கூட்டணிகள் பெரிய அளவில் முன்னேற்றம் அடைய முடியாமல் உள்ளது.
இந்த நிலையில் அமெரிக்கா - சீனா மத்தியிலான பிரச்சனைக்கு மத்தியில் சீனாவில் இருந்து வெளியேற்றப்பட்ட அமெரிக்காவின் மைக்ரான் இந்தியாவில் தொழிற்சாலை அமைப்பதாக அறிவித்து 3 மாதத்தில் படபடவென அனைத்து ஒப்புதல்களையும் பெற்றும், நிலத்தை தேர்வு செய்து தற்போது பூமி பூஜை போடும் அளவுக்கு வேகமாக உயர்ந்துள்ளது.

குஜராத் மாநிலத்தின் சனந்த் பகுதியில் பல முக்கிய தொழிற்சாலைகள் அமைந்திருக்கும் பகுதியில் தான் அமெரிக்காவின் மைக்ரான் நிறுவனம் செமிகண்டக்டர் டெஸ்டிங் மற்றும் அசம்பிளி தளத்தை அமைக்க உள்ளது. இதற்கான பூமி பூஜை வருகிற சனிக்கிழமை செய்யப்பட உள்ளது. இந்த நிலையில் மத்திய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஐடி துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்னாவ் இந்தியாவின் செமிகண்டக்டர் திட்டத்தை உலகமே பார்த்துக்கொண்டு இருப்பதாக தெரிவித்தார்.
அமெரிக்காவின் மைக்ரான் நிறுவனம் தனது செமிகண்டக்டர் டெஸ்டிங் மற்றும் அசம்பிளி தளத்தை சுமார் 2.5 பில்லியன் டாலர் அதாவது 23000 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்பட உள்ளது. இந்திய செமிகண்டக்டர் துறையில் இதுவரையில் செய்யப்பட்ட மிகப்பெரிய முதலீடாக உள்ளது. இதில் முதல் கட்டமாக மைக்ரான் 825 மில்லியன் டாலர் மட்டுமே முதலீடு செய்ய உள்ளது, மீதமுள்ள தொகையை அடுத்தக்கட்ட பணிகளில் முதலீடு செய்ய உள்ளது.
மைக்ரான் தொழிற்சாலை 2024 முதல் பயன்பாட்டில் வரும் என தெரிகிறது, மேலும் சனிக்கிழமை நடக்கும் பூமி பூஜையில் அஸ்வினி வைஷ்ணவ், குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் மற்றும் மைக்ரான் உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்துக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய செமிகண்டக்டர் திட்டத்தில் முழுமையான ஒப்புதல் பெற்ற முதல் நிறுவனமாக மைக்ரான் திகழ்கிறது.
இதற்கான ஒப்பந்தம் ஜூலை மாதம் பிரதமர் மோடியின் அமெரிக்க சுற்று பயணத்தில் கையெழுத்திடப்பட்டது முக்கியமான விஷயம். மேலும் டிசம்பர் 2024ல் மேடு இன் இந்தியா சிப் தயாரிக்கப்பட்டு வர்த்தக சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாக அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications