அமெரிக்கா: வீடியோ கால், வாய்ஸ் கால், ஆன்லைன் கூட்டங்கள் உள்ளிட்டவற்றை எளிமைப்படுத்தி 20 ஆண்டுகளாக நம் வாழ்வின் அங்கமாக இருந்த ஸ்கைப் (Skype) வரும் மே மாதத்தில் இருந்து செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி மே மாதம் 5ஆம் தேதியில் இருந்து ஸ்கைப் தளத்தை பயன்படுத்த முடியாது. அதற்கு பதிலாக பயனர்கள் டீம்ஸ் செயலியை பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

கடந்த 2003ஆம் ஆண்டு ஸ்கைப் செயலி அறிமுகம் செய்யப்பட்டது. வாய்ஸ் கால், வீடியோ கான்பிரன்சிங் மற்றும் இன்ஸ்டண்ட் மெசேஜிங் உள்ளிட்ட பல அம்சங்கள் கொண்டிருந்ததால் மக்கள் மத்தியில் இது பிரபலமானது. குறிப்பாக ஒரு நாட்டில் இருப்பவர்கள் மற்ற நாடுகளில் இருப்பவர்களை தொடர்பு கொள்ளவும் அலுவலகம் சம்பந்தப்பட்ட ஆன்லைன் கூட்டங்களை நடத்தவும் பெரும் உதவியாக இருந்தது.
கணினி மற்றும் செல்போனிலும் இது பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. எனவே கோடிக்கணக்கான மக்கள் இதனை பயன்படுத்தினர். இதனால் 2005ஆம் ஆண்டிலேயே 50 மில்லியன் பயனர்களை ஸ்கைப் கொண்டிருந்தது. இதனை அடுத்து ஸ்கைப் தளத்தை வாங்க கூகுள் , பேஸ்புக் , மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் இடையே போட்டி ஏற்பட்டது.
2011ஆம் ஆண்டில் மைக்ரோசாப்ட் நிறுவனம் 8.5 பில்லியன் டாலர்கள் செலுத்தி ஸ்கைப் தளத்தை வாங்கியது. அப்போது ஸ்கைப் தளத்தை 150 மில்லியன் பயனர்கள் பயன்படுத்தி வந்தனர். எனவே ஸ்கைப்பில் பல்வேறு நவீன வசதிகளை மைக்ரோசாப்ட் கொண்டு வந்தது. ஆனால் நவீன தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்கு ஏற்ப மைக்ரோசாப்ட் நிறுவனம் டீம்ஸ் என்ற செயலியை அறிமுகம் செய்தது. அதே போல் ஸூம் செயலி வெளியானது.
ஸ்கைப் தளத்துடன் ஒப்பிடும் போது டீம்ஸ், ஸூம் ஆகியவை புதிய வசதிகளை கொண்டிருந்தன. எனவே பயனர்கள் படிப்படியாக ஸ்கைப் தளத்தை விட்டு வெளியேறி புதிய செயலிகளுக்கு மாறத் தொடங்கினர். இதனால் 2020ஆம் ஆண்டில் ஸ்கைப் தளத்தை பயன்படுத்தும் பயனர்கள் எண்ணிக்கை 23 மில்லியனாக குறைந்தது. இதனிடையே கொரோனா பெருந்தொற்று காலத்தில் டீம்ஸ் (Teams) மற்றும் ஸூம் (Zoom) செயலிகள் மேலும் பிரபலமடைந்தன.
இந்நிலையில் தான் மைக்ரோசாப்ட் நிறுவனம் ஸ்கைப் தளம் மே 5ஆம் தேதி முதல் செயல்படாது என அறிவித்துள்ளது. ஸ்கைப் பயனர்கள் தங்களது விவரங்களை கொண்டு டீம்ஸ் செயலியில் லாகின் செய்யலாம் என மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது. அதன் மூலம் பழைய சாட்கள் மற்றும் காண்டாக்ட்ஸ் போன்றவை ஸ்கைப்பில் இருந்து டீம்ஸுக்கு மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டீம்ஸ் செயலியை பிரபலப்படுத்தும் நோக்கில் மைக்ரோசாப்ட் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.
story written : devika


Click it and Unblock the Notifications