டெக் துறையில் உலகின் முன்னணி நிறுவனமாக மைக்ரோசாப்ட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் தலைமை செயல் அதிகாரியாக இந்தியாவை பூர்வீகமாக கொண்ட சத்ய நாதெல்லா இருக்கிறார். நடப்பு ஆண்டில் இவரது சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரியாக இருக்கக்கூடிய சத்ய நாதெல்லா 2024 ஆம் ஆண்டில் 63 சதவீதம் ஊதிய உயர்வு பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது. 2024 ஆம் நிதியாண்டில் இவருக்குர் 79.1 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஊதியமாக வழங்குவது என மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்திய ரூபாய் மதிப்பில் இது 665 கோடி ரூபாய் ஆகும். பொதுவாக இது போன்ற நிறுவனங்களில் ஊதியம் என்பது பங்குகள், ஊதியம் மற்றும் பிற போனஸ்கள் ஆகியவற்றின் தொகுப்பாக இருக்கும். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது சத்ய நாதெல்லா 63 சதவீதம் அதிக ஊதியத்தை பெறுகிறார்.

சத்ய நாதெல்லாவுக்கு கிடைத்த ஊதிய தொகுப்பில் 90 சதவீதம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பங்குகள் மூலமே கிடைத்திருக்கிறது. மைக்ரோசாப்ட் பங்கு மதிப்பு அதிகரிக்கும் போது இவரது ஊதியமும் உயர்கிறது. மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒழுங்குமுறை அமைப்பிடம் தாக்கல் செய்த ஆவணத்தில் இந்த தகவலை தெரிவித்துள்ளது.
2014 ஆம் ஆண்டில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக சத்ய நாதெல்லா பதவி உயர்வு பெற்றார், அதன் பிறகு அவருக்கு கிடைக்கும் மிகப்பெரிய ஊதிய தொகுப்பு இதுவாகும். தன்னுடைய ஊதியத்தை குறைக்குமாறு கேட்டுக் கொண்டதால் தான் 5 மில்லியன் டாலர்கள் குறைக்கப்பட்டு அவருக்கு 79.1 மில்லியன் டாலர்கள் ஊதியமாக கிடைத்திருக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சில மென்பொருள்கள் ஹேக் செய்யப்பட்டது மற்றும் அமெரிக்க சைபர் பாதுகாப்பு மதிப்பாய்வு வாரியம் விசாரணை நடத்தியது ஆகியவற்றுக்கு பொறுப்பு ஏற்றுக் கொண்ட சத்ய நாதெல்லா தாமாக முன்வந்து தன்னுடைய ஊதியத்தை குறைக்கும் படி கேட்டுக் கொண்டாராம்.
ஆனால் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஊதியத்திற்கான கமிட்டி நிறுவனத்தின் செயல் திறனை ஆய்வு செய்ததாகவும் சத்ய நாதெல்லா தன்னுடைய தலைமை பண்பு மூலம் நிறுவனத்தை மிகச் சிறந்த இடத்திற்கு கொண்டு சென்று இருக்கிறார் என்றும் இதற்காகவே அவருக்கு இவ்வளவு பெரிய ஊதிய தொகுப்பினை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது. பல்வேறு பிரச்சினைகள் எழுந்தாலும் சத்யா நாதெல்லா அதனை திறம்படி கையாண்டார் என பாராட்டியுள்ளது.
அடுத்தபடியாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக இருக்கும் ஏமி ஹூட் 25.8 மில்லியன் டாலர்களை ஊதியமாக பெற்றிருக்கிறார். இது கடந்த ஆண்டை விட 30 சதவீதம் அதிகம் ஆகும்.
Written by: Devika


Click it and Unblock the Notifications