பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களும் ஊழியர்களை மேலாண்மை செய்வதில் பெரும் சவால்களை எதிர்கொண்டிருக்கின்றன. நான்கு ஆண்டு காலமாக வீட்டில் இருந்து பணிபுரிந்து வந்தவர்களை அலுவலகத்துக்கு வந்து பணியாற்ற செய்ய வேண்டும் , அலுவலகத்தில் அவர்கள் நெகிழ்வுத் தன்மையுடன் பணியாற்றும் சூழலை கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட பல சவால்கள் இருக்கின்றன.
தற்போது பல்வேறு துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு வேகமாக கால் பதித்து வருகிறது. குறிப்பாக தொழில்நுட்பத் துறைகளில் செயற்கை நுண்ணறிவின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரியான சத்ய நாதெல்லா மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பல நிறுவனங்கள் மிகப்பெரிய உற்பத்தி திறன் முரண்பாட்டை (productivity paradox) எதிர்கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.

அதாவது பெரும்பாலான மேலாளர்கள், ஊழியர்கள் தங்களுடைய வேலையை குறைத்து வருவதாக கூறுகிறார்களாம். அதே சமயம் ஊழியர்களிடம் கேட்கும்போது தாங்கள் நீண்ட நேரம் அலுவலகத்திற்காக வேலை செய்து சோர்வடைவதாக தெரிவிக்கிறார்களாம்.
லிங்குடின் தளத்தின் துணை நிறுவனர் ரீட் ஹாஃப்மனுடன் சத்ய நாதெல்லா நடத்திய கலந்துரையாடலில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இந்த கலந்துரையாடலின் போது ரீட் ஹாஃப்மன் கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு பணியிடங்களில் நெகிழ்வுத் தன்மை எப்படி இருக்கிறது ? வீட்டில் இருந்து பணி புரியும் ஊழியர்களை மீண்டும் பணியிடங்களுக்கு கொண்டு வருவது எவ்வளவு சவால் மிக்கதாக இருக்கிறது என்ற கேள்வியை எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரியான சத்ய நாதெல்லா "ஊழியர்களின் செயல் திறன் தொடர்பான தரவுகளை நாம் விரிவாக ஆய்வு செய்தோம் . அதில் மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களிலும் தற்போது உற்பத்தி திறன் முரண்பாடு இருக்கிறது . கிட்டதட்ட 85% மேலாளர்கள் தங்களுக்கு கீழ் பணிபுரியக்கூடிய ஊழியர்கள் தங்களுடைய வேலையை குறைந்து விட்டதாக தெரிவிக்கின்றனர்.
ஆனால் 85 % ஊழியர்கள் தங்கள் நிறுவனத்திற்காக கடினமாக உழைப்பதாகவும் இதனால் தாங்கள் விரைவிலேயே சோர்வடைவதாகவும் தெரிவிக்கின்றனர். இந்த உற்பத்தி திறன் முரண்பாடு மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கும் பெரிய பிரச்சினையாக இருக்கிறது" என கூறுகிறார்.
மேலும் இந்த பிரச்சனையை தீர்க்க வேண்டும் எனில் நிறுவன தலைவர்கள் இலக்குகளை எவ்வாறு இணைப்பது என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என கூறியுள்ளார் . அதாவது தலைவர்களாக நீங்கள் பார்க்க விரும்பும் முடிவு என்ன என்பதை ஊழியர்களுக்கு தெளிவுபடுத்துவது எப்படி என்பதை நாம் கற்றுக் கொள்ள வேண்டும் என சத்ய நாதெல்லா கூறியுள்ளார். இவற்றை எல்லாம் அடிப்படையாக கொண்டு தான் ஊழியர்களுக்கான விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications