உலகின் முன்னணி டெக் நிறுவனமான மைக்ரோசாப்ட் ஜனவரி மாதம் முடிவதற்குள் பெரிய அளவிலான பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி டெக் ஊழியர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. ஏற்கனவே மைக்ரோசாப்ட் பல கட்டங்களாக பணிநீக்கம் செய்திருக்கும் வேளையில், மீண்டும் அதிக எண்ணிக்கையில் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாக வந்த செய்தி டெக் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி கலந்த பயத்தை உருவானது.
மைக்ரோசாப்ட் நிறுவனம் இதுப்போன்ற அறிவிப்பை வெளியிட்டால், கட்டாயம் பிற டெக் நிறுவனங்களும் பணிநீக்கம் செய்யும் என அச்சம் இருப்பதால், அமெரிக்க டெக் ஊழியர்களை தாண்டி உலகம் முழுவதும் இருக்கும் டெக் ஊழியர்களுக்கு பயத்தை உருவாக்கியது. ஆனால் இந்த தகவல் தற்போது பொய்யானது என மைக்ரோசாப்ட் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

TipRanks அறிக்கையிலிருந்து தான் இந்த தகவல் முதன் முதலில் வெளியானது, மைக்ரோசாப்ட் நிறுவனம் ஜனவரி மாதம் 11,000 முதல் 22,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யலாம் என்று தெரிவித்திருந்தது. இந்த பணிநீக்கம் அசூர் கிளவுட் சேவைகள், எக்ஸ்பாக்ஸ், உலகளாவிய விற்பனைப் பிரிவுகள் பாதிக்கப்படலாம் என்றும், செயற்கை நுண்ணறிவு முதலீடுகளால் ஏற்பட்ட செலவு அதிகரிப்பை சமாளிக்க இந்த பணிநீக்கத்தை கையில் எடுப்பதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இந்த தகவல் எக்ஸ் போன்ற சமூக வலைதளங்களில் வேகமாக பரவி டெக் ஊழியர்கள் மத்தியில் பயத்தை உண்டாக்கியது. இந்த தகவல் வெறும் வதந்தி என அடுத்தடுத்து மைக்ரோசாப்ட் தரப்பில் இருந்து மறுப்பு செய்திகள் வந்ததால் டெக் ஊழியர்கள் சற்று ஆறுதல் அடைந்தனர்.
விண்டோஸ் சென்ட்ரல் இதழின் ஆசிரியர் ஜெஸ் கார்டன் முதலில் இதை தவறான தகவல் என்று கூறினார், பின்னர் மைக்ரோசாப்ட்டின் தலைமை தகவல் தொடர்பு அதிகாரி ப்ராங்க் எக்ஸ் ஷா சமூக வலைதளங்களில் இந்த தகவல் முற்றிலும் கற்பனையானது, தவறானது என்று அவர் தெரிவித்தார்.
மைக்ரோசாப்ட் செயற்கை நுண்ணறிவு துறையில் பெரிய முதலீடுகளை செய்து வருகிறது. இதன் மூலம் செலவுகள் அதிகரித்து வரும் வேளையில் செலவுகளை கட்டுப்படுத்தவும், லாப அளவீட்டை மேம்படுத்தமும் பணிநீக்கம் நடவடிக்கை எடுத்திருக்கலாம் என அச்சம் உருவானது. ஏற்கனவே AI Bubble எப்போது வெடிக்கும் என்ற அச்சத்தில் இருக்கும் டெக் ஊழியர்களுக்கு இது பெரும் அதிர்ச்சியாகவே இருந்தது.


Click it and Unblock the Notifications