அண்மை காலமாக சமூக வலைத்தளங்களில் திடீரென ஒருவரது பதிவு டிரெண்டாகிவிடும். அந்த வகையில் லின்கிடுஇன் பக்கத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் 22 ஆண்டுகளாக பணி செய்த ஒருவர் வெளியிட்ட பதிவு தான் தற்போது டிரெண்டாக இருக்கிறது.
ஃபெங் யுவான் (Feng Yuan) என்பவர், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ஊழியராக இருந்த நபர் தற்போது வாத்து பண்ணை நடத்தி வருவதாக லின்கிடுஇன் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தற்போது அமெரிக்காவின் வாஷிங்டன் பகுதியில் வசித்து வருகிறார் ஃபெங் யுவான்.

சீனாவின் நாஞ்சியான் பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்த இவர் அங்கே நான்காண்டுகள் பணிபுரிந்தார். பின்னர் மூத்த மென்பொருள் பொறியாளராக மற்றொரு நிறுவனத்தில் 8 ஆண்டுகள் பணிபுரிந்தார்.
இதனை அடுத்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இணைந்த அவர் கிட்டத்தட்ட 22 ஆண்டுகள் வேலை செய்துள்ளார். ஆனால் மைக்ரோசாப்ட் நிறுவனம் இவர் சரியாக வேலை செய்யவில்லை என கூறி திடீரென வேலையை விட்டு நீக்கியது.
பணி நீக்கம் செய்யப்பட்டு 11 மாதங்கள் ஆகும் நிலையில் தன்னுடைய தற்போதைய வேலை குறித்து லின்கிடுஇன் பக்கத்தில் அப்டேட் செய்துள்ளார் ஃபெங் யுவான். பணி நீக்கத்தால் நான் துவண்டு விடவில்லை, மாறாக என்னுடைய துறையையே மாற்றிக் கொண்டேன் என கூறியுள்ளார்.
வாத்து வளர்ப்பு குறித்த அடிப்படைகளை கற்றுக் கொண்டு தற்போது வெற்றிகரமாக வாத்து பண்ணை நடத்தி வருவதாக கூறியுள்ளார். மேலும் குடும்பத்தினருடன் நீண்ட நேரத்தை செலவிட முடிகிறது, அதே வேளையில் கணிசமான வருமானமும் கிடைக்கிறது என தெரிவித்துள்ளார். முன்பு செய்த வேலையை விட இது தனக்கு மனநிறைவைத் தருவதாக அவர் கூறியுள்ளார்.
லின்கிடுஇன் தளத்தில் இவரது பதிவு கிட்டத்தட்ட 3 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது. ஏராளமானவர்கள் இதற்கு பின்னூட்டங்களையும் பதிவு செய்துள்ளனர். ஒருவர் யுவான் நீண்ட நாட்களாக தான் தேடிக் கொண்டிருந்த அமைதியை இதன் மூலம் பெற்றுவிட்டார் எனக் கூறியுள்ளார். மற்றொருவர் கார்ப்பரேட் உலகில் இருந்து தப்பி அமைதியான உலகிற்கு சென்று விட்டார் என பதிவிட்டுள்ளார்.
22 ஆண்டு காலம் நன்றாக சம்பாதித்து விட்டு இனி நிம்மதியாக வாழ வேண்டும் என முடிவு செய்து விவசாயத்தை கையில் எடுத்திருப்பது மிகச்சிறந்த முடிவு என ஒருவர் கூறியுள்ளார். கார்ப்பரேட் வேலையை விடுத்து விவசாயத்திற்கு செல்ல வேண்டும் என்பதுதான் பலரது விருப்பம், ஆனால் நிதி சூழல் அதனை அனுமதிப்பதில்லை.
ஆனால் 20 ஆண்டுகாலம் மைக்ரோசாப்டில் வேலை செய்து குறிப்பிடத் தொகையை சேர்த்துக்கொண்டு இவர் தற்போது விவசாயத்திற்கு சென்று இருப்பது மிகச் சிறந்த முடிவு ஆனால் இவருக்கு கிடைத்த வாய்ப்பு பலருக்கும் கிடைப்பதில்லை என மற்றொரு பயனர் கூறியுள்ளார்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications