உலக புகழ்பெற்ற டெக் நிறுவனமான மைக்ரோசாப்ட் தொடர்ச்சியாக தனது ஊழியர்களுக்கு அடுத்தடுத்த அதிர்ச்சியை தந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் இந்தியாவில் பணியாற்றும் ஊழியர்களில் 91 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு இந்த ஆண்டு வெறும் 5 சதவீதம் அல்லது அதற்கும் குறைவான ஊதிய உயர்வு மட்டுமே வழங்கியுள்ளது.
Blind என்ற தொழில்முறை நெட்வொர்க்கிங் வெளியிட்டுள்ள தரவுகளில் இதில் தெரிய வந்துள்ளது. இந்தியாவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணிபுரியும் 2,178 ஊழியர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வின்படி, 91% ஊழியர்களுக்கு 5% அல்லது அதற்கு குறைவான ஊதிய உயர்வே கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டு 45% ஆக இருந்தது.

10 சதவீதத்திற்கும் அதிகமான ஊதிய உயர்வை பெற்றவர்கள் வெறும் 5% ஊழியர்கள் மட்டுமே. இது கடந்த ஆண்டு 27% ஆக இருந்தது. தங்களுக்கு வழங்கப்பட்ட இந்த மிக குறைந்த ஊதிய உயர்வு காரணமாக, மைக்ரோசாப்ட் நிறுவன ஊழியர்களில் 86% பேர் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஆனால் மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த ஆண்டு பெரிய அளவில் வருவாய் ஈட்டியுள்ளது. ஜூலை-செப்டம்பர் காலாண்ட்டில் இந்நிறுவனத்தின் நிகர லாபம் 32% அதிகரித்து 36.6 பில்லியன் டாலராகவும், மொத்த வருவாய் 19% அதிகரித்து 92.3 பில்லியன் டாலராகவும் உயர்ந்துள்ளது. குறிப்பாக கிளவுட் மற்றும் Azure சேவைகள் அமோக வளர்ச்சியை பெற்றுள்ள போதிலும், ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு மிகவும் குறைக்கப்பட்டுள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனம் ஏஐ துறையில் மாபெரும் முதலீடுகளை செய்துள்ளது. இதனால் நிறுவனம் செலவுகளை குறைக்க ஊதிய உயர்வு குறைப்பு, ஊழியர்கள் எண்ணிக்கை குறைப்பு என பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது ஊழியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சூழலில்தான், மைக்ரோசாப்ட் நிறுவனம் தங்கள் ஊழியர்களுக்கு விருப்ப ராஜினாமா திட்டத்தை அறிவித்தது. இதன்படி இந்தியா, அமெரிக்கா, கனடா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள சுமார் 60,000 ஊழியர்களுக்கு இந்த திட்டத்தில் அவர்களாகவே வேலையை விட்டு செல்லலாம் என அறிவிப்பு வெளியிட்டது.
இதனால் ஏராளமான ஊழியர்கள் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்குள் தங்களின் எதிர்காலம் மற்றும் வளர்ச்சி குறித்த கவலைகளை எழுப்பியுள்ளதாக இந்த ஆய்வறிக்கை கூறுகிறது. மாற்று வேலை வாய்ப்புகளை தேடிக்கொண்டிருக்கும் பல ஊழியர்களும் இந்த விருப்ப ஓய்வுத் திட்டத்தை சிறந்த வாய்ப்பாக பார்க்கின்றனர் என்றும் சொல்லப்படுகிறது.
மைக்ரோசாப்டிலேயே வேலை செய்தாலும் பெரிய அளவில் சம்பளம் உயராது என்ற நிலை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஆனால் வெளியிலோ வேலைவாய்ப்பு சந்தையில் நிலைமை இன்னமும் மோசமாக தான் இருக்கிறது. மைக்ரோசாப்ட் மட்டுமல்ல பல்வேறு நிறுவனங்களிலும் வேலை செய்ய கூடிய டெக் மற்றும் ஐடி ஊழியர்களின் நிலைமை இது தான்.


Click it and Unblock the Notifications

