சான்பிரான்சிஸ்கோ, அமெரிக்கா: பிரபல மைக்ரோசாப்ட் நிறுவனம் பெரும் எண்ணிக்கையிலான ஊழியர்களை பணி நீக்கம் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக பிசினஸ் இன்சைடர் தளம் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பணி நீக்க கடிதத்தை அடிப்படையாகக் கொண்டு செய்தி வெளியிட்டுள்ளது.
ஊழியர்கள் நிறுவனம் எதிர்பார்க்கும் குறைந்தபட்ச செயல்திறன் கூட காட்டவில்லை என்ற காரணத்தை முன்வைத்து தான் பணி நீக்கம் செய்திருப்பது தெரியவந்துள்ளது. பல்வேறு ஊழியர்களுக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனம் அனுப்பியுள்ள பணி நீக்க கடிதத்தில் உடனடியாக அவர்கள் தங்களிடம் இருக்கும் மைக்ரோசாப்ட் நிறுவன சாப்ட்வேர் மற்றும் ஹார்ட்வேர், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கார்டுகள் மற்றும் கணக்குகளை ஒப்படைத்து விட்டு வேலையை விட்டு வெளியேற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுநாள் வரை ஊழியர்களுக்கு கிடைத்த மருத்துவ காப்பீடு மற்றும் பிற சலுகைகள் அனைத்தும் நிறுத்திக் கொள்ளப்படும் என அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனம் தங்கள் நிறுவனத்திலிருந்து வெளியேறும் ஊழியர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை இழப்பீடு தொகையாக வழங்கும். ஆனால் இந்த ஊழியர்களுக்கு அந்த இழப்பீடு தொகை கூட இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நிறுவனத்தில் பணியாற்றும் பல்வேறு ஊழியர்களுக்கு அச்சத்தையும் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் மத்தியில் பெருமளவிலான கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனம் தங்கள் ஊழியர்களின் செயல் திறனில் மிகக் கடினமான போக்கை கொண்டு இருப்பது இந்த பணி நீக்க நடவடிக்கைகள் மூலம் தெரிய வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். உடனடியாக பணியிலிருந்து வெளியேறிவிட வேண்டும் என்ற கடுமையான வார்த்தைகளுடன் பணிநீக்க கடிதம் அனுப்பப்பட்டு இருக்கிறதாம். மேலும் இந்த ஊழியர்கள் மீண்டும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இணைய வேண்டும் என விண்ணப்பம் செய்தால் அவர்களுடைய விண்ணப்பம் மிகத் தீவிரமாக ஆய்வு செய்யப்படும் என்றும் இதற்கு முன்பு நிறுவனத்தில் அவர்களின் செயல் திறன் மதிப்பாய்வு செய்த பிறகு விண்ணப்பத்தை ஏற்றுக் கொள்வதா வேண்டாமா என்ற முடிவு எடுக்கப்படும் என்றும் மைக்ரோசாப்ட் நிறுவனம் கூறியுள்ளது.
இதன் மூலம் பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்கள் மீண்டும் நிறுவனத்தில் இணைவதற்கான வாய்ப்பு இல்லை என்பதை மைக்ரோசாப்ட் நிறுவனம் மறைமுகமாக தெரிவித்துள்ளது. எங்கள் ஊழியர்கள் அதிக செயல்திறன் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்பதை விரும்புகிறோம், அதற்காக ஊழியர்களுக்கு பயிற்சிகளையும் வழங்குகிறோம், ஆனால் அதிலும் தங்களை முன்னேற்றி கொள்ளாதவர்களையே பணியில் இருந்து நீக்குகிறோம் என மைக்ரோசாப்ட் நிறுவனம் கூறியுள்ளது.
தற்போது பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள ஊழியர்கள் பாதுகாப்பு , கருவிகள், விற்பனை மற்றும் கேமிங் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றுபவர்கள் என தெரியவந்துள்ளது. ஜூன் மாத நிலவரப்படி மைக்ரோசாப்ட் நிறுவனம் 2.28 லட்சம் ஊழியர்களை முழுநேர ஊழியர்களாக கொண்டிருந்தது.
Story written- Devika


Click it and Unblock the Notifications