அமெரிக்காவில் வருவாய் அறிக்கைகள் வெளியாகும் இந்த தருணத்தில், உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் அடுத்த இலக்கை உலகிற்கு தெளிவாக அறிவித்துள்ளன. அதுதான் செயற்கை நுண்ணறிவு (AI). மைக்ரோசாஃப்ட், மெட்டா, ஆல்பபெட் மற்றும் அமேசான் போன்ற நிறுவனங்கள், இந்த ஆண்டிலேயே 380 பில்லியன் டாலரை ஏஐ உள்கட்டமைப்புக்காக செலவிட திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளன.
AI முதலீட்டில் போட்டி போடும் ஜாம்பவான்கள் : இதுகுறித்து அமேசானின் தலைமை நிதி அதிகாரி பிரையன் ஓல்சாவ்ஸ்கி, இந்த ஆண்டுக்கான மொத்த மூலதன செலவினம் சுமார் 125 பில்லியன் டாலராக இருக்கும் என்றும், அடுத்த ஆண்டு இது மேலும் அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், ஏஐ என்பது ஒரு மகத்தான வாய்ப்பு என்றும் இது நீண்ட காலத்திற்குப் பெரும் வருவாயைத் தரும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தலைமைச் செயல் அதிகாரி ஆண்டி ஜாஸ்ஸி கூறுகையில், ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு மற்றும் உள்கட்டமைப்புக்கான தேவை வலுவாக இருப்பதாகவும், அதனால் செலவினத்தை விரைவுபடுத்துவதாகவும் கூறியுள்ளார்.
அதேசமயம், கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட்டும் தனது மூலதன செலவின மதிப்பீட்டை உயர்த்தியுள்ளது. இந்த ஆண்டு 91 பில்லியன் டாலர் முதல் 93 பில்லியன் டாலர் வரை செலவிட திட்டமிட்டுள்ளதாக தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார். இது கடந்த ஜூலையில் கணிக்கப்பட்ட 85 பில்லியன் டாலரை விட அதிகமாகும். 2026 ஆம் ஆண்டிலும் இந்தச் செலவு மிக அதிகமாக இருக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மெட்டாவின் அதிரடி திட்டம் :மார்க் ஜுக்கர்பெர்க் தலைமையிலான மெட்டா (ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம்) நிறுவனம், இந்த ஆண்டுக்கான செலவினத்தை 70 பில்லியன் முதல் 72 பில்லியன் டாலர் வரை உயர்த்தியுள்ளது. 2026 ஆம் ஆண்டில் மூலதன செலவின வளர்ச்சி இந்த ஆண்டை விட மிக வேகமாக இருக்கும் என்றும் மெட்டா கூறியுள்ளது.
மைக்ரோசாஃப்ட்டின் முன்னெடுப்பு :மைக்ரோசாஃப்ட் நிறுவனமும் கிளவுட் சேவைகளுக்கான தேவை அதிகரித்துள்ளதால், அதன் உள்கட்டமைப்பு செலவை உயர்த்தியுள்ளது. இந்நிறுவனம் தனது காலாண்டு அறிக்கையில் கிட்டத்தட்ட 35 பில்லியன் டாலர் மூலதனச் செலவை அறிவித்துள்ளது. 2026 நிதியாண்டில் இந்தச் செலவின வளர்ச்சி இன்னும் அதிகரிக்கும் என்று தலைமை நிதி அதிகாரி ஏமி ஹூட் தெரிவித்துள்ளார்.
வரும் 2028 ஆம் ஆண்டு இறுதிக்குள், பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் டேட்டா சென்டர்கள் போன்ற உள்கட்டமைப்புக்காக சுமார் 3 ட்ரில்லியன் டாலர் செலவிடும் என மோர்கன் ஸ்டான்லி கணித்துள்ளது. இருப்பினும், ஏஐ மீதான இந்த அதீதச் செலவினம், நிறுவனங்களின் விண்ணை முட்டும் மதிப்பீடுகள் மற்றும் AI-ஐப் பயன்படுத்துவதால் நிறுவனங்களின் உற்பத்தித்திறன் எந்த அளவிற்கு உயர்ந்துள்ளது என்பதற்கான தெளிவான ஆதாரம் இல்லாமை போன்றவை முதலீட்டாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இது எப்போது வேண்டுமானாலும் உடையலாம் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications