மைக்ரோசாஃப்ட் நிறுவனம், தனது நிறுவன அளவிலான மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக, அடுத்த வாரம் தனது எக்ஸ்பாக்ஸ் (Xbox) கேமிங் பிரிவில் மற்றொரு சுற்று பெரிய பணிநீக்கங்களை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது. இது கடந்த 18 மாதங்களில் கேமிங் பிரிவில் ஏற்படும் நான்காவது குறிப்பிடத்தக்க பணிநீக்க நடவடிக்கையாக இருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, எக்ஸ்பாக்ஸ் பிரிவில் உள்ள மேனேஜர்கள், முழு கேமிங் குழுவிலும் சில ஊழியர்களை பணிநீக்கம் செய்ய எதிர்பார்க்கின்றனர்.
விற்பனைப் பிரிவுகளில் பெரும் தாக்கம்:வரவிருக்கும் இந்த பணிநீக்கங்கள், முதன்மையாக விற்பனைப் பிரிவுகளில் உள்ள ஆயிரக்கணக்கான ஊழியர்களைக் குறிவைக்கும் என ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது. மைக்ரோசாஃப்ட்டின் நிதியாண்டு ஜூன் 30 அன்று முடிவடைவதோடு இந்தப் பணிநீக்கங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஏனெனில், நிறுவன மாற்றங்களைச் செய்ய நிறுவனம் பொதுவாக இந்த காலகட்டத்தைப் பயன்படுத்திக் கொள்கிறது.

எக்ஸ்பாக்ஸ் கேமிங் பிரிவு லாப அழுத்தத்தில்: 2023 ஆம் ஆண்டு ஆக்டிவிஷன் பிலிஸார்டை (Activision Blizzard) $69 பில்லியன் டாலருக்குக் கையகப்படுத்திய பிறகு, லாப வரம்புகளை அதிகரிக்க மைக்ரோசாஃப்ட் நிர்வாகிகளிடமிருந்து எக்ஸ்பாக்ஸ் பிரிவு பெருகிய அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளது. ஏற்கனவே, ஜனவரி 2024 இல் 1,900 பணிநீக்கங்கள், செப்டம்பரில் 650 பணிநீக்கங்கள் எனத் தொடர்ச்சியான பணியாளர் குறைப்புகளை கேமிங் பிரிவு சந்தித்துள்ளது. மேலும், ஹை-ஃபை ரஷ் (Hi-Fi Rush) டெவலப்பரான டாங்கோ கேம்வொர்க்ஸ் (Tango Gameworks) மற்றும் ரெட்ஃபால் (Redfall) டெவலப்பரான ஆர்கேன் ஆஸ்டின் (Arkane Austin) உள்ளிட்ட பல கேம் ஸ்டுடியோக்களையும் மைக்ரோசாஃப்ட் மூடியுள்ளது.
தகவல்களின் படி, மைக்ரோசாஃப்ட் மத்திய ஐரோப்பா முழுவதும் எக்ஸ்பாக்ஸ் விநியோகத்தை மறுசீரமைத்து வருகிறது. சில நாடுகளில் செயல்பாடுகள் முற்றிலுமாக நிறுத்தப்படுகின்றன. இந்த மாற்றங்கள் செயல்பாடுகளை மாற்றியமைப்பதோடு, அடுத்த தலைமுறை கன்சோல் மேம்பாட்டிற்காக வணிகத்தை சீரமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன என்று தி வெர்ஜ் இதழ் தெரிவித்துள்ளது.
மைக்ரோசாஃப்ட்டில் தொடரும் பணிநீக்கம்: மே மாதத்தில் 6,000 பணியாளர் குறைப்புகளையும், சில வாரங்களுக்குப் பிறகு 300-க்கும் மேற்பட்ட கூடுதல் பணியாளர் நீக்கங்களையும் தொடர்ந்து, 2025 ஆம் ஆண்டில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திற்கு எக்ஸ்பாக்ஸ் பணிநீக்கம் மூன்றாவது பெரிய நடவடிக்கையாகும். நிறுவனம் தனது மொத்த 228,000 பணியாளர்களில் தோராயமாக 3% பேரை நீக்கத் திட்டமிட்டுள்ளதாக முன்பு அறிவித்தது. இது மேலாண்மை கட்டமைப்பைச் சமன் செய்யும் மற்றும் செலவுகளைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.
சுமார் 45,000 தொழிலாளர்களைப் பணியமர்த்தும் மைக்ரோசாஃப்ட்டின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவு, வரவிருக்கும் பணிநீக்கங்கள் மிகப்பெரிய தாக்கத்தை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மறுசீரமைப்பு, தரவு மையச் செலவினங்களுக்காக $80 பில்லியன் என மதிப்பிடப்பட்ட பாரிய AI முதலீடுகளைச் சமநிலைப்படுத்தும் முயற்சியில் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. ஆனாலும், இதுகுறித்து மைக்ரோசாஃப்ட் தரப்பில் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.


Click it and Unblock the Notifications