மைக்ரோசாஃப்ட் 9,000-த்திற்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது டெக் ஊழியர்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. பெரிய டெக் நிறுவனங்களின் பணிநீக்கம் 3வது வருடமாக தொடர்வது மட்டும் அல்லாமல் 2025 ஜூன் - ஜூலை மாதத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதேவேளையில் தான் அமெரிக்க பொருளாதாரம் மைனஸ்-க்கு சென்றது குறிப்பிடத்தக்கது.
மைக்ரோசாஃப்ட் நிர்வாகம் 9100 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதற்கு முன்பு அதன் தலைமை விற்பனை பிரிவு அதிகாரியான Judson Althoff-ஐ எட்டு வாரங்களுக்கு அதாவது 2 மாதம் விடுப்பு எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. இந்த முடிவு, விற்பனைப் பிரிவில் ஆயிரக்கணக்கான பணிநீக்கங்களை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள நிலையில் எடுக்கப்பட்டுள்ளது.

மைக்ரோசாஃப்டின் Chief Commercial Officer ஆன ஜட்சன் ஆல்தாஃப், நிறுவனத்தின் நிதியாண்டு முடிவடையும் ஜூன் மாத இறுதியில் எட்டு வார விடுப்பு எடுக்க உள்ளார். செப்டம்பர் மாதம் அவர் மீண்டும் தனது பணியில் இணைவார் என்று நிறுவனத்தின் செய்திதொடர்பாளர் தெரிவித்தார்.
இந்த விடுப்பும், 9100 ஊழியர்கள் பணிநீக்க அறிவிப்பும் அடுத்தடுத்து வெளியானது மூலம் இந்த பணிநீக்கத்தில் சேல்ஸ் பிரிவு அதிகப்படியான பாதிப்பை எதிர்கொள்ள உள்ளது உறுதியாகியுள்ளது.
மைக்ரோசாஃப்ட் நிர்வாகம் ஒவ்வொரு நிதியாண்டு முடிவிலும், வர்த்தகம், வருமானம் மேம்படுத்த வேண்டிய பிரிவில் முக்கிய மாற்றங்களை மேற்கொள்வது வழக்கம். இந்த முறை, செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் பெரும் முதலீடு செய்யப்படும் நிலையிலும், OpenAI உடன் போட்டிப்போட போதுமான நிதியை உருவாக்கும் பொருட்டு செலவுகளைக் குறைக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது. இதற்காகவே ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
மைக்ரோசாஃப்டின் இந்த பணிநீக்கம் அமெரிக்காவில் உருவாகியுள்ள பொருளாதார நிச்சயமற்ற சூழ்நிலையில் வந்துள்ளது. அதாவது அமெரிக்க பொருளாதாரத்தில் ரெசிஷன் ஏற்பட்டால் இதை எதிர்கொள்ளவும், நிறுவனத்தின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தவும் முன்கூட்டியே எச்சரிக்கையாக 9100 ஊழியர்கள் பணிநீக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மைக்ரோசாஃப்டின் இந்த முடிவு இந்திய தொழில்நுட்பத் துறையில் மறைமுக நன்மைகளையும் கொண்டு வரலாம். இந்தியாவில் பணிநீக்கப்பட்ட மைக்ரோசாப்ட் ஊழியர்கள் இந்தியாவில் உள்ள ஸ்டார்ட்அப் மற்றும் உள்நாட்டு டெக் நிறுவனங்களுக்கு மாறலாம், இது உள்நாட்டு டெக் துறை வளர்ச்சிக்கு விதையாக மாறலாம்.
ஆனால் ஸ்டார்ட்அப் துறைக்கான முதலீட்டு சந்தை மிகவும் மோசமாக இருக்கும் காரணத்தால் இதன் மூலம் எந்த அளவுக்கு நன்மை கிடைக்கும் என்பது தெரியவில்லை.


Click it and Unblock the Notifications