உலக தொழில்நுட்ப ஜாம்பவானான மைக்ரோசாப்ட் நிறுவனம், இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன மற்றும் கனடா ஆகிய நான்கு நாடுகளில் உள்ள ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தை (Voluntary Exit Offer - VEO) அறிவித்து அதிர்ச்சி தந்துள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பிளாக் போஸ்ட் மூலம் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
உலகளவில் சுமார் 60,000 ஊழியர்கள் இந்த திட்டத்தின் கீழ் தகுதி பெற்றுள்ளனர். இதன்படி நிறுவனம் இவர்களை வேலையை விட்டு நீக்காமல் அவர்களே தாங்களாக முன் வந்து வேலையை விட்டு செல்ல வேண்டும். அவர்களுக்கு போதிய நிதி இழப்பீடு வழங்கப்படும். மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இந்தியாவில் மட்டும் சுமார் 23,000 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இவர்களில் எத்தனை பேர் இந்த திட்டத்திற்கு தகுதியானவர்கள் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.

இந்தியாவில் உள்ள தகுதியான ஊழியர்கள், இந்த விருப்ப ஓய்வு திட்டத்தை ஏற்கலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்ய டிசம்பர் 1-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த விருப்ப ஓய்வு திட்டத்தில் முன் வந்து வேலையை விடும் ஊழியருக்கு , நிறுவனத்தில் வேலை செய்த ஒவ்வொரு முழுமையான ஆண்டிற்கும் ஒரு மாத அடிப்படை சம்பளம் வழங்கப்படும். 10 ஆண்டுகள் வேலை செய்தவர் என்றால் 10 மாத அடிப்படை சம்பளம் கிடைக்கும். அத்துடன் மருத்துவ காப்பீடு, ஆலோசனைகள் , புதிய வேலை கிடைப்பதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிர்வாக துணை தலைவர் மற்றும் ஏமி கோல்மேன் வெளியிட்டுள்ள பிளாக் போஸ்டில், இந்த விருப்ப ஓய்வு திட்டம், இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன மற்றும் கனடா ஆகிய நான்கு நாடுகளில் உள்ள குறிப்பிட்ட அணிகளில் பணியாற்றும் லெவல் 70 மற்றும் அதற்கு கீழ் உள்ள ஊழியர்களுக்கு பொருந்தும் என கூறியுள்ளார்.
மைக்ரோசாப்டை விடுத்து வெளியே வேலை தேட திட்டமிடும் தகுதியான ஊழியர்களுக்கு, இந்த திட்டம் உதவும் என்றும், தங்களின் மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப தங்கள் பணியாளர் பலத்தை மாற்றியமைத்து கொள்ளவும் இது உதவும் என்றும் தெரிவித்துள்ளார். இது மைக்ரோசாப்டில் புது திட்டம் இல்லை, ஏற்கனவே பலமுறை இதனை செய்திருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.
தகுதியுள்ள ஊழியர்களுக்கு அவர்களின் விருப்ப ஓய்வு திட்டத்தின் நிபந்தனைகள் மற்றும் விவரங்கள் அடங்கிய மின்னஞ்சல்கள் நேரடியாக அனுப்பப்படும் என கூறியுள்ளார். இது போன்ற தானாக வேலையை விட்டு செல்லுங்கள் என கூறப்படும் திட்டங்கள் நவீன பணிநீக்கங்களாகவே க்ருதப்படுகின்றன. நாங்கள் வேலையை விட்டு அனுப்பவில்லை அவர்களே சென்று விட்டனர் என்பதை நிலை நிறுத்த நிறுவனங்கள் கையாளும் ஒரு உத்தி தான் இது.
உலகளாவிய அளவில் ஆட்குறைப்பு அல்லது விருப்ப ஓய்வு நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டாலும், இந்தியாவில் தங்களின் முதலீடுகளை குறைக்க போவதில்லை என மைக்ரோசாப்ட் செய்தி தொடர்பாளர் தெளிவுபடுத்தியுள்ளார். கிளவுட் மற்றும் ஏஐ உள்கட்டமைப்பு, திறன் மேம்பாடு மற்றும் செயல்பாடுகளுக்காக 2025 முதல் 2029 வரை 20.5 பில்லியன் அமெரிக்க டாலர் தொகையை மைக்ரோசாப்ட் இந்தியாவில் முதலீடு செய்ய உறுதியளித்துள்ளது என கூறியுள்ளார்.
மைக்ரோசாப்ட் அதிகமான பணத்தை ஏஐ செயல்பாடுகளுக்காக முதலீடு செய்துள்ளது. இந்த நிதி நெருக்கடியை சமாளிக்கவும் ஏஐ பயன்பாடு மூலம் செலவுகளை குறைக்கவும் தான் இது போன்ற அறிவிப்புகளை வெளியிடுகிறது.


Click it and Unblock the Notifications

