உலகின் முன்னணி டெக் நிறுவனமான மைக்ரோசாஃப்ட் இந்த வாரம் இந்தியாவில் 3 பில்லியன் டாலர் வரையில் முதலீடு செய்வதாக அதன் சிஇஓ மோடியைச் சந்தித்த பின்பு இந்நிறுவனத்தின் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியின் போது தெரிவித்தார்.
இந்த நிலையில் அடுத்த 2 நாட்களில் மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது உலகளாவிய வர்த்தகத்தில் இருக்கும் பணியாளர்களில் ஒரு சிறிய பகுதியை பணிநீக்கம் செய்யும் பணியைத் தொடங்கியுள்ளது. 2023 ஆம் ஆண்டில் இருந்து டெக் துறையைத் துரத்தி வரும் Layoff பூதம் 2025 ஆம் ஆண்டிலும் துரத்துகிறது. இதை மைக்ரோசாப்ட் போன்ற பெரிய நிறுவனம் துவங்கி வைத்துள்ளது என்பது தான் உச்சக்கட்ட அதிர்ச்சி அளிக்கும் விஷயம்.

சத்ய நாடெல்லா தலைமையிலான மைக்ரோசாப்ட் நிர்வாகம், நிறுவனத்தின் செயல்திறனை மேம்படுத்த வேண்டும் என்பதை முக்கிய காரணமாகக் கூறி, சரியாக பணியாற்றாத ஊழியர்களை பணிநீக்கம் செய்ய துவங்கியுள்ளது. இப்புதிய பணிநீக்கம் தொடர்பாக மைக்ரோசாஃப்ட் செய்தித் தொடர்பாளர் வேலைநிறுத்தங்களை உறுதிப்படுத்தி, நிறுவனம் தொடர்ந்து ஊழியர் செயல்திறனை மதிப்பீடு செய்து, தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்று கூறினார்.
இந்த பணிநீக்கத்தில் எத்தனை பேர் வெளியேற்றப்படுகிறார்கள் என்பது துல்லியமான எண்ணிக்கை வெளியிடப்படவில்லை என்றாலும், பாதுகாப்பு பிரிவு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள ஊழியர்கள் பாதிக்கப்படுவதாகத் தெரிகிறது. மைக்ரோசாப்ட் சுமார் 2,28,000 ஊழியர்களைத் தனது சர்வதேச வர்த்தகத்தில் பணியில் அமர்த்தி இயங்கி வருகிறது, இதில் 1 சதவீதம் ஊழியர்கள் தற்போது பணிநீக்கம் செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளில் மைக்ரோசாஃப்ட் மேற்கொண்ட அடுத்தடுத்த பணிநீக்க நடவடிக்கைகளில் இருந்து மீளாத டெக் ஊழியர்கள், புதிய பணிநீக்க அறிவிப்பால் பெரும் அச்சத்தில் உள்ளனர். ஏற்கனவே உலகளாவிய பொருளாதாரம் மந்தமாக இருக்கும் வேளையில் இத்தகைய பணிநீக்கம் அடுத்தடுத்து நிறுவனங்கள் அறிவிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
மைக்ரோசாப்ட் 2023 ஆம் ஆண்டில், சுமார் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது, இது அதன் உலகளாவிய பணியாளர்களில் சுமார் 5% ஆகும். இந்த காலகட்டத்தில் நிறுவனத்தின் எக்ஸ்பாக்ஸ் கேமிங் பிரிவும் பணிநீக்கங்களைச் சந்தித்தது.
2024 ஆம் ஆண்டில் ஆக்டிவிஷன் ப்லிசார்ட் நிறுவனத்தைக் கையகப்படுத்தியதைத் தொடர்ந்து, மைக்ரோசாஃப்ட் தனது கேமிங் பிரிவில் சுமார் 2,000 பணியாளர்களை நீக்கி, கேமிங் பிரிவுகளை மொத்தமாக இணைத்தது. இதே 2024 ஆம் ஆண்டில், முதலில் 1,500 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது, பின்னர் சுமார் 1,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. இதேபோல் நிறுவனத்தின் தங்க முட்டியிடும் வாத்தாக விளங்கும் Azure கிளவுட் கம்ப்யூட்டிங் பிரிவிலும் பணிநீக்கத்தை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
மைக்ரோசாப்ட்-ன் புதிய பணிநீக்க அறிவிப்பு டெக் ஊழியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தினாலும், பல காலியிடங்களை இந்த பணிநீக்கம் மூலம் நிரப்பப்பட வாய்ப்புள்ளது என்று மைக்ரோசாஃப்ட் கூறியுள்ளது. அதாவது திறமை இருந்தால் தப்பித்துக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications