இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களான காக்னிசண்ட், இன்போசிஸ், டிசிஎஸ், விப்ரோ ஆகியவற்றுடன் மைக்ரோசாப்ட் முக்கியமான கூட்டணி ஒப்பந்தம் செய்துள்ளதாக மைக்ரோசாப்ட் தலைமைச் செயல் அதிகாரி சத்ய நாடெல்லா அறிவித்தார்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஏஜென்டிக் AI (சுயமாக சிந்தித்து செயல்படும் செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பத்தை விரைவாக பயன்பாட்டுக்கு கொண்டு வரவும், அதை பரவலாக்கும் நோக்குடன் இந்த நான்கு நிறுவனங்களும் சேர்ந்து மொத்தமாக 50,000 மைக்ரோசாப்ட் கோபைலட் லைசென்ஸ்களை பயன்படுத்த வழங்க உள்ளது மைக்ரோசாப்ட். இது நிறுவன அளவிலான AI பயன்பாட்டுக்கு புதிய அளவுகோல் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏஜென்டிக் AI என்பது வெறும் கேள்விக்கு பதில் சொல்லும் சாட்பாட் அல்ல, மாறாக தானாக சிந்தித்து, முடிவெடுத்து, வேலையை முடிக்கும் தொழில்நுட்பம். உதாரணமாக வாடிக்கையாளர் சேவை, கணக்கு பராமரிப்பு, மனிதவள மேலாண்மை போன்ற பணிகளை இது தானாகவே செய்யும்.
இந்திய ஐடி நிறுவனங்கள் இதை பயன்படுத்தினால் ஊழியர்களின் உற்பத்தித்திறன் பல மடங்கு உயரும், செலவு குறையும், பிழைகள் குறையும். இதன் பயன் இறுதியில் வங்கி, காப்பீடு, சில்லறை வர்த்தகம், உற்பத்தி போன்ற துறைகளுக்கு சென்றடையும். இதனால் டெக் சேவைகள் அடுத்தக்கட்டத்திற்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சத்ய நாடெல்லாவின் இந்திய பயணத்தில் இந்த அறிவிப்பு வெளியானது மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது, காரணம் நேற்று மைக்ரோசாப்ட் மாபெரும் முதலீட்டு திட்டத்தை அறிவித்த அடுத்த நாள் டாப் 4 ஐடி சேவை நிறுவனத்துடன் கூட்டணி ஒப்பந்தம் செய்துள்எளது.

அதாவது டிசம்பர் 10 அன்று அவர் இந்தியாவில் AI மற்றும் க்ளவுட் உட்கட்டமைப்புக்காக மைக்ரோசாப்ட் 2029ஆம் ஆண்டுக்குள் 17.5 பில்லியன் டாலர் முதலீடு செய்யப்போவதாக அறிவித்திருந்தார் சத்ய நாடெல்லா. இந்த முதலீட்டு உடன் லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு AI திறன் பயிற்சி அளிக்கும் திட்டமும் உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பு வெளியான உடன் பங்குச் சந்தையில் ஐடி நிறுவன பங்குகள் கலவையான நிலையை எதிர்கொண்டன. டிசிஎஸ் மற்றும் இன்போசிஸ் பங்குகள் சரிவில் தள்ளாடிக்கொண்டு வருகிறது. விப்ரோ பங்கு 0.49 சதவீதம் உயர்ந்தது.


Click it and Unblock the Notifications