செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பல துறைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக நாம் செய்ய முடியாது என நினைத்த பல விஷயங்களை செய்து காட்டி அசத்தி வருகிறது.
அந்த வகையில் பிரபல மோனாலிசா ஓவியத்தை பாட வைத்திருக்கிறது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய செயற்கை நுண்ணறிவு செயலியான VASA-1 மோனாலிசா ஓவியத்தை ராப் பாட வைத்திருக்கிறது. இந்த வீடியோ தான் சமூக வலைதளங்களில் தற்போது டிரெண்டாக உள்ளது.

உலக புகழ்பெற்ற மோனாலிசா ஓவியம், லியானார்டோ டாவின்சியால் 16ஆம் நூற்றாண்டில் வரையப்பட்டது. தற்போது இந்த ஓவியமானது பிரான்சில் உள்ள இலூவா அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் , பிரபல நிறுவனமான மைக்ரோசாப்ட் தங்களின் புதிய ஏஐ தொழில்நுட்பத்தால் உருவான செயலியான VASA -1 மூலம் மோனாசலிசா ஓவியத்தை பாட வைத்துள்ளது.
VASA-1 செயலியின் பிரத்யேக திறனே, ஒரு புகைப்படத்தை வாய அசைக்க வைத்து பாட வைத்துவிடும். இதை பயன்படுத்தி நமது புகைப்படத்தை கூட நம்மால் ஏதேனும் ஒரு பாட்டிற்கு பாட வைக்க முடியும் என கூறுகின்றனர்.
கடந்த 2011-ம் ஆண்டு கோனன் ஓ’பிரையனின் டாக் ஷோவில் (Conan O’Brian’s Talk Show) ஹாலிவுட் நடிகையான அன்னே ஹாத்வேயால் பாடப்பட்ட Paparazzi எனும் ராப் பாடலை VASA-1 செயலி மூலம் மோனாலிசா ஓவியத்தின் படத்தை உள்ளீடு செய்து பாட வைத்துள்ளனர்.
முதலில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்ட இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும், இந்த வீடியோ 7 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் குவித்துள்ளது.
ஏற்கனவே அலிபாபா நிறுவனத்தின் EMO செயலியும் இதே போல புகைப்படத்தையே அனிமேஷனாக்கி பாட செய்துவிடும். தற்போது VASA-1 செயலி அதற்கு போட்டியாக கொண்டு வரப்பட்டுள்ளது.
மோனாலிசா ஓவியத்தை பாட செய்து VASA-1 செயலி மூலம் உருவாக்கப்பட்ட இந்த வீடியோ சமூகவலைதளங்களில் பல தரப்பட்ட கருத்துகளை ஈர்த்துள்ளது. சிலர் இந்த தொழில்நுட்பத்தை வரவேற்றுள்ளனர். சிலரோ இது தேவையற்ற வேலை என்கின்றனர். மோனாலிசா ஓவியத்தின் மாண்பை குறைக்கும் வகையில் இருப்பதாக சிலர் விமர்சித்துள்ளனர்.
அண்மை காலமாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது. குறிப்பாக ஜெனரேட்டிவ் ஏஐ தொழில்நுட்பங்கள் பல துறைகளில் மாற்றங்களை கொண்டு வந்திருக்கின்றன. 2022ஆம் ஆண்டு சாட் ஜிபிடி வருகைக்கு பிறகு பரவலாக அனைவரும் பயன்படுத்தும் வகையிலான ஏஐ தொழில்நுட்பங்களை பெரு நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு வெளியிட்டு வருகின்றன.
Story written by: Devika


Click it and Unblock the Notifications