இந்தியாவில் நுகர்வோர் பணவீக்கம் கடந்த சில மாதங்களாக குறைந்து வந்ததை தொடர்ந்து ஆர்பிஐ அடுத்த சில நாணய கொள்கை கூட்டத்தில் ரெப்போ விகிதத்தை குறைக்கும் என எதிர்பார்ப்பு நிலவியது. நாட்டின் சில்லறை விலை பணவீக்கம் கடந்த சில மாதங்களாக குறைய மிக முக்கியமான காரணம் உணவு பொருட்களின் விலை குறைந்தது தான்.
இந்த நிலையில் தக்காளி விலை கிலோவுக்கு 150 ரூபாய்க்கு அதிகமாக உயர்ந்திருக்கும் வேளையில், அடுத்த சில நாட்களுக்கு இது தொடரும் என சந்தை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதற்கு முக்கிய காரணமாக ஹிமாச்சல் பிரதேசத்தில் அதிகப்படியான மழை காரணமாக விளைச்சல் பாதித்து, போக்குவரத்து தாமதமாகியுள்ளது.

தற்போது ஹிமாச்சல் பிரதேச தக்காளி உற்பத்தி பாதிப்பை, பெங்களூர் தக்காளி உற்பத்தியை வைத்து தான் சரி செய்யப்பட்டு வருகிறது. சொல்லப்போனால் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் முக்கிய தக்காளி சப்ளையராக கர்நாடக மாநிலம் விளங்குகிறது.
இந்தியாவில் தக்காளி மட்டும் அல்லாமல் முட்டைகோஸ், காலிபிளவர், கீரை வகைகள், கேரட், பீன்ஸ் என பெரும்பாலான காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த பெரும் பாதிப்பு வட இந்தியாவில் பெய்து வரும் அதிகப்படியான மழை முக்கிய காரணம், இந்த விலை உயர்வால் பல ஆன்லைன் தளங்கள் தக்காளி விற்பனையை பல இடங்களில் நிறுத்தியுள்ளது.
முட்டைகோஸ், காலிபிளவர், கேப்சிக்கம் ஆகியவற்றின் முக்கிய சப்ளையராக ஹிமாச்சல் பிரதேசம் உள்ளது. அதிகப்படியான விலை உயர்வு காரணமாக மக்கள் தற்போது மாற்று உணவுகளுக்கு செல்ல துவங்கியுள்ளனர். இந்த விலை உயர்வு காய்கறிகள் மட்டும் அல்லாமல் பிற உணவு பொருட்களிலும் எதிரொலித்துள்ளது.
கடந்த வாரம் ஹிமாச்சல பிரதேசம், ராஜஸ்தான், உத்தரகாண்ட், ராஜஸ்தான், ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் அதிகப்படியான மழை பதிவானது. இதனால் இப்பகுதியில் விவசாய உற்பத்தி அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.

இந்த விலை உயர்வு நடுத்தர குடும்பங்களில் அதிகப்படியான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 3 வருடத்தில் பெரும்பாலான குடும்பங்களின் வருமானம் பெரிய அளவில் உயராமல் தொடர்ந்து மந்தமாகவே உள்ளது. இதற்கு மத்தியில் பலர் தங்களுடைய வேலைவாய்ப்புகளை இழந்துள்ளனர்.
இதற்கு மத்தியில் மக்களின் அடிப்படை உணவு பொருட்களின் விலை உயர்வு காரணமாக அவர்களுடைய வீட்டு பட்ஜெட்டில் பெரும் பாதிப்பை எதிர்கொண்டு உள்ளது. இதனால் மக்களின் முக்கிய செலவுகளை குறைக்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. இந்த நிலையில் பணவீக்கம் அதிகரித்துள்ளதாலும், அமெரிக்க மத்திய வங்கி இந்த மாத இறுதியில் வட்டி உயர்த்தும் கணிப்பு வெளி வந்துள்ளதால் ஆர்பிஐ மீண்டும் ரெப்போ விகிதத்தை உயர்த்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications