ஒரு காலத்தில் தரகர்களை தேடி பிடித்து திருமணத்திற்கான வரன்களை பார்க்கும் கடினமான காலமெல்லாம் இன்றைய இணையதள தொழில்நுட்பத்தால் மிகவும் எளிதான ஒன்றாக மாறியிருக்கிறது. இதற்கு மேட்ரிமோனி தளங்களின் வளர்ச்சி முக்கிய காரணம்.
அப்படி மேட்ரிமோனி தளங்கள் என்ற உடன் நம் நினைவுக்கு வரும் குறிப்பிட்ட சில தளங்களில் Shaadi.com தளமும் ஒன்று. ஒரு சாதாரண மிடில் கிளாஸ் குடும்பத்தில் பிறந்தவர் தான் இதனை நிறுவி மாபெரும் வெற்றி கண்டுள்ளார். அவர் யார் ? இந்த வெற்றி எப்படி சாத்தியமானது என்பதை பார்க்கலாம்.

யார் இந்த அனுபம் மிட்டல்..?: லட்சக்கணக்கான இந்தியர்களின் வாழ்க்கை துணையை தேடும் பயணத்தை எளிதாக்கியவர் அனுபம் மிட்டல். 1974ஆம் ஆண்டு மும்பையில் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர்.
டெல்லியில் பள்ளி படிப்பை முடித்த அவர் உயர் கல்விக்காக அமெரிக்கா சென்றார். அங்கு பாஸ்டன் கல்லூரியில் படிப்பை முடித்த அவர் இந்தியா திரும்பி தொழில் தொடங்க வேண்டும் என முடிவு செய்தார்.
நவீன தொழில்நுட்பம் மற்றும் மார்க்கெட்டிங் இரண்டிலும் வல்லவரான அனுபம் மிட்டல், வரன் தேடும் முறையை எளிதாக்கும் வகையில் ஒரு இணையதளத்தை உருவாக்கினால் என்ன என்ற ஐடியா தோன்றியது.
சவால்களை கடந்து சாதனை: 1996ஆம் ஆண்டு இணையதளம் துவங்கும் பணிகளை மேற்கொண்டார். மக்கள் வாழ்க்கை துணையை தேடும் முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும், அது நம்பகத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்பதை இலக்காக கொண்டு 1997ஆம் ஆண்டு Shaadi.com என்ற ஆன்லைன் மேட்ரிமோனியல் தளத்தை உருவாக்கினார். தொடக்கத்தில் இந்தியர்கள் பலர் இதனை ஏற்கவில்லை.
வாழ்க்கை துணையை தேடுவதை விளையாட்டாக எடுத்து கொள்ள முடியாது, இதன் நம்பகத்தன்மை எப்படி இருக்கும் என்றெல்லாம் கூறி ஏற்க மறுத்தனர். ஆனால் பாரம்பரிய முறையில் இருப்பதை விட ஆன்லைனில் அதிக வரன்களை காண முடியும், நமக்கு பிடித்த வரனை எளிதாக தேர்வு செய்ய முடியும் என்ற நம்பிக்கையை மக்கள் மனதில் வைத்தார் அனுபம் மிட்டல்.
நம்பிக்கை மூலம் கிடைத்த வெற்றி: தங்களுக்கு உகந்த துணையை தேர்வு செய்யும் வாய்ப்பு இதில் அதிகம் இருந்தது மற்றும் இந்த தளம் பயனாளர்களுக்கான பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டிருந்ததால் மக்கள் படிப்படியாக இதனை ஏற்க தொடங்கினர்.
முதலில் இந்தியாவினுள் மட்டும் வரன்களை காண முடிந்த நிலையில், வெளிநாடு வாழ் இந்தியர்களும் பயன்படுத்தும் வகையில் விரிவுபடுத்தப்பட்டது. பயனர்களின் தகவல்களை பாதுகாப்பாக வைப்பது, பிரைவசிக்கு முக்கியத்துவம் ஆகியவற்றால் மக்கள் விரும்பும் ஒரு மேட்ரிமோனியல் தளமானது Shaadi.com .
முதலீடு செய்வதில் ஆர்வம்: அனுபம் மிட்டலின் தற்போதைய சொத்து மதிப்பு 185 கோடி ரூபாய். இவர் பல்வேறு துறைகளில் கவனிக்கதகுந்த முதலீடுகளையும் செய்து வருகிறார். ஓலா கேப்ஸின் முதன்முறையாக முதலீடு செய்தவர். மேலும் 250 ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்து புதிய தொழில்முனைவோர்களை ஊக்குவித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications