ஜம்மு காஷ்மீர் மாநிலம் பகல்காமில் கடந்த 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் சுற்றுலா பயணிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். உலகமே இந்த பயங்கரவாத தாக்குதலால் அதிர்ச்சி அடைந்தது. இந்த கொடூர தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.
எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் ஆதரவளித்து வருவதும் இதுபோன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவி செய்து வருவதுமே எல்லையில் தாக்குதல் தொடர்வதற்கு காரணமாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் பாகிஸ்தானை எச்சரிக்கும் விதமாக மத்திய அரசு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. இது தவிர இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தான் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று அறிவிப்பையும் வெளியிட்டது.

மத்திய அரசு இந்த விவகாரம் தொடர்பாக பல முக்கிய ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியுள்ளது. அதே வேளையில் பாகிஸ்தான் தரப்பிலும் இந்திய தூதரகத்தில் பணியாற்றும் நபர்கள் 30ஆம் தேதிக்குள் வெளியேற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இந்திய தூதருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. பாகிஸ்தான் வான் வெளியில் இந்திய விமானங்கள் பறப்பதற்கு தடை விதிப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு பாகிஸ்தான் தயாராகி வருகிறது. இருந்தாலும் ஏற்கனவே பல நூறு கோடிகள் கடன் வலையில் சிக்கி இருக்கும் பாகிஸ்தானுக்கு இந்தியா மீது போர் தொடுப்பது என்பது பொருளாதார ரீதியாக தற்கொலை செய்து கொள்வதற்கு சமம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவுடன் எந்த ஒரு ராணுவ நடவடிக்கையை பாகிஸ்தான் எடுத்தாலும் பொருளாதார ரீதியில் அது பேரழிவை சந்திக்கும் என உயர்மட்ட உளவுத்துறை வட்டாரங்கள் தகவல் அளிப்பதாக சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் ஏற்கனவே பல்வேறு பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருக்கிறது. அந்த நாடு 22 பில்லியன் அமெரிக்க டாலர்கள் பணத்தை வெளியில் கடனாக வாங்கி வைத்திருக்கிறது. அந்த நாட்டின் வெளிநாட்டு நாணய கையிருப்பு வெறும் 8 பில்லியன் டாலராகத்தான் இருக்கிறது.

இந்த 8 பில்லியன் டாலர்களைக் கொண்டு அடுத்த ஒன்றரை மாதங்களுக்கான இறக்குமதிக்கு மட்டுமே பாகிஸ்தானால் செலவிட முடியும். இப்படி பல்வேறு நெருக்கடியில் சிக்கி இருக்கும் பாகிஸ்தான் போரில் இறங்கும் போது அதற்கு பல கோடி ரூபாயை செலவிட வேண்டி இருக்கும். இது அந்த நாட்டை மேலும் நிதி சிக்கலில் கொண்டு சென்று விடும். பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு ஏற்கனவே சரிவடைந்து வருகிறது. அதாவது தற்போது ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு 308 ரூபாய், அது 400 ஆக உயரும் என சொல்லப்படுகிறது.
இவ்வாறு அமெரிக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு சரிவடையும் போது அந்த நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும். இறக்குமதிக்கு அதிக பணம் செலவிட வேண்டும், ஏற்கனவே டாலர் கையிருப்பு குறைந்துவிட்டது. இந்நிலையில் எரிபொருட்கள் , மருந்து பொருட்கள் உள்ளீட்டவற்றின் விலை உயர்ந்து சாமானிய மக்கள் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள்.
தற்போது பாகிஸ்தானின் சர்வதேச நாணய நிதியமான ஐஎம்எஃப் 3 பில்லியன் டாலர்கள் நிதி உதவி வழங்கி இருக்கிறது. ஆனால் பாகிஸ்தான் அமைதியை நிலைநாட்ட வேண்டும் பிராந்திய ரீதியாக போர் உள்ளிட்ட எந்த ஒரு நடவடிக்கைகளும் மேற்கொள்ளக்கூடாது என ஏற்கனவே நிபந்தனை விதித்துள்ளது. தாங்கள் வழங்கும் நிதியை போரு உள்ளிட்ட செயல்களுக்கு பயன்படுத்த கூடாது என்றும் கூறியுள்ளது.
இதனை மீறி செயல்பட்டால் தொடர்ந்து ஐஎம்எஃப் வழங்க வேண்டிய பணம் நிறுத்தி வைக்கப்படும். பாகிஸ்தான் அரசு போருக்காக இராணுவத்திற்கு அதிக பணத்தை செலவிடும்போது கடனை திரும்ப செலுத்துவதற்கு பணம் இல்லாமல் தவிக்கும் நிலையை ஏற்படுத்தும். பாகிஸ்தான் இந்தியா மீது போர் தொடுத்தால் ஏற்கனவே அந்த நாட்டுக்கு சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் வழங்கி வரும் நிதி உதவி நிறுத்தப்படும்.
சீனா பாகிஸ்தானில் மேற்கொள்ள இருந்த சீனா பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டம் நிறுத்தப்படும். இந்த திட்டத்திற்காக சீனா 62 பில்லியன் டாலர்களை முதலீடு செய்வதாக இருந்தது. தற்போது பாகிஸ்தான் இந்தியாவுடன் போர் தொடங்கினால் சீனா இந்த திட்டப்பணிகளை கைவிட்டு விடும் என சொல்லப்படுகிறது. பாகிஸ்தான் இந்தியாவை பகைத்து கொண்டால் இருநாட்டுக்கும் இடையிலான 2 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்படும்.
பாகிஸ்தானுக்கு தேவையான மருந்து மற்றும் பிற ரசாயனங்கள் இந்தியாவிலிருந்து தான் இறக்குமதி செய்யப்படுகின்றன. அதேபோல இந்திய கடற்படை பாகிஸ்தானுக்கு கடல் வழியே நிகழும் வணிகத்தை 95 சதவீதம் தடுத்துவிடும் என சொல்லப்படுகிறது. இதன் காரணமாக பாகிஸ்தானில் எரிபொருள், அரிசி, துணிமணி உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் இறக்குமதி குறைந்து அதன் ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டு அத்தியாவசிய பொருட்கள் விலை பல மடங்கு உயரும்.
இது பாகிஸ்தான் நாட்டு மக்களுக்கு பெரிய பிரச்சினையாக வந்து முடியும். ஏற்கனவே மத்திய அரசு சிந்து நதி ஒப்பந்தத்திற்கு தடை விதித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்லக்கூடிய நீர் தடுக்கப்படும். இதனால் பாகிஸ்தானில் விவசாயம் பாதிக்கப்படும். பஞ்சாப் மற்றும் சிந்து ஆகிய மாநிலங்களில் வறட்சி ஏற்படும் வாய்ப்பு உண்டாகும்.
போர் ஏற்படும்போது பாகிஸ்தானின் பங்குச்சந்தையும் கடுமையான சரிவை சந்திக்கும். இது தவிர 10 முதல் 20 மில்லியன் மக்கள் தங்களுடைய வீடுகளையும் உடைமைகளையும் இழக்க நேரிடும். பாகிஸ்தான் அரசே திவால் நிலைக்கு செல்லும் சூழல் உண்டாகும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
பாகிஸ்தானின் பொருளாதாரம் ஏற்கனவே பல நெருக்கடியில் சிக்கி இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் அரசு போரை தொடங்கினால் நாட்டின் அனைத்து பகுதிகளும் அதன் தாக்கத்தை உணரும். ஏற்கனவே அரசு மீது மக்களுக்கு இருக்கும் அதிருப்தி அதிகரிக்கும்.
காஷ்மீரில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் இந்தியாவை கடுமையாக கோபமடைய செய்துள்ளது. ராஜாங்க ரீதியாக பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. ராணுவ ரீதியான நடவடிக்கைகளும் தொடங்கப்பட்டுள்ளன. இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக, சந்தேகப்படும் பயங்கரவாதிகளின் வீடுகளை பாதுகாப்பு படையினர் இடித்து தரைமட்டமாக்கியுள்ளனர். காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் லஷ்கர்-இ-தொய்பா மூத்த தளபதி உட்பட 5 பேரின் வீடுகளை பாதுகாப்பு படையினர் இடித்தனர். பயங்கரவாதிகளின் படங்களும் வரையப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications