இந்தியாவில் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது.கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கிய வாக்குப்பதிவு வரும் ஜூன் 1ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனை அடுத்து ஜூன் 4ஆம் தேதி நாடு முழுவதும் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாக உள்ளன.
இந்தியாவின் தேர்தல் முடிவுகளை உலகமே உற்று நோக்கி வருகிறது. இந்த நிலையில் நியூஸ் 18க்கு பேட்டி அளித்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் தினத்தில் இந்திய பங்குகள் உச்சத்திற்கு செல்லும் எனக் கூறியுள்ளார்.

பல்வேறு சர்வதேச நிறுவனங்களும் ஜூன்4ஆம் தேதிக்காக காத்துக் கொண்டிருப்பதாகவும், தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் சர்வதேச நிறுவனங்கள் இந்தியாவில் வந்து நிறுவனங்களை தொடங்குவதற்கும், முதலீடு செய்வதற்கும் தயாராக இருக்கின்றன எனவும் கூறியுள்ளார். குறிப்பாக ஜூன் 4ஆம் தேதி சர்வதேச சந்தையில் இந்திய பங்குகள் புதிய உச்சத்தை எட்டி இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இளைஞர்கள் சென்று தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ள ஜெய்சங்கர், இளைஞர்களின் முடிவில் தனக்கு நம்பிக்கை இருப்பதாக கூறியுள்ளார் . எந்த பட்டனை அழுத்த வேண்டும் என நான் கூற வேண்டிய அவசியம் இல்லை இளைஞர்களுக்கே அது தெரியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
400 இடங்களை கண்டிப்பாக பாரதிய ஜனதா கட்சி கைப்பற்றும் என நம்பிக்கையுடன் பேட்டி அளித்துள்ள அமைச்சர் ஜெய்சங்கர் மக்களுக்கு பாரத ஜனதா கூட்டணிக்கும் இந்தியா கூட்டணிக்கும் இடையில் உள்ள வித்தியாசம் தெரியும் , எந்த கூட்டணியை தேர்வு செய்ய வேண்டும் என்ற தெளிவு மக்களுக்கு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
நிச்சயம் இது மோடியின் கேரண்டி தொடர்பான தேர்தல் என சுட்டிக்காட்டி இருக்கும் ஜெய்சங்கர், இரண்டு முறை பிரதமர் பதவி வகுத்திருக்கும் மோடி திறமையான ஆட்சியை வழங்கி இருக்கிறார் என தெரிவித்துள்ளார்.இதுபோல ஒரு கேரண்டியை இந்தியா கூட்டணியால் வழங்க முடியுமா என்ற கேள்வியையும் அவர் முன் வைத்துள்ளார். தங்களின் அரசு இந்திய பொருளாதாரத்தை பல ட்ரில்லியன் அளவிற்கு உயர்த்தும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தேர்தல் முடிவுகளுக்கு இன்னும் 10 நாட்களே இருக்கும் நிலையில் இந்திய பங்குச் சந்தைகள் சில தினங்களாகவே பாசிட்டிவான பாதையிலேயே உள்ளது. குறிப்பாக சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.
பாரதி ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கணிசமான இடங்களை பெற்று வெற்றி அடையும் என கணிப்புகள் வெளியாகி வரும் நிலையில் முதலீட்டாளர்கள் இந்திய பங்கு சந்தையில் நம்பிக்கையுடன் முதலீடு செய்வதாகவும் அதுவே தற்போது பங்குச்சந்தை ஏற்றத்துக்கு காரணம் என்றும் சொல்லப்படுகிறது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications