மும்பை: ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியாவில் 100 பில்லியன் டாலர் முதலீடுகள் வர இருப்பதாக மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பையில் இந்தியா ஐக்கிய அரபு அமீரக உயர்நிலைப் பணிக்குழுவின் 12ஆவது கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்தியா சார்பில் அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்றார்.
அப்போது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவு, முதலீடுகள் குறித்து பரஸ்பரம் விவாதிக்கப்பட்டது. குறிப்பாக டேட்டா மையங்கள், செயற்கை நுண்ணறிவு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு உள்ளிட்ட பிரிவுகளில் ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்வது என அப்போது முடிவெடுக்கப்பட்டது.

இந்த முயற்சிகள் வாயிலாக ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து மட்டும் இந்தியாவில் 100 பில்லியன் டாலர் அளவிலான முதலீடுகள் வர இருக்கின்றன என அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். தற்போது இந்தியாவில் ஐக்கிய அரபு அமீரகத்தின் நேரடி ஈக்விட்டி முதலீடுகள் வெறும் 20 பில்லியன் டாலருக்கும் குறைவாகத்தான் இருக்கிறது என்றும் இதில் 3 பில்லியன் டாலர்கள் கடந்த ஓராண்டில் மட்டுமே முதலீடு செய்யப்பட்டுள்ளது என்றும் கோயல் தெரிவித்தார்.
ஐக்கிய அரபா அமீரகத்தில் இருந்து இந்தியாவை நோக்கி வரும் முதலீடுகளின் அளவு கடந்த ஐந்து ஆண்டுகளில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது என அவர் கூறினார். இந்தியாவில் அதிக முதலீடு செய்யும் ஏழாவது பெரிய நாடாக ஐக்கிய அரபு அமீரகம் இருக்கிறது என்றும் அவர் கூறினார்.
மேலும் விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தத்தின் அடிப்படையில் இரு நாடுகளும் எந்தெந்த துறைகளில் எல்லாம் பொருளாதார சார்ந்தும் நிதி சார்ந்தும் இணைந்து செயல்பட முடியும் என்பது குறித்து விரிவான ஆலோசனை நடத்தியதாக அமைச்சர் கோயல் தெரிவித்துள்ளார்.
முதலீடு, வர்த்தகம், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலா ஆகிய பிரிவுகளில் இரு நாடுகளும் ஒத்துழைப்புடன் செயல்படுவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதேபோல இந்தியா ஐக்கிய அரபு அமீரகத்திலும், ஐக்கிய அரபு அமீரகம் இந்தியாவிலும் தங்களுடைய முதலீடு, தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றை விளம்பரம் செய்வதற்கான மையங்களை நிறுவும் என்றும் இந்தியாவின் யுபிஐ மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் டிஜிட்டல் பேமெண்ட் முறைகளோடு இணைந்து மேம்படுத்தப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தக இந்திய நிறுவனம் சார்பாக துபாயில் ஒரு கேம்பஸ் திறக்கப்படுவது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் இந்தியா ஐக்கிய அரபு அமீரகம் இடையே 16,800 கோடி ரூபாய் முதலீட்டில் உணவு வழித்தடம் அமைக்க இருப்பதாக அமைச்சர் அறிவித்தார்.
இதற்காக இரு நாடுகளின் பிரதிநிதிகள் அடங்கிய சிறிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். இதன் மூலம் இந்தியாவில் உற்பத்தியாகும் உணவுப் பொருட்கள் நேரடியாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படும்.
Written by: Devika


Click it and Unblock the Notifications