மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 8ஆவது சம்பள கமிஷன் எப்போது நடைமுறைக்கு வரும் தங்களுடைய சம்பளம் மற்றும் ஓய்வூதிய தொகை எப்போது உயரும் என காத்திருக்கின்றனர். சம்பள கமிஷனே தாமதமாக தான் அமைக்கப்பட்டிருக்கிறது என்பதால் நாள்தோறும் புது புது தகவல்கள் பரவி அரசு ஊழியர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
சம்பள கமிஷன் அடிப்படையில் மத்திய அரசு எவ்வளவு ஊதிய உயர்வு வழங்குகிறதோ அதனை அடிப்படையாகக் கொண்டுதான் மாநில அரசுகளும் ஊதிய உயர்வு அறிவிப்பை வெளியிடும் என்பதால் சம்பள கமிஷன் தொடர்பான ஒவ்வொரு அப்டேட்டையும் மாநில அரசு ஊழியர்களும் கவனித்து வருகின்றனர். இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் பல்வேறு எம்பிக்களும் எட்டாவது சம்பள கமிஷன் குறித்த கேள்விகளை முன் வைத்திருந்தனர்.

இதற்கு மத்திய நிதி துறை இணை அமைச்சர் பங்கச் சவுத்ரி விரிவான பதிலை வழங்கியிருக்கிறார். எட்டாவது சம்பள கமிஷன் அமைப்பது தொடர்பான அதிகாரப்பூர்வமான அரசாணை கடந்த 2025 நவம்பர் மாதம் 3ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த சம்பள கமிஷன் அரசு ஊழியர்களுக்கான சம்பளம், அவர்களுக்கு வழங்கப்படக் கூடிய அலோவென்சுகள் , ஓய்வூதியம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்து தன்னுடைய பரிந்துரைகளை வழங்கும் என கூறியுள்ளார்.

அப்படி என்றால் சம்பள கமிஷன் நடைமுறைக்கு வரும் போது அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தை தாண்டி மற்ற அலோவென்சுகளிலும் மாற்றம் இருக்கும் என்பது உறுதியாகிறது. அதே போல சம்பள கமிஷன் அமைத்த தேதியில் இருந்து 18 மாதங்களில் சம்பள உயர்வு குறித்த பரிந்துரைகளை வழங்க வேண்டும் என கூறியிருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.
கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து 18 மாதங்கள் என வைத்து கொண்டால் 2027 ஆம் ஆண்டு மே மாதத்திற்குள் சம்பள கமிஷன் தன்னுடைய பரிந்துரைகளை வழங்குவதற்கு வாய்ப்பு உள்ளது. தேவைப்பட்டால் கால நீட்டிப்பும் வேண்டும் என அவர்கள் கேட்க முடியும்.
சம்பள கமிஷன் தன்னுடைய பரிந்துரைகளை வழங்கிய உடன் அரசு தன்னுடைய பட்ஜெட் ஒதுக்கீடு செலவினம் ஆகியவற்றை ஆய்வு செய்து அவர்கள் குறிப்பிடும் சதவீதத்திற்கு சம்பள உயர்வை வழங்கலாம். அதாவது ஃபிட்மெண்ட் ஃபேக்டரை ஏற்கலாம் அல்லது அதில் இருந்து குறைத்தும் சம்பள உயர்வு வழங்கலாம். இறுதி முடிவு மத்திய அரசின் கையில் தான் இருக்கிறது.
சம்பள கமிஷன் பருந்துரை வழங்கிய பின்பு தான் அரசு எவ்வளவு நிதி ஒதுக்க வேண்டும் என்பதை எல்லாம் முடிவு செய்யும் என கூறியுள்ள அவர் ஓய்வூதிய விதிகளில் எந்த மாற்றமும் கொண்டு வரப்படவில்லை என கூறியுள்ளார். அதாவது ஓய்வூதியமும் 8ஆவது சம்பள கமிஷன் அடிப்படையில் திருத்தி அமைக்கப்படும் என உறுதி அளித்துள்ளார். 8ஆவது சம்பள கமிஷன் தொடர்பான பல புரளிகள் பரவி வரும் நிலையில் அமைச்சரின் விளக்கம் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications