தமிழ்நாடு அரசு, அனைத்து மாவட்டங்களும் உள்ளடக்கிய வளர்ச்சி, மாநிலம் முழுவதும் பரவலாக்கப்பட்ட வளர்ச்சி என்பதில் கவனம் செலுத்துகிறது. அனைத்து மாவட்டங்களிலும் தொழில்பூங்காக்கள், ஐடி பூங்காக்கள் என திட்டமிட்டுள்ளது. அது தவிர மாவட்ட ரீதியாக பிரத்தியேக முதலீட்டாளர் மாநாட்டையும் நடத்துகிறது.
தமிழ்நாட்டில் ஐடி நிறுவனங்களுக்கான நகரமாக இருக்கிறது சென்னை. இங்கே ஐடி துறை வளர்ச்சிக்கு வித்திட்டது டைடல் பூங்கா தான். எனவே இதனை மாடலாக கொண்டு பெரு நகரங்களில் டைடல் பூங்காக்களும் சிறு நகரங்களில் மினி டைடல் பூங்காக்களும் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கிறது. டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும் போது அங்கே ஐடி சேவை நிறுவனங்கள் அலுவலகங்களை அமைக்கும் இதனால் இளைஞர்களுக்கு அவர்களின் மாவட்டத்திலேயே ஐடி வேலை கிடைக்கும்.

அந்த வகையில் தற்போது திண்டுக்கல் மக்களுக்கு அமைச்சர் டிஆர்பி ராஜா ஒரு நல்ல செய்தியை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ள அமைச்சர் டிஆர்பி ராஜா, மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலினின் திராவிட_மாடல் ஆட்சியில், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி சென்னைக்கு மட்டுமின்றி ; மாவட்டங்களுக்கெல்லாம் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் கடந்த 4 ஆண்டுகளில் 17 புதிய TIDEL Neo திட்டங்களும், 3 புதிய TIDEL Park திட்டங்களும் தொடங்கப்பட்டுள்ளன என கூறியுள்ளார்.
இதில் 7 #TIDELNeo மையங்கள் திறக்கப்பட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி வருகின்றன. மேலும் 6 மையங்கள் கட்டுமானத்தில் உள்ளன; இன்னும் 4 மையங்களில் பணிகள் விரைவில் தொடங்க உள்ளன என தெரிவித்துள்ளார். அதோடு, மதுரை, திருச்சி மற்றும் ஓசூர் நகரங்களின் 3 புதிய #TIDELParkகளை அமைக்கும் பணியை திராவிட மாடல் ஆட்சி துவங்கியுள்ளது. மாவட்ட இளைஞர்கள் தங்கள் சொந்த மண்ணிலேயே உலகத் தரம் வாய்ந்த வேலைவாய்ப்பைப் பெறும் தமிழ்நாட்டை உருவாக்குவதே நமது இலக்கு என சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த வரிசையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆலோசனையின்படி திண்டுக்கல் மாவட்ட இளைஞர்கள் பயன்பெறும் வகையில், திண்டுக்கல்-தேனி புறவழிச்சாலையில் உள்ள அனுமந்தராயன் கோட்டையில் 5 ஏக்கர் பரப்பளவில் புதிய "மினி டைடல் பார்க்" ஒன்று அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்.
இதன் மூலம் திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்ட இளைஞர்கள் ஐடி வேலைக்காக சென்னை ,கோவை, பெங்களூரு போன்ற நகரங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. திண்டுக்கலிலேயே ஐடி வேலை கிடைக்கும்., ஐடி துறை வளர்ச்சி மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் வித்திடும். விரைவில் இதற்கான டெண்டர் அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications