2023-24 ஆம் நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்கினை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நேற்றுடன் (ஜூலை 31) முடிவடைந்து விட்டது. இந்த தேதிக்குள் கணக்கினை தாக்கல் செய்யாதவர்கள் இனி அபராதத்துடன் மட்டுமே வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய முடியும். பழைய வரி நடைமுறைப்படி ஆண்டு வருமானம் 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் இருப்பவர்களும் , புதிய வரி நடைமுறையில் ஆண்டு வருமானம் 3 லட்சம் ரூபாய்க்கு மேல் இருப்பவர்களும் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வது கட்டாயமாகும்.
இதற்கு ஜூலை 31ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வருமான வரி கணக்கினை தாக்கல் செய்ய தவறியவர்கள் இனி அபராதத்துடன் தான் கணக்கு தாக்கல் செய்ய முடியும்.

வருமான வரித்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் ஜூலை 31 ஆம் தேதி வரை கிட்டதட்ட 7 கோடி வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஜூலை 31ஆம் தேதியை தாண்டி காலக்கெடு நீட்டிக்கப்படாது என பலமுறை வருமானவரித்துறை தெரிவித்தது. வருமான வரி சட்டத்தின் பிரிவு 234f-இன் கீழ் வருமான வரி கணக்கினை தாமதமாக அதாவது ஜூலை 31ஆம் தேதிக்கு பிறகு தாக்கல் செய்பவர்களுக்கு 5,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுகிறது.
ஒருவரது ஆண்டு வருமானம் 5 லட்சம் ரூபாய்க்கும் கீழ் இருந்து அவர்கள் கடைசி தேதிக்கு பின்னர் கணக்கினை தாக்கல் செய்தால் 1000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். ஒருவேளை ஆண்டு வருமானம் 5 லட்சம் ரூபாய்க்கும் மேல் இருந்தால் அவர்கள் 5,000 ரூபாயை அபராதமாக செலுத்த வேண்டும். ஜூலை 31ஆம் தேதிக்கு பிறகு வருமான வரி கணக்கினை தாக்கல் செய்பவர்களுக்கு அவர்கள் அபராதம் செலுத்தியதற்கான ஆவணங்கள் இருந்தால் மட்டுமே வருமான வரி இணையதளமானது அந்த கணக்கு தாக்கலை எடுத்துக் கொள்ளும்.
அபராதம் மட்டுமில்லாமல் நிலுவையில் இருக்கக்கூடிய வரிக்கும் கூடுதலாக அபராத வரி என்பது விதிக்கப்படுகிறது. வருமான வரி உச்ச வரம்பை விட அதிக வருமானம் கொண்டவர்கள், வருமான வரி உச்ச வரம்பிற்கு கீழ் வருமானம் இருந்தாலும் ஓர் நிதியாண்டில் ரூ.1 லட்சம் வரை மின்சார கட்டணம் செலுத்தியவர்கள், ஓர் நிதியாண்டில் 2 லட்சம் ரூபாய்க்கும் மேல் செலவு செய்து வெளிநாட்டு சுற்றுலா சென்றவர்கள் ஆகியோர் கட்டாயம் வருமான வரி கணக்கை தாக்கல் செய்திருக்க வேண்டும். ஒருவேளை இவர்கள் தாமதமாக கணக்கினை தாக்கல் செய்தால் அபராதம் செலுத்துவது கட்டாயமாகும்.
வருமான வரி உச்ச வரம்பிற்கு கீழ் (புதிய வரி முறை - 3 லட்சம், பழைய முறை - 2 லட்சம்) ஆண்டு வருமானம் கொண்டவர்கள் வருமான வரி கணக்கினை தாக்கல் செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆனால் இவர்களாக விருப்பப்பட்டு வருமான வரி கணக்கை தாக்கல் செய்கிறார்கள் , ஒருவேளை ஜூலை 31க்கு பிறகு கணக்கினை தாக்கல் செய்யும் போது இவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதில்லை.


Click it and Unblock the Notifications