தீபாவளி பண்டிகை நெருங்கி விட்டது, பண்டிகை காலம் வந்துவிட்டாலே கொண்டாட்டம் தான். அதிலும் தீபாவளி பண்டிகை என்றால் டபுள் கொண்டாட்டம், சிறுவர்களுக்குப் பட்டாசு, இளைஞர்களுக்குப் புது டிரஸ், வேலை செய்வோருக்குப் போன்ஸ் என மகிழ்ச்சிக்குக் குறைவில்லாத தருணம் தான் இந்தத் தீபாவளி.
சமீப காலமாக நிறுவனங்கள் இந்தத் தீபாவளி பண்டிகையைத் தனது நீண்ட கால வளர்ச்சிக்கு அடித்தளமிடும் ஒரு வாய்ப்பாக அமைத்துக்கொள்ளவும், தனது நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அதிகம் பங்காற்றிய ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் ஒரு வாய்ப்பாகவும் பயன்படுத்திக்கொண்டு வருகிறது.

சில வருடங்களுக்கு முன்பு குஜராத் வைர வியாபாரிகள் தான் தனது ஊழியர்களுக்குக் கார், பைக், வீடு, பணம், கிப்ட் என ஊழியர்களுக்கு அள்ளி கொடுக்கும் வழக்கம் இருந்தது. தற்போது இந்த நல்ல வியாதி இந்தியாவில் பல தொழிலதிபர்களுக்கும் தொற்றிக்கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது.
சில நாட்களுக்கு முன்பு ஊட்டி டீ எஸ்டேட்டில் பணியாற்றிய தனது ஊழியர்களுக்குத் தீபாவளி போனஸாக ராயல் என்பீல்ட் பைக்கை பரிசாக வழங்கியது இந்த ஊழியர், அவரது குடும்பத்தைத் தாண்டி அனைவருக்கும் நெகிழ்வாக அமைந்தது. இதேபோன்ற சம்பவம் இப்போது ஹரியானாவில் நடந்துள்ளது, இங்குப் பைக்கிற்குப் பதிலாகக் கார்.
ஹரியானாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், தனது 12 பணியாளர்கள் மீது புதிய SUV கார்களை அன்பளிப்பாகக் கொடுத்து, 2023 தீபாவளி-க்கு புதிய ட்ரெண்டை உருவாக்கியுள்ளார். ஊழியர்களின் பணியை அங்கீகரிக்கும் பழக்கம் நாளுக்கு நாள் குறைந்து வரும் கார்ப்பரேட் உலகில் இதுபோன்ற நிகழ்வு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
MITS குழும நிறுவனங்களின் தலைவர் எம்.கே. பாட்டியா தனது பஞ்ச்குலாவைச் சேர்ந்த மருந்து நிறுவனமான மிட்ஸ்கார்ட்-ன் (Mitskart) ஊழியர்களுக்கு இந்தத் தீபாவளி பண்டிகைக்குப் பெரிய பரிசுகளை வழங்க முடிவு செய்தார்.
இதன் மூலம் 12 ஊழியர்களுக்கு டாடா பன்ச் எஸ்யூவி கார்களை அவர்களின் கடின உழைப்புக்கும் நேர்மையைப் பாராட்டியும் நன்றி தெரிவித்தும் பரிசளித்தார். எம்.கே. பாட்டியா தன்னை ஒரு முதலாளியாகவோ அல்லது தன்னிடம் வேலை செய்பவர்களை ஊழியர்களாகவோ கருதவில்லை என்று கூறுகிறார்.
எம்.கே. பாட்டியா தனது ஊழியர்களுக்குக் கார் வழங்கிய நிலையில் இதில் சிலருக்குக் கார் ஓட்டுவது கூடத் தெரியாது என்பது பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. கார் ஓட்ட தெரியாதவர்கள் வீட்டிலும் இப்போது ஒரு கார் நிற்கிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு தான் எம்.கே. பாட்டியா தனது மிட்ஸ்கார்ட் நிறுவனத்தைத் தொடங்கியதாகவும், வெகுமதி பெற்ற ஊழியர்கள் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியதாகவும் பாட்டியா ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். தனது ஊழியர்களைத் தான் பிரபலங்களாகக் கருதுவதாகவும் அவர் கூறினார்.

பாட்டியா எப்போதோ தனது ஊழியர்களுக்குக் குறிப்பிட்ட வளர்ச்சியை அடைந்தால் கார் வாங்கிக் கொடுப்பதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார். இதை நினைவில் வைத்து பாட்டியா 12 டாடா பன்ச் எஸ்யூவி கார்களைப் பரிசாக வழங்கியதைக் கண்டு ஊழியர்கள் மகிழ்ச்சியுடன் ஆச்சரியப்பட்டனர்.


Click it and Unblock the Notifications