மிசோரம் முதல்வர் லால்டுஹோமா, 78வது சுதந்திர தினத்தையொட்டி பேசியபோது, அம்மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், தகுதியானவர்களுக்கு ரூ.50 லட்சம் வரையிலான வட்டியில்லாக் கடன் வழங்கும் திட்டத்தை அரசு தொடங்கும் என்று அறிவித்தார்.
கடந்த ஆண்டு டிசம்பரில் ஆட்சிக்கு வந்த ஜோரம் மக்கள் இயக்கம் (ZPM) அரசின் கீழ் ஆட்சி மற்றும் நிர்வாகத்தின் பல்வேறு குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அரசு பொறுப்புணர்வு, வெளிப்படைத்தன்மை மற்றும் மக்கள் சார்ந்த நிர்வாகத்தை வழங்குவதில் உறுதியாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மாநிலத்தின் வளர்ச்சிக்காக அரசு பெரும் முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும், தகுதியானவர்களுக்கு அரசின் உத்தரத்தின் கீழ் 50 லட்சம் ரூபாய் கடன் திட்டத்தைத் தொடங்க உள்ளதாகவும் அவர் கூறினார். இந்த கடனுக்கான மொத்த வட்டி சுமையை அரசே ஏற்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பைப் பற்றித் தான் தற்போது ஒட்டுமொத்த இந்தியாவும் பேசி வருகிறது. இந்த புதிய கடன் மாதிரி வெற்றிகரமாக அமைந்தால் அடுத்தடுத்து வரும் மாநில தேர்தல்களில் இதுபோன்ற திட்டம் முக்கிய வாக்குறுதியாக இருக்கலாம்.
"மிசோரம் அரசு உத்தரவாதம் உச்சவரம்பு சட்டம், 2011 திருத்தப்பட உள்ளது. இதன் மூலம் தகுதியானவர்களுக்கு ரூ.50 லட்சம் வரையிலான கடன் பெற வழிவகுக்கும். அரசு கடனுக்கான உத்தரவாதமும், வட்டியையும் ஏற்கும். இது நாட்டிலேயே முதல் திட்டமாக இருக்கலாம்" என்று மிசோரம் மாநில முதல்வர் லால்டுஹோமா தெரிவித்தார்.
அரசு விரைவில் மாநிலத்தில் 'பொதுச் சுகாதார காப்பீட்டுத் திட்டம்' என்ற புதிய திட்டத்தையும் தொடங்க உள்ளதாகவும், இதில் பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள் என்றும் அவர் கூறினார். மாநில அரசின் நிதி நிலையை மேம்படுத்த, நிதி நிலைப்படுத்தல் மற்றும் நிதி ஒருங்கிணைப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
தனியார்த் துறையிலிருந்து முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காகப் பிப்ரவரி மாதம் மிசோரம் நிலையான முதலீட்டுக் கொள்கை 2024 ஐ அரசு அறிமுகப்படுத்தியுள்ளதாகவும், இது நிலையான வளர்ச்சியுடன் இணைந்த பொருளாதார வளர்ச்சி மற்றும் முதலீட்டை ஊக்குவிக்கும் விரிவான முதலீட்டுக் கட்டமைப்பை வழங்குகிறது என்றும் அவர் கூறினார்.


Click it and Unblock the Notifications