தமிழ்நாட்டிற்கு கணிசமான அந்நிய நேரடி முதலீடுகள் தைவான் நாட்டில் இருந்து தொடர்ந்து வரும் வேளையிலும், சீனா மற்றும் வியட்நாம் நாட்டில் இருக்கும் உற்பத்தி தளங்கள் இந்தியாவுக்கு மாற்றப்பட்டு வரும் வேளையிலும் தமிழ்நாடு அரசு முக்கியமான திட்டத்தைத் தைவான் நாட்டு நிறுவனங்களுக்காக எடுத்துள்ளது.
சென்னை அருகே ஒரு புதிய தைவான் தொழிற்பூங்காவை அமைப்பதற்கு முக ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் மூலம் தைவான் நிறுவனங்கள் வாயிலாக மட்டும் இச்சிறப்பு தொழிற்பூங்காவில் ரூ.10,000 கோடி முதலீடுகளை ஈர்க்கவும், சுமார் 20,000 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் திறன் கொண்டதாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு புதிய முதலீடுகளை ஈர்க்கவும், உயர் தொழில்நுட்ப மிக்க நிறுவனங்களை நம் மாநிலத்தில் அலுவலகத்தையும், தொழிற்சாலைகளையும் அமைக்க தற்போது தனி நாடுகளைக் குறித்து இத்தகைய சிறப்புத் தொழிற்பூங்காவை அமைக்கும் திட்டத்தில் இறங்கியுள்ளது. இந்தியாவில் ஜப்பான் தொழிற்பூங்கா வட இந்தியாவில் வெற்றிகரமாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, சென்னை அருகே அமையவுள்ள இந்த தைவான் தொழிற்பூங்கா குறித்து விரிவாகப் பேசினார். தமிழ்நாடு, தொழிற்துறை மற்றும் பொருளாதார வளர்ச்சியில் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. இதில், தைவானில் இருந்து வரும் முதலீடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த புதிய தொழிற்பூங்கா, மேலும் பல தைவான் நிறுவனங்களை மாநிலத்திற்கு ஈர்க்கும் என தெரிவித்தார்.
இந்த திட்டம், ரூ.10,000 கோடி மதிப்பிலான முதலீடுகளைப் பெறுவதற்கான சாத்தியக்கூறுகளை உள்ளடக்கியுள்ளது. மேலும், இது 20,000 பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது, சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் பொருளாதார மேம்பாட்டிற்குப் பெரிய அளவில் உதவும்.

மேலும் சட்டப்பேரவையில் அமைச்சர் டிஆர்பி ராஜா, 2024-ஆம் ஆண்டு தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் (Tamil Nadu Global Investors Meet 2024) கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் (MoUs) மாற்று விகிதம் (conversion rate) தற்போது 72 சதவீதமாக உள்ளதாகத் தெரிவித்தார். 2021 முதல் இன்று வரை மொத்தம் 897 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன, இதில் 722 ஒப்பந்தங்களின் பணிகள் தொடங்கப்பட்டு, பல திட்டங்கள் ஏற்கனவே உற்பத்தியைத் துவங்கியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த வெற்றி விகிதம், தமிழ்நாடு அரசின் தொழிற்துறை மேம்பாட்டு முயற்சிகளுக்கு முதலீட்டாளர்களிடையே உள்ள நம்பிக்கையை காட்டுகிறது எனச் சட்டப்பேரவையில் பேசும் போது தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications