தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு புதிய முதலீடுகளையும், புதிய தொழிற்சாலைகளைச் சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் மட்டுமே முடக்கி வைக்கக் கூடாது, மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் முதலீடுகளும், தொழிற்துறைகள் உருவாக்க வேண்டும் என்று முடிவெடுத்தது தொடர்ந்து தற்போது மாநிலத்தின் பல மாவட்டத்தில் புது புது வளர்ச்சி திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
இதன் வாயிலாக தற்போது மு.க ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசின் டார்கெட் மத்திய தமிழ்நாடாக உள்ளது. மக்கள் தொகை, தொழில் வளம், இயற்கை வளம், திறமையான ஊழியர்கள் நிறைந்த பகுதியாக இருந்தாலும் இப்பகுதியின் திறன் பெரிய அளவில் பயன்படுத்தப்படாமலேயே இருந்தது.

இதனை கவனித்த தமிழ்நாடு அரசு நேற்று சட்டசபையில் அறிவித்த 8 சிப்காட் திட்டத்தில் 5 புதிய சிப்காட் மத்திய தமிழ்நாட்டில் அமைந்துள்ளது அனைவரும் கவனிக்கப்பட வேண்டிய விஷயமாக உள்ளது.
தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு அமைப்பான SIPCOT மாநிலம் முழுவதும் 8 இடங்களில் 4,000 ஏக்கர் பரப்பளவில் புதிய தொழில் பூங்காக்களை சுமார் 11000 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்க உள்ளதாக அறிவித்தது. இதன் மூலம் 1,07,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என கணக்கிடப்பட்டு உள்ளது.
புதிய தொழில் பூங்காக்கள் திருவள்ளூர், தூத்துக்குடி, அரியலூர், திருச்சிராப்பள்ளி, திருவாரூர், காஞ்சிபுரம், சென்னை மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் T R B ராஜா சட்டமன்றத்தில் தெரிவித்தார்.
தமிழ்நாடு தொழில் துறை அமைச்சரான டி.ஆர். பி. ராஜா வெள்ளிக்கிழமை அறிவித்தது படி மத்திய தமிழ்நாட்டில் மட்டும் நான்கு மாவட்டங்களில் ஐந்து புதிய சிப்காட் தொழிற்பூங்காக்களை உருவாக்கத் தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இந்த அறிவிப்பு, பகுதி தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
திருவரம்பூரில் புதிய தொழிற்பூங்கா: திருச்சியில் அருகே ஏற்கனவே தொழில் வளர்ச்சி பெற்ற பகுதியான திருவரம்பூரில் 150 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழிற்சாலை பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது. இப்பகுதியில் ஏற்கனவே பாரத ஹெவி எலெக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL), MSME நிறுவனங்கள் அதிகமாக உள்ளது.
திருச்சி-யில் ஏற்கனவே மணப்பாறையில் ஒரு சிப்காட் தொழிற்பூங்கா இருந்தாலும், திருவரம்பூரில் முன்மொழியப்பட்டுள்ள இந்த புதிய சிப்காட் தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களுக்கும் பயனளிக்கும். திருவரம்பூர் சிப்காட் 150 ஏக்கரில் ரூ.225 கோடி முதலீட்டில், 3,000 நேரடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.
பெரம்பலூரில் இரண்டாவது சிப்காட் பூங்கா: தொழில் வளர்ச்சியில் பின்தங்கியுள்ள பெரம்பலூர் மாவட்டத்திற்கு இரண்டாவது சிப்காட் தொழிற்பூங்கா அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே உள்ள திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இறையூர் தொழிற்பூங்காவுக்குக் கூடுதலாக, பெரம்பலூர் மாவட்டத்தின் குன்னம் பகுதியில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் புதிய தொழிற்பூங்கா அமைக்கப்படவுள்ளது.
அரியலூரின் முதல் தொழிற்பூங்கா: தொழில் துறையில் புதியதாகக் களம் இறங்கும் அரியலூர் மாவட்டத்தில், உடையார்பாளையத்தில் 175 ஏக்கர் பரப்பளவில் முதல் தொழிற்பூங்கா அமைக்கப்படவுள்ளது.
திருவாரூரில் இரண்டு புதிய தொழிற்பூங்காக்கள்: திருவாரூர் மாவட்டத்தில், கூத்தனூர் மற்றும் மன்னார்குடி ஆகிய இடங்களில் தலா 150 ஏக்கர் பரப்பளவில் இரண்டு புதிய தொழிற்பூங்காக்கள் அமைக்கப்படவுள்ளன.
இந்த 5 சிப்காட் தொழிற்துறை பூங்காவும் மத்திய தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியைக் குறிவைத்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது உடனடியாக பலன் அளிக்காவிட்டாலும், நீண்ட கால அடிப்படையில் பெரிய அளவிலான லாபத்தைக் கொடுக்கும்.
இதை தொடர்ந்து நாகப்பட்டினத்திற்கும் புதிய சிப்காட் வேண்டும் என கோரிக்கை எழுத்துள்ளது, நாகப்பட்டினத்தில் மீன் பதப்படுத்தும் தொழில்களுக்காக ஒரு சிப்காட் அமைக்கப்படலாம். குளிர் சேமிப்பு (Cold Storage) வசதிகளை உருவாக்குவதையும் மாநில அரசு பரிசீலிக்கலாம் என்று பரிந்துரை வைக்கப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications