தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மாநிலத்தின் உற்பத்தித் துறையை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லவும், புதிய முதலீடுகளை ஈர்த்து மாநிலத்தில் அதிகப்படியான வேலைவாய்ப்புகள் உருவாக்க வேண்டும் என்ற முக்கிய திட்டத்துடன் 1 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை நோக்கி ஓடிக்கொண்டு இருக்கும் வேளையில் முக்கியமான உற்பத்தி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
நவம்பர் 15 ஆம் தேதி, அரியலூர் மாவட்டத்தில் தைவான் தலைமையிடமாகக் கொண்ட காலணி உற்பத்தி நிறுவனமான டீன் ஷூஸ் (ஃப்ரீ ட்ரெண்ட்) நிறுவனத்தின் ரூ.1,000 கோடி மதிப்பிலான புதிய தொழிற்சாலையின் அடிக்கல் நாட்டு விழாவை தொடங்கி வைக்க உள்ளார்.

இந்த கணிசமான முதலீடு, அரியலூர் பகுதியில் சுமார் 15,000 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய தொழிற்சாலையின் மூலம், உற்பத்தித் துறையில் வெளிநாட்டு நேரடி முதலீட்டிற்கான விருப்பமான இடமாக தமிழ்நாடு வளர்ந்து வருவதை காட்டுகிறது.
தமிழ்நாட்டில் ஏற்கனவே உலகின் பல முன்னணி காலணி தயாரிப்பு நிறுவனங்கள் தனது பெரும் தொழிற்சாலையை அமைத்திருக்கும் வேளையில் இந்த டீன் ஷூஸ் (ஃப்ரீ ட்ரெண்ட்) நிறுவனத்தின் ரூ.1,000 கோடி மதிப்பிலான புதிய தொழிற்சாலை இத்துறைக்கு புதிய வேகத்தை கொடுக்கும்.
இந்திய காலணி தயாரிப்பிலும், ஏற்றுமதியிலும் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கும் வேளையில், ஒவ்வொரு புதிய முதலீடும் இத்துறையை மேலும் பெரிய அளவில் வலிமை சேர்க்கும். இந்த புதிய தொழிற்சாலையானது, அரியலூர் மாவட்டத்தில் அமைக்கப்பட உள்ள நிலையில் இந்த மாவட்டம் தொழில்துறையில் முக்கிய இடத்தைப் பிடிக்கத் தயாராகி வருகிறது.
டீன் ஷூஸ் (ஃப்ரீ ட்ரெண்ட்) நிறுவனம், தனது புதிய தொழிற்சாலையில், உயர்தர காலணிகளை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த தொழிற்சாலை, நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, உலகத்தரம் வாய்ந்த காலணிகளை தயாரிக்கும். இதன் மூலம், தமிழ்நாட்டின் காலணித் தொழில் மேலும் வளர்ச்சியடையும்.


Click it and Unblock the Notifications