சென்னை: தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 2030க்குள் 1 டிரில்லியன் டாலர் அளவுக்கு உயர்த்த வேண்டும் என்ற முக்கியமான இலக்கை நோக்கி ஓடிக்கொண்டு இருக்கும் முக.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு, முதல்வரின் அமெரிக்கப் பயணத்தில் 3 செமிகண்டக்டர் நிறுவனத்தை அள்ளிட்டு வந்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
தமிழ்நாடு அரசு, அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட மூன்று முன்னணி செமிகண்டக்டர் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம், தமிழ்நாட்டில் செமிகண்டக்டர் உற்பத்தி மற்றும் தொழில்நுட்பத் துறையில் பெரும் முதலீடுகளை ஈர்க்கும்.

Yield Engineering Systems நிறுவனம்: இந்த அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட செமிகண்டக்டர் உற்பத்தி நிறுவனம், கோயம்புத்தூர் சூலூர் பகுதியில் செமிகண்டக்டர் உபகரணங்களுக்கான ப்ராடெக்ட் டெவலப்மென்ட் மற்றும் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. இந்த திட்டம் ரூ. 150 கோடி செலவில் அமைக்கப்பட்டு, சுமார் 300 வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.
Microchip நிறுவனம்: இந்த அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட செமிகண்டக்டர் நிறுவனம், சென்னை செம்மஞ்சேரியில் செமிகண்டக்டர் தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை அமைக்கத் தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. இந்த திட்டம் ரூ. 250 கோடி செலவில் அமைக்கப்பட்டு 1,500 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.
Applied Materials நிறுவனம்: இந்த அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட செமிகண்டக்டர் உற்பத்தி நிறுவனம், தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டு, சென்னையில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் இயங்கும் அட்வான்ஸ் டெக்னாலஜி டெவலப்மென்ட் சென்டரை (CoE) அமைக்க உள்ளது. இந்த திட்டம் 500க்கும் மேற்பட்ட உயர் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், தமிழ்நாட்டின் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சிக்கு ஒரு முக்கிய படியாக அமையும். இது மேலும் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் மற்றும் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும். இந்த ஒப்பந்தங்கள், தமிழ்நாட்டை இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப மையங்களில் ஒன்றாக மாற்றும்.
செமிகண்டக்டர் துறையில் நேரடியாக OSAT பிரிவிலோ அல்லது ஃபேரிகேஷன் பிரிவிலோ தமிழ்நாடு அரசால் புதிய முதலீடுகளை ஈர்க்க முடியாத நிலையில், இத்துறையை சார்ந்த பிற வர்த்தகம், சேவைத் துறை நிறுவனங்களை ஈர்க்க திட்டமிட்டு தற்போது அமெரிக்காவில் இருந்து Yield Engineering Systems, Applied Materials, Microchip ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.


Click it and Unblock the Notifications