சென்னை: மொபைல் சேவை நிறுவனங்கள், மொபைல் ரீச்சார்ஜ் திட்டங்களை மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு உயர்த்த உள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி மொபைல் ஃபோன் பயனர்கள் தங்கள் பில்களைச் செலுத்தும்போது சுமார் 25 சதவீத அதிகரிப்பு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
பல மொபைல் சேவை வழங்குனர்களும் 5ஜி திட்டத்தை மேம்படுத்துவதற்காக, அதிக அளவில் முதலீடுகளை செய்து வருகின்றனர். இந்நிலையில், தேர்தலுக்குப் பிறகு 25 சதவீத ரீசார்ஜ் கட்டணம் உயரலாம் என ஆக்சிஸ் கேபிட்டலின் அறிக்கை தெரிவித்துள்ளது.

தொடர்ந்து 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இது 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை நடக்க உள்ளது. அதன் பிறகு ரீசார்ஜ் கட்டணம் உயரலாம் எனக் கூறப்படுகிறது.
ரீசார்ஜ் கட்டண உயர்வு, பார்ப்பதற்கு பெரிய அளவில் தோன்றினாலும் நகர்ப்புற மற்றும் கிராமப்புற பயனர்களுக்கு நிர்வகிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். தற்போது அனைவரின் கையிலும் மொபைல் போன்கள் இருக்கின்றன. அதிலும் சிலர் தங்களுடைய பாதி நேரங்களை சோசியல் மீடியா தளங்களில் கழிக்கின்றனர். இதற்காக கண்டிப்பாக மாதத்திற்கு ஒருமுறை ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவசியம் உருவாகிறது.
இந்த விலை ஏற்றத்தின் மூலம் நகரங்களில் உள்ளவர்களுக்கு தொலைத்தொடர்பு சேவைகளுக்காக செலவிடப்படும் தொகை, கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கு 3.2 சதவீதத்தில் இருந்து 3.6 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் உள்ளவர்களுக்கு 5.2 சதவீதத்திலிருந்து 5.9 சதவீதமாக உயர வாய்ப்புள்ளதாக அறிக்கை கூறுகிறது.
25 சதவீத கட்டண உயர்வை, டெலிகாம் சேவை நிறுவனங்கள் அமல்படுத்தினால் ARPU என்று சொல்லப்படுகிற ஒரு வாடிக்கையாளர் மூலம் கிடைக்கும் சராசரி வருமானத்தின் அளவு 16 சதவீதம் உயரும். மேலும், ஏர்டெல் ஒரு வாடிக்கையாளருக்கு ரூ. 29 ரூபாயும் மற்றும் ஜியோவிற்கு ரூ. 26 ரூபாயும் வருமானமாகக் கிடைக்க வாய்ப்புள்ளதாக ஆக்சிஸ் கேப்பிடல் மதிப்பிட்டுள்ளது.
இந்த ஆண்டின் இறுதிக்குள் ARPU விகிதம், டெலிகாம் சேவை நிறுவனங்களுக்கு 10 சதவீதம் முதல் 15 சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதன் மூலம் ஒரு வாடிக்கையாளருக்கு ரூ. 100 வரை வருமானம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. 4G/5G பேக்குகளின் விலை அதிகரிக்கும் என்றும், சில குறைந்த மதிப்புள்ள பேக்குகளை படிப்படியாக நீக்கப்படக்கூடும் என்றும் டெலாய்ட் TMT இண்டஸ்ட்ரியல் லீடர் பீயுஷ் வைஷ் கூறியுள்ளார். மேலும், அதி வேக இன்டர்நெட்டைப் பெற விரும்பும் அனைத்து வாடிக்கையாளர்களும், தொலைத் தொடர்பு சேவைகளுக்கு பணம் செலுத்தத் தயாராக உள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.
ரீசார்ஜ் பேக் விலை உயர்வு ஏற்பட்டால், பாரதி ஏர்டெல் மற்றும் ஜியோ மிகப்பெரிய பயனாளிகளாக இருக்கும் என ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.


Click it and Unblock the Notifications