டெல்லி: மத்திய பட்ஜெட்டில் புதிய வருமான வரி அடுக்கு குறித்த அறிவிப்பு வெளியாகக் கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. வழக்கமாக மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் போதெல்லாம் சாமானிய மக்களின் எதிர்பார்ப்பாக இருப்பது வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இருக்குமா என்பதுதான்.
தற்போது மத்திய நிதி அமைச்சராக மீண்டும் பொறுப்பேற்று இருக்கக்கூடிய நிர்மலா சீதாராமன் 2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான முழு நீள பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார்.

இந்த முறை மோடி 3.0 அரசு , வருமான வரி அடுக்கில் மாற்றங்களை அறிவிக்கும் வாய்ப்புள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே மத்திய அரசு வருமான வரி அடுக்குகளில் மாற்றங்களை கொண்டு வருமா என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தற்போது புதிய வருமான வரி முறை பயன்பாட்டுக்கு வந்திருப்பதால் அதில் புதிதாக வருமான வரி அடுக்குகளை அறிவிப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக மத்திய அரசு வருமான வரி விகிதங்களை குறைக்கலாம் என்றும் ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் முதல் 15 லட்சம் ரூபாய் வரை சம்பாதிப்பவர்களுக்கு வரி விகிதம் குறைக்கப்படும் அல்லது வரி அடுக்கில் மாற்றம் கொண்டு வரப்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது. சம்பளம் பெறும் தனிநபர்கள் இந்த புதிய அறிவிப்பின் மூலம் பலனடைவார்கள் என்றும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் முறைகளை எளிமைப்படுத்துவது தொடர்பான அறிவிப்புகளும் இந்த பட்ஜெட்டில் இடம் பெற கூடும் என தெரிகிறது. இது தொடர்பான ஆலோசனைகள் ஆரம்பக்கட்ட நிலையில் இருப்பதாகவும் பிரதமர் அலுவலகத்தில் தான் இது தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிகிறது.
எனவே வருகின்ற மத்திய பட்ஜெட்டில் மிடில் கிளாஸ் மக்களும் குறிப்பாக ஊதியம் பெறக்கூடிய வருமான வரி செலுத்தும் தனி நபர்களும் மகிழ்ச்சி அடையக் கூடிய செய்தி வரலாம் என சொல்லப்படுகிறது.
முன்னதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மாநில அமைச்சர்கள் மற்றும் தொழில்துறையினருடன் பட்ஜெட்டிற்கு முந்தைய ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். அப்போது எம்எஸ்எம்ஈ துறைகளை ஊக்குவிக்கும் வகையில் அறிவிப்புகள் வெளியாக வேண்டும் என தொழில்துறை நிபுணர்கள் கேட்டுக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருந்ததை அடுத்து கடந்த பிப்ரவரி மாதம் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டையே தாக்கல் செய்தார். தற்போது தேர்தல் முடிந்து முடிவுகள் வெளியாகி மீண்டும் மோடி அரசு பொறுப்பேற்று இருக்கும் நிலையில் முழு நீள பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்ய இருக்கிறார்.
இதில் என்னென்ன அறிவிப்புகள் வெளியாகக் கூடும் என மக்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கூட்டணி தயவுடன் பாஜக ஆட்சி அமைத்துள்ளதால் சில மக்கள் நலன் சார்ந்த அறிவிப்புகள் வெளியாகக் கூடும் என சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications