டெல்லி: மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மூன்றாவது முறையாக பொறுப்பேற்று மூன்று மாதங்கள் ஆகியுள்ளன. இதுவரையில் மத்திய அரசு 3.31 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களை அறிவித்துள்ளது. கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களுடன் ஒப்பிடுகையில் ஜூலை மாதத்தில் மட்டும் அரசின் மூலதன செலவினம் கிட்டத்தட்ட 2 மடங்கு அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது.
மத்திய அரசு எக்ஸ்பிரஸ்வே மற்றும் கிராமப்புற பகுதிகளில் சாலைகளை அமைக்கும் திட்டங்களை வேகப்படுத்தியுள்ளது. ஆனால் இதில் நெடுஞ்சாலைகள் மற்றும் ரயில்வே போக்குவரத்து தொடர்பான திட்டங்களில் தனியார் பங்களிப்பு என்பது குறைவாக இருப்பதாக கூறும் ஆய்வாளர்கள், அரசு இந்த துறையில் தனியார் பங்களிப்பை ஊக்குவித்து அவற்றை விரைவுப்படுத்த வேண்டும் என கோருகின்றனர்.

பொதுவாகவே ஒரு ஆண்டில் இரண்டாவது காலாண்டில் பருவமழை காரணமாக பல்வேறு கட்டுமான பணிகள் தடைப்படும் மூன்றாவது காலாண்டில் இருந்து தான் உள்கட்டமைப்பு சம்பந்தப்பட்ட மற்றும் கட்டுமான பணிகள் வேகம் எடுக்கும் எனக் கூறும் நிபுணர்கள் அரசு தனியார் பங்களிப்பையும் ஊக்குவிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
மத்திய அரசு உள்கட்டமைப்பு திட்டங்களில் கவனம் செலுத்துவதால் சாலை ,ரயில்வே, விமான நிலையம் ,மெட்ரோ ரயில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பெருமளவில் பலன் அடையும் என சொல்லப்படுகிறது. நடப்பாண்டில் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் மத்திய அமைச்சரவை எட்டு தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு ஒப்புதல் தெரிவித்துள்ளது.
இவற்றின் மொத்த மதிப்பு 50 ,655 கோடி இதன் மூலம் 936 கிலோ மீட்டர் நீளத்திற்கு நெடுஞ்சாலைகள் கட்டமைக்கப்பட உள்ளன. அடுத்த கட்டமாக 90,000 கோடி மதிப்பிலான சாலை திட்ட பணிகளுக்கு அனுமதி அளிக்க உள்ளதாகவும் வரும் டிசம்பர் மாதத்தில் இந்தியாவில் சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நெடுஞ்சாலை திட்டங்கள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
மத்திய அரசினை பொருத்தவரை இந்தியாவில் 50,000 கிலோமீட்டர் தொலைவிற்கு எக்ஸ்பிரஸ்வே அமைக்கப்பட வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. தற்போது 4000 கிலோ மீட்டர் எக்ஸ்பிரஸ்வே பயன்பாட்டில் இருக்கிறது 6000 கிலோமீட்டர் எக்ஸ்பிரஸ்வே கட்டமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சரக்கு போக்குவரத்துகளை மேம்படுத்துவதற்காகவே அரசு நெடுஞ்சாலை திட்டங்களில் கவனம் செலுத்தி வருகிறது. ரயில்வே துறையினை பொறுத்தவரை தற்போது 30,766 கோடி ரூபாய் மதிப்பிலான நான்கு மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு அரசு அனுமதி தந்துள்ளது. அதேபோல 11 ரயில் திட்டங்களுக்கு கூடிய விரைவில் அனுமதி அளிக்க உள்ளது.
துறைமுகம் சார்ந்த திட்டங்களிலும் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. கடந்த ஜூன் மாதம் மகாராஷ்ட்ரா மாநிலம் வதவானில் 76,220 கோடி மதிப்பீட்டில் மிகப்பெரிய துறைமுகம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்தது.
விமான போக்குவரத்து துறையில், வாரணாசியில் 2870 கோடி செலவில் விமான நிலையம், 2969 கோடி செலவில் பாட்னா விமானநிலையத்தில் புதிய முனையம் ஆகியவற்றை கட்டமைக்க அரசு அனுமதி அளித்துள்ளது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications