பரபரப்பான தேர்தல் முடிவுகள் அரசியல் கட்சியின் ஆதிக்க நிலையை தலைகீழாக மாற்றியுள்ளது, பிஜேபி 400 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மை உடன் ஆட்சி படிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது கூட்டணியில் கடைசி நேரம் வரையில் திக் திக் மொமண்ட் உடன் ஆட்சியை அமைத்தது.
மோடி 3.0 என்பதைக் காட்டிலும், இந்த கூட்டணி ஆட்சியை NDA 3.0 என்று அழைப்பது சரியாக இருக்கும் என கருத்து நிலவும் வேளையில் புதிய அரசு செய்ய வேண்டிய முக்கியமான விஷயங்களைப் பொருளாதார நிபுணர்கள் லிஸ்ட் போட்டு உள்ளனர்.

புதிய அரசு இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி வேகத்தைத் தக்கவைத்துக்கொள்ள, அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க, நிதி நிலைத்தன்மையைப் பாதுகாக்க, வரி விதிப்பில் மாற்றம் கொண்டு வர, பங்கு மற்றும் கடன் சந்தையின் ரிஸ்க் மேனேஜ்மென்ட் கட்டமைப்பை மேம்படுத்தப் பல சீர்திருத்தங்கள் தேவை என்று பொருளாதார நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பொருளாதார நிபுணர்கள், நாட்டின் வளர்ச்சியை வலுப்படுத்த நிலம், தொழிலாளர் மற்றும் மூலதனம் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். மேலும் கடனை சுமையைக் குறைக்க நிதி நிலையை வலுப்படுத்த வேண்டும், தனியார் முதலீட்டை ஈர்க்க நீண்ட காலத்திற்கு அரசின் மூலதன செலவிடுகளை (capex) அதிகரிக்க வேண்டும், மேலும் விவசாய துறையைக் கூடுதல் லாபகரமாக மாற்றுவதற்கு விவசாய சார்ந்த வர்த்தகத்தில் நுகர்வோர் சார்பு கொள்கையை நீக்க வேண்டும் எனப் பெரிய லிஸ்ட் போட்டு உள்ளனர்.
பொருளாதார வளர்ச்சி: தேசிய புள்ளியியல் ஆணையத்தின் முன்னாள் தலைவர் ப்ரணாப் சென் கூறுகையில், "புதிய அரசின் முதல் முன்னுரிமை வாழ்வாதாரமாக இருக்க வேண்டும். அதிக பொருளாதார வளர்ச்சிக்கான முயற்சிகள் வரவேற்கத்தக்கவை, ஆனால் இந்த வளர்ச்சி போதுமான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதையும், மிகப்பெரிய எண்ணிக்கையிலான மக்களுக்கு நிலையான வருமானத்தை அளிப்பதை உறுதி செய்ய வேண்டும்" என்றார்.
வேலைவாய்ப்பு: இந்தியாவில் எளிதான மற்றும் மிதமான சீர்திருத்தங்கள் மூலம் சுமார் மூன்றில் ஒரு பங்கு வேலைகளை உருவாக்க முடியும். ஆனால் மூன்றில் இரண்டு பங்கு வேலைவாய்ப்புகளைக் கடினமான மற்றும் அரசியல் ரீதியாக உணர்ச்சிப்பூர்வமான சீர்திருத்தங்கள் கொண்டு தான் உருவாக்க முடியும். இதில் வேளாண்மை, தொழிலாளர் மற்றும் நில சீர்திருத்தங்கள் ஆகியவை அடங்கும் என்று HSBC நிறுவனத்தின் தலைமை பொருளாதார நிபுணர் பிரஞ்சுல் பண்டாரி கூறினார்.
இந்த கடினமான சீர்திருத்தங்கள் நடுத்தர மற்றும் நீண்ட காலத்திற்கு நாட்டின் பொருளாதார வளர்ச்சி திறனை 7.5-8% ஆக உயர்த்தும் என்றும் பிரஞ்சுல் பண்டாரி கூறினார்.
பெடிரோல் - டீசல்: பொருளாதார வல்லுனர்களால் பரிந்துரைக்கப்பட்ட பிற முக்கிய சீர்திருத்த நடவடிக்கைகளில் முக்கியமான ஓன்று, நீண்ட காலமாகப் பேச்சுவார்த்தையில் மட்டுமே இருக்கும் பெட்ரோலியம் மற்றும் மின்சாரத்தை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வருவது, இது இந்த NDA 3.0-வில் நடக்க வேண்டும். இதன் மூலம் அடுத்த சுற்று மறைமுக வரி சீர்திருத்தங்களின் அவசியத்தை முன் வைத்துள்ளனர்.
ஏற்றுமதி, வரிவிதிப்பு: சில பொருளாதார வல்லுநர்கள் உள்நாட்டு மதிப்பு கூட்டலை உயர்த்தவும், ஏற்றுமதி போட்டித்தன்மையை மேம்படுத்தவும் மற்றும் உலகளாவிய மதிப்பு சங்கிலியை உயர்த்தவும் புதிய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்காக, அரசாங்கம் உள்கட்டமைப்பு உருவாக்கத்தின் வேகத்தைத் தொடர வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
இதர முக்கிய சீர்திருத்தம்: அதிக தனியார்மயமாக்கல் மற்றும் அரசு சொத்து பணமாக்குதல் முயற்சி, விவசாய துறைக்கு அதிக முக்கியதுவம் செலுத்தும் வகையில் மத்திய-மாநில ஒருங்கிணைப்பில் தனி ஜிஎஸ்டி கவுன்சில் போன்ற அமைப்புகள் பல்வேறு நிதி தாமதம், சட்ட தாமதம் களையப்படும் என தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications