தமிழ்நாடு முழுவதுமே பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்கள் களைக்கட்ட தொடங்கி இருக்கின்றன. போகி பண்டிகை இன்று தொடங்கி இருக்கிறது , நாளைய தினம் மக்கள் பொங்கல் வைத்து சூரிய பகவானை வழிபட இருக்கிறார்கள். பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக ஏராளமான மக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு பயணம் செய்திருக்கிறார்கள்.
தமிழ்நாட்டு மக்கள் குடும்பத்தினரோடு உற்சாகமாக கொண்டாடும் ஒரு பண்டிகையாக பொங்கல் பண்டிகை இருந்து வருகிறது. மத்திய இணை அமைச்சர் எல் முருகன் டெல்லியில் மிகச் சிறப்பாக பொங்கல் பண்டிகையை கொண்டாடினார். மத்திய தகவல் ஒலிபரப்பு துறை இணை அமைச்சராக இருப்பவர் தமிழகத்தை சேர்ந்த எல். முருகன். ஆண்டுதோறும் டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் பாரம்பரியம் மாறாமல் பொங்கல் விழாவை கொண்டாடி வருகிறார்.

அந்த வகையில் இந்த ஆண்டு ஒரே பாரதம் உன்னத பாரதம் என்று கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு தன்னுடைய இல்லத்தில் பொங்கல் விழாவை கொண்டாடினார். அமைச்சர் எல். முருகன் இல்லமே இதற்காக தோரணங்கள் கட்டப்பட்டு சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
இந்த பொங்கல் விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இந்த விழாவில் பிரபலங்கள், அரசியல் கட்சியினர், திரையுலகினர் என பலரும் பங்கேற்றனர். தமிழகத்தை சேர்ந்த பாரதி ஜனதா கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமே பராசக்தி படக் குழுவினரும் பொங்கல் விழாவில் கலந்து கொண்டது தான். இந்தி திணிப்புக்கு எதிரான நிகழ்வை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம் தான் பராசக்தி. பொங்கலை முன்னிட்டு இந்த படம் திரைக்கு வந்துள்ளது. இந்நிலையில் பராசக்தி பட நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன் ஆகியோரும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷும் பிரதமர் மோடியுடன் இந்த விழாவில் பங்கேற்றனர்.
இந்த விழாவில் ஒரு பகுதியாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. முன்னதாக இந்த பொங்கல் விழாவில் பங்கேற்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி தமிழர்கள் வாழ்வில் விவசாயிகளின் மகத்துவத்தையும் வேளாண்மையை போற்றுவதையும் வெளிப்படுத்தும் சிறப்பானது பொங்கல் பண்டிகை எனக் கூறினார். பொங்கல் பண்டிகையை சர்வதேச திருவிழாவாக கொண்டாடுவது அளவில்லாத மகிழ்ச்சியை அளிக்கிறது என்றும் தமிழ் மக்களுடன் பொங்கலை கொண்டாடுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்றும் தெரிவித்தார். வாழ்க தமிழ் வளர்க பாரதம் எனக் கூறி மோடி உரையை நிறைவு செய்தார்.
தமிழர்களுக்கும் விவசாயிகளுக்கும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆழமான தொடர்பை வெளிப்படுத்தும் திருக்குறள் இருந்துள்ளது என அப்போது பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார். முன்னதாக இந்த பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக சிலம்பாட்டம், கரகாட்டம், தப்பாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.


Click it and Unblock the Notifications