5 நாட்கள் பயணமாக வெளிநாடுகளுக்கு சென்றுள்ள பிரதமர் மோடி இத்தாலி நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கே இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியை மோடி சந்தித்து பேசியதும், அவருக்கு அன்பு பரிசு அளித்ததும் தான் உலகம் முழுவதுமே பேசு பொருளாக மாறியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே ஆகிய நாடுகளுக்கு அரச முறை பயணமாக சென்ற மோடி, தன்னுடைய ஐந்தாவது மற்றும் இறுதி நாள் சுற்றுப்பயணமாக இன்று இத்தாலிக்கு சென்றார். இத்தாலி தலைநகர் ரோமில் பிரதமர் ஜார்ஜியா மெலோனியை பிரதமர் மோடி நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்த மோடி ரோமில் தரை இறங்கியதும் பிரதமர் மெலோனியை இரவு உணவுக்காக சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது என பதிவு செய்திருக்கிறார்.

அதை தொடர்ந்து வரலாற்று சிறப்புமிக்க குரோஷியம் தளத்திற்கு சென்றோம் எனக் கூறியிருக்கிறார். பல்வேறு விவகாரங்களில் இந்தியா இத்தாலி நட்புறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக இருவரும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டோம் என தெரிவித்திருந்தார். இதனிடையே மோடியுடன் எடுத்த படத்தை பகிர்ந்துள்ள மெலோனி ரோமிற்கு உங்களை வரவேற்கிறோம் நண்பரே என குறிப்பிட்டு இருந்தார்
இந்த சந்திப்பின் போது மோடி , மெலோனிக்கு ஆச்சரியமான ஒரு பரிசினை வழங்கியிருந்தார். இந்த பரிசை பார்த்த மெலோனி அந்த பரிசு பெற்ற தருணத்தை வீடியோவாக பதிவு செய்து தன்னுடைய எக்ஸ் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் இருந்து கிளம்பும்போது ஒரு பாக்கெட் மெலோடி சாக்லேட் வாங்கி சென்றிருக்கிறார். அதனை மெலோனிக்கு பரிசாக கொடுத்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். இது அந்த வீடியோவில் பதிவாகி இருக்கிறது.
இத்தாலி பிரதமர் மெலோனி அதில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஒரு பரிசை வாங்கி வந்துள்ளார் அது மிகவும் ருசியான சாக்லேட் 'மெலோடி' சாக்லேட் என கூறி புன்னகை செய்கிறார். அப்போது அந்த சாக்லேட் பாக்கெட்டை பிரதமர் மோடி வீடியோவில் காட்டுகிறார். இருவரும் இணைந்து மெலோடி எனக் கூறி சிரிக்கிறார்கள்.
ஏற்கனவே மோடி மெலோனி பெயர்களை சேர்த்தால் மெலோடி என வரும் என முந்தைய சந்திப்புகளின் போது இரு தலைவர்களும் கூறி இருக்கிறார்கள். தற்போது பிரதமர் மோடி மெலோனிக்கு மெலோடி சாக்லேட் பரிசாக கொடுத்திருப்பது வைரலாகி வருகிறது.இந்த வீடியோ தான் உலகம் முழுவதும் வைரலாகி இருக்கிறது.
மெலோடி என்பது பார்லே நிறுவன தயாரிப்பு. இதற்கிடையே இந்த வீடியோ வெளியான உடனே பார்லே இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு இந்திய பங்குச் சந்தையில் வேகமாக உயர்ந்து அப்பர் சர்க்யூட் நிலைக்கு சென்றது. பல்வேறு சில்லறை முதலீட்டாளர்களும் மும்பை பங்கு சந்தையில் பார்லே இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகளை முந்தி கொண்டு வாங்கினர்.
ஆனால் இது மெலோடி சாக்லெட்டை தயாரிக்கும் பார்லே அல்ல, அது பார்லே பிராடெக்ட்ஸ், பார்லே இண்டர்ஸ்ட்ரீஸ் என்பது ஒரு உள்கட்டமைப்பு மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஆகும். இதற்கும் மெலோடி சாக்லெட்டுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை.


Click it and Unblock the Notifications

